![]()
மாரீசன் _ விமர்சனம்
திருட்டு வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்ற பகத்ஃபாஸில், விடுதலையாகி வெளியே வந்ததும் மீண்டும் தன் கைவரிசையை காட்ட தொடங்குகிறார்.
பக்தர் ஒருவரின் செல்போன், சாவியுடன் இருந்த மோட்டார் பைக் ஆகிய அத்தியாவசிய தேவைகளை(!) அலட்சியமாகத் திருடிக் கொண்டு, நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டுக்குள் பெரிய அளவில் கொள்ளையடிக்கும் திட்டத்துடன் நுழைகிறார்.
அப்போது அங்கே சங்கிலியால் கட்டப்பட்டிருந்த வடிவேலுவை பார்க்கிறார். தனக்கு ஞாபக மறதி நோய் இருப்பதாகவும், அதனால்தான் தன் மகன் இவ்வாறு கட்டிப்போட்டிருப்பதாகவும் கூறும் வடிவேலு, தன்னை வெளியே கொண்டு வந்தால் 25 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறுகிறார்.
வடிவேலுவை வெளியே அழைத்து வந்து ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது அவரது அக்கவுண்டில் லட்சக்கணக்கில் பணம் இருப்பது பகத்ஃபாஸிலுக்கு தெரிய வருகிறது.
இந்த பெரிய தொகையை எப்படியாவது கைப்பற்றிவிட திட்டமிட்டு, வடிவேலு செல்ல விரும்பும் ஊர்களுக்கு, தானே தன் பைக்கில் அழைத்துச் செல்வதாக கூறுகிறார் பகத்ஃபாசில்.
இருவரது பயணமும் தொடரும்போது வடிவேலுவிடம் வேறு ஏடிஎம் கார்டு இருப்பதையும் அறிந்து கொள்ளும் பகத் பாஸில், தன் நண்பன் விவேக் பிரசன்னா மூலம் அந்த டெபிட் கார்டுகளை டூப்ளிகேட் எடுக்க முயற்சி செய்கிறார்.
இந்த சூழலில் வடிவேலு குறித்து ஒரு அதிர்ச்சிகரமான செய்தி பகத் பாஸிலுக்கு தெரிய வருகிறது.
உண்மையில் வடிவேலு யார்? அவரது பின்னணி என்ன? அவரிடம் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை பகத்வாசிலால் திருட முடிந்ததா என்பதுதான் மாரிசன்.
‘மாமன்னன்’ படத்தில் குணச்சித்திர வேடத்தில் முத்திரை பதித்த வடிவேலு ‘மாரிசன்’ படத்தில், நடிப்பின் மற்றொரு பரிமாணத்தை மிக அருமையாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
திருடும் தொழிலை கூட ஒரு சீரியஸ்னஸ் இல்லாத ஜாலி திருடன் வேடத்தை பகத் பாசில் மிக எளிதாகவும் ரசிக்கும்படியும் செய்திருக்கிறார்.
நண்பன் வேடத்தில் வரும் விவேக் பிரசன்னா, போலீஸ் அதிகாரியாக வரும் கோவை சரளா, மற்றும் தேனப்பன், லிவிங்ஸ்டன் ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கின்றனர்.
முதல் பாதி திரைப்படம் முழுவதும் பகத் ஃபாசிலின் கலகலப்பான நடிப்பால் ஜாலியாகச் சொல்கிறது.இரண்டாம் பாதி முழுக்க முழுக்க வடிவேலுவின் ஆதிக்கம்தான்.
துவக்கத்திலிருந்து இறுதிவரை சற்றும் விறுவிறுப்பு குறையாமல் படத்தைக் கொண்டு செல்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர்.
கதை திரைக்கதை வசனம் எழுதி கிரியேட்டிவ் டைரக்டராகவும் படத்துக்கு கிருஷ்ணமூர்த்தி செய்த பங்களிப்பு அபாரம் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடலாம்.
“வயோதிகமே ஒரு சிறை தான்… அதற்கு வீடோ… முதியோர் இல்லமோ… ஜெயிலோ… வேறுபாடுகள் எதுவும் கிடையாது” என்ற வசனம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
கலைச்செல்வன் சிவாஜியின் கலர்ஃபுல்லான ஒளிப்பதிவு, பகத் பாசில் வடிவேலு ஆகியோருடன் நம்மையும் பயணிக்க வைக்கிறது.
யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
சுவாரசியமும் சஸ்பென்சும் மிகுந்த ‘மாரிசன்’ படம் அனைத்து தரப்பினரும் ரசித்துப் பார்க்கும் வித்தியாசமான திரைப்படம்.
மதிப்பெண் 3.5/5


