![]()
சாவீ _ விமர்சனம்
‘சாவு வீடு’ என்ற பெயரில் உருவாகி விளம்பரப்படுத்தப்பட்டு தயாரான படம், திரையரங்க உரிமையாளர்கள் சிலரின் ஆட்சேபணை காரணமாக ‘சாவீ’ என்று பெயர் மாற்றம் பெற்று வெளியாகி இருக்கிறது.
நாயகன் உதயா தீப்பும் அவரது மாமன் மகளான கவிதாவும் காதலிக்கின்றனர்.
ஆனால் இந்த காதலுக்கு கவிதாவின் அப்பா பிரேம் கே.சேசாத்ரி எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
சொந்த மாமனான கவிதாவின் அப்பாதான் தனது தந்தையை கொன்றுவிட்டார் என்று உதயா நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் விபத்து ஒன்றில் சிக்கி கவிதாவின் தந்தை இறந்து விடுகிறார்.
ஈமக் கிரியைகள் செய்வதற்காக வீட்டில் ஃப்ரீசர் பாக்சில் வைக்கப்பட்டு இருக்கும் பிரேதத்திற்கு உதயாவை காவல் வைத்து விட்டு மற்றவர்கள் உறங்கி விடுகின்றனர்.
அசதியில் உதயாவும் கண்ணயர பிணம் காணாமல் போகிறது.
உதயாதான் பிரேதத்தை ஏதோ செய்து மறைத்து விட்டார் என்று எல்லோரும் சந்தேகப்பட, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதர்ஷ் பாலா துப்பு துலக்க வருகிறார்.
அவரால் பிரேதத்தை கண்டுபிடிக்க முடிந்ததா?
பிரேதத்துக்கு உண்மையில் என்ன ஆனது? என்பதுதான் சாவீ படத்தின் கதை.
சீரியஸ்னஸ் இல்லாத ஒரு கதாபாத்திரத்தைதான் ஏற்று இருக்கிறோம் என்பதை உணர்ந்து வெகுளியான வேடத்தை கலகலப்பாக்கி திறம்பட நடித்து கவனம் ஈர்க்கிறார் உதயா தீப்.
பக்கத்து வீட்டுப் பெண் போல் இயல்பான தோற்றத்தில் இருக்கும் நாயகி கவிதா சுரேஷ் நடிப்பில் பாஸ் மார்க் பெறுகிறார்.
இன்ஸ்பெக்டர் ஆக வரும் ஆதேஷ் பாலா தான் பல இடங்களில் ஓவர் ஆக்டிங் செய்திருக்கிறார்.
இசையமைப்பாளர்கள் சரண் ராகவன் மற்றும் பிஜே ரகுராம் தங்கள் பணியை சிறப்பாகவே செய்திருக்கின்றனர்.
வெளிப்புறத்தில் படமாக்கப்பட்ட இரவு காட்சிகளை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பூபதி வெங்கடாசலம்.
டார்க் காமெடி வகை படமாக உருவாக்கப்பட்ட சாவீ படத்தை நகைச்சுவை காட்சிகளுக்காகவே தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.


