Thursday, December 18

மாண்புமிகு பறை _ விமர்சனம்

Loading

மாண்புமிகு பறை_ விமர்சனம்

நண்பர்களான லியோ சிவகுமார் மற்றும் ஆர்யன் இருவரும் ஆதி பறை இசைக் குழு என்ற பெயரில் பறை இசைக் குழு ஒன்றை நடத்தி வருகின்றனர்.

பறை வாசிப்பதை வெறும் தொழிலாக மட்டும் செய்யாமல் ஆத்மார்ந்தமாக அதைச் செய்யும் இவர்கள், ஆர்வம் உள்ளவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.

எவ்வளவு பணம் கிடைத்தாலும் இறந்தவர் வீட்டிலும்,ஈமக் கிரியை நடக்கும்போதும் பறை இசை வாசிக்கச் செல்லக் கூடாது என்பதை கொள்கையாக வைத்திருக்கும் இவர்கள் மீது ஆதிக்க சக்திகள் கடும் கோபத்தில் இருக்கின்றன.

பக்கத்து ஊரில் ஒரு விழாவுக்கு வாசிக்கச் செல்லும்போது, குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முற்பட்டவர்களை தட்டிக் கேட்டதால், ஆர்யன் கொல்லப்படுகிறார்.

ஆதிக்க ஜாதியை சேர்ந்த காயத்ரி ரெமோ காதலித்து திருமணம் செய்து கொண்ட லியோ சிவகுமாரும் ஒரு கட்டத்தில் கொலை செய்யப்படுகிறார்.

பறை இசைக் கலையை வளர்த்தெடுக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்த கணவர் விட்டுச் சென்ற பணியை தொடர முற்படுகிறார் காயத்ரி ரெமோ.

பறை இசை கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து முழு நீள திரைப்படமாக முடிவு செய்த இயக்குனர் எஸ்.விஜய் சுகுமார் அதற்கேற்ற வலுவான கதையையோ காட்சி அமைப்புகளையோ உருவாக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.

சுபா சுரேஷ் ராம் எழுதிய கதையே மிகவும் பலவீனமாக இருப்பதால், அதன்மீது கட்டமைக்கப்பட்ட திரைப்படம், ஆழமாக இல்லாத அஸ்திவாரத்தின் மேல் எழுப்பப்பட்ட கட்டிடமாக  நிற்கிறது.

படத்தின் துவக்கத்தில் வரும் பின்னணி குரலில் பறை இசைக்கருவி எவ்வாறு உருவானது என்று விளக்கி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

நண்பர்களாக வரும் லியோ சிவகுமாரும் ஆர்யனும் போட்டி போட்டுக் கொண்டு சிறப்பாக நடித்திருக்கின்றனர்.

கதாநாயகியாக வரும் காயத்ரி ரெமோவும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாகவே செய்திருக்கிறார்.

எளிய மனிதர்களின் வாழ்வியலை இயல்பாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.

தேவாவின் இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம்தான்.

இயக்குனர் எஸ் விஜய் சுகுமார் இன்னும் சற்று மெனக்கெட்டிருந்தால் மாண்புமிகு பறை படத்தை தரமான படமாகவே கொடுத்திருக்க முடியும்.
என்ன காரணத்தாலோ தவற விட்டு விட்டார்.