Tuesday, September 29

மாமன்னன் — திரைப்பட விமர்சனம்

Loading

 

மாமன்னன் –திரைப்பட விமர்சனம்

சமூகப் பிரச்னை உள்ள படைப்பாளியாக ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட மாரி செல்வராஜ், அடுத்து இயக்கிய ‘கர்ணன்’ படத்தில் தனது அரசியலை அழுத்தமாகப் பதிவு செய்தார்.

தற்போது வெளியாகி இருக்கும் ‘மாமன்னன்’ படத்திலும் தனது முத்திரையைப் பதித்து மூன்றாவது படத்தையும் முத்தான படைப்பாக தந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.

நகைச்சுவையில் ‘மன்னாதி மன்னன்’ ஆன வடிவேலுவை குணச்சித்ர ‘மாமன்னன்’ஆக்கிய துணிச்சலுக்காகவே முதலில் மாரி செல்வராஜுக்கு நமது பாராட்டுகளைத் தெரிவித்து விடலாம்.

பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் வடிவேலு. அவரது மகன் உதயநிதி. சிறுவயதில் தனது நண்பர்களுடன் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது பன்றி மேய்க்கும் சிறுவர்கள் குளத்தில் குளிப்பதா என்று கோபமடைந்த சில மேல் ஜாதிக்கார்கள் அவர்களை கல்லால் அடிக்கிறார்கள். நண்பர்கள் மூவர் இறந்துவிட, குற்றுயிரும் கொலையுருமாக சிறுவன் உதயநிதி தப்பிப் பிழைக்கிறார். குற்றவாளிகளுக்கு தன் தந்தை சரியான தண்டனை வாங்கித் தரத் தவறிவிட்டார் என்ற காரணத்தினால் தந்தையுடன் பேசுவதே இல்லை உதயநிதி.

இவர்கள் வசிக்கும் பகுதி பின்னர் ரிசர்வ் தொகுதியாக மாற்றம் பெறவே, அதில் போட்டியிட்ட வடிவேலு எம்எல்ஏவாகவும் ஆகிவிட்டார்.

பிரச்னை ஒன்றைப் பேசித் தீர்க்க வடிவேலுவையும் உதயநிதியையும் தன் வீட்டுக்கு வரவழைக்கும் கட்சியின் மாவட்ட செயலாளர் பகத் பாசில் உதயநிதியை மட்டும் அமரச் சொல்கிறார். எம்எல்ஏவாக இருந்தாலும் வடிவேலுவை அமர விடாமல், நிற்க வைத்தே பேசி அவமானப்படுத்துகிறார்.

பல ஆண்டுகளாக தன் தந்தையுடன் பேசாமல் இருந்த உதயநிதி இப்போதுதான் முதல் முறையாக தந்தையுடன் பேசுகிறார்.

தன் தந்தையை அங்கிருந்த ஒற்றை இருக்கையில் அமரச் சொல்ல, “உன் அப்பா எங்கள் முன் உட்கார மாட்டார்… காலம் காலமாக இப்படித்தான் நடக்கிறது…” என்று ஆணவத்துடன்  சொல்கிறார் பகத் பாசில்.

இந்த வாக்கு வாதம் கைகலப்பாக மாறுகிறது.

வெகுண்டு எழுந்த உதயநிதி அப்பாவை அவமானப்படுத்தியவர்களை அடித்து துவம்சம் செய்கிறார்.

இதற்குப் பிறகு கதையில் சூடு பிடித்து பரபரக் காட்சிகள் அரங்கேறி படம் விறுவிறுப்பாகச் செல்கிறது.

இறுதியில் ஆதிக்க சக்தியுடன் நடந்த போரில் எவ்வாறு உதயநிதி ஜெயித்தார் என்பதுதான் ‘மாமன்னன்’.

கோபத்தை ஆக்ரோஷமாக வெளிப்படுத்தும் காட்சிகளில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ஜொலிக்கிறார்.

ஆதிக்க சக்திகளின் பிரதிநிதியாக வரும் பகத் பாஸில் தன் உடல் மொழியிலே அதிகாரத் திமிரை திறம்பட வெளிப்படுத்தி கைதட்டல் பெறுகிறார்.

கீர்த்தி சுரேஷுக்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.

முதல்வர் அலுவலகத்தில் பகத் பாசிலை எதிர்கொள்ளும் உதயநிதி, அவரை அடித்து துவம்சம் செய்ய நினைப்பதை  கட்டுப்படுத்திக் கொள்ளும் ‘பிளாஷ் கட்’ காட்சி ரசிக்க வைக்கிறது.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான். அவரது பின்னணி இசை படத்துக்கே உயிர் கொடுக்கிறது என்றால் மிகையில்லை.

கண் கவர் காட்சிகளால் வர்ணஜாலம் செய்யும் gimmicks எதுவும் இன்றி கதை களத்திற்கு ஏற்ப ஒளிப்பதிவு செய்து படத்தின் moodஐ பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கும் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பாராட்டுக்குரியவர்.

படத்தை சற்றும் தொய்வின்றி காட்சிகளை தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் செல்வா ஆர் கே.

“உன் அப்பாவை உட்கார வைக்காமல் இருப்பது எனது அதிகாரம்… உன்னை உட்கார சொல்வது எனது அரசியல்…” என்று பகத் பாசில் உதயநிதியிடம் சொல்லும் போது வசனகர்த்தா மாரி செல்வராஜ் பளிச்சிடுகிறார்.

படத்தின் இறுதி காட்சி சிறப்பு. தேர்தலில் வென்று எம்எல்ஏ ஆன வடிவேலுவுக்கு முதலமைச்சர் கொடுத்திருக்கும் பொறுப்பு அபாரம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்…” என்று துவங்கும் திருக்குறளுக்கு திரைமொழியில் அற்புதமான உரை எழுதியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கண்டிப்பாக எல்லோரும் கண்டு மகிழத்தக்க நல்லதொரு திரைப்படம் மாமன்னன்.

மதிப்பெண் 4.5/5