Wednesday, August 19

காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்

Loading

காத்து வாக்குல ஒரு காதல் _ விமர்சனம்

வட சென்னை பகுதியில் உள்ள ரவுடி குழுக்கள் இடையே ஏற்படும் மோதலில் சிலர் வெட்டிக் கொல்லப்படுகிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க, நாயகன் மாஸ் ரவி மற்றும் நாயகி லட்சுமிபிரியா இருவரும் உயிருக்கு உயிராக காதலிக்கின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் எந்த அளவுக்கு காதல் கொண்டிருக்கிறார்கள் என்பதை மாறி மாறி பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென மாஸ் ரவி காணாமல் போகிறார்.

அவரது மொபைல் எண்ணுக்கு லட்சுமி பிரியா போன் செய்தால் யாரோ போனை எடுத்து ராங் நம்பர் என்று சொல்கிறார்கள்.

தாங்கள் இருவரும் வழக்கமாக சந்திக்கும் இடங்களில் எல்லாம் காதலனை தேடி அலைகிறார் லஷ்மி பிரியா.

சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு நாள் சாலையில் காதலனை சந்திக்கிறார் காதலி…

எப்படி தெரியுமா? ஒரு ரவுடியாக…

அடிதடிகளில் இறங்கும் ஒரு கேங்ஸ்டர் ஆக மாறி இருக்கிறார் மாஸ் ரவி. அவரது இந்த மாற்றத்துக்கு காரணம் என்ன?

காதலர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதுதான் ‘காத்து வாக்கில் ஒரு காதல்’ படத்தின் கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் மாஸ் ரவி தான் இயக்குனர் பொறுப்பையும் ஏற்று இருக்கிறார்.

நடிப்பு இயக்கம் இரண்டிலுமே பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் மாஸ் ரவி. படத்தின் முதல் பாதியில் சாந்த சொரூபியாக, லட்சுமி பிரியாவின் காதலன் வேடத்தில் அடக்கி வாசிக்கும் மாஸ் ரவி, இரண்டாம் பாதியில் அதிரடி காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டுகிறார்.

பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எளிய தோற்றத்தில் இருக்கும் அழகு மயில் லஷ்மி பிரியா புதுமுகம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

குறிப்பாக காதலன் மாஸ் ரவியிடம் அழுது கொண்டே சிரிக்கும் காட்சியை சொல்லலாம்.

தமிழ் பட உலகுக்கு அழகும் நடிப்புத் திறமையும் கொண்ட ஒரு நடிகை கிடைத்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

படத்தின் துவக்க காட்சிகளில் பல ரவுடிகள் கொலை செய்யப்படுவது கேங்ஸ்டர் கதையை போல் தோன்றினாலும், பின்னர் லவ் ஸ்டோரியாக ட்ராக் மாறுகிறது ‘காத்து வாரத்தில் ஒரு காதல்’.

முதல் பாதி காதல் காட்சிகள் காரணமற்ற தொடர் கொலைகள் என விறுவிறுப்பின்றி நகர்ந்தாலும், அடுத்த பாதி அதை ஈடு கட்டும் வகையில் விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் இயக்குனர் மாஸ் ரவி.

பின்பாதியில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்கள் இருப்பது படத்துக்கு பிளஸ் பாயிண்ட்.

சூப்பர் சுப்பராயன், சாய் தீனா இருவரும் வில்லன் வேடத்தில் அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.

ஆதித்யா கதிர், தங்கதுரை இருவரின் நகைச்சுவை சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. ஜி கே வி மற்றும் மிக்கின் அருள் தேவ் இசையமைப்பில் உருவான பாடல்கள் பரவாயில்லை ரகம்.

ராஜதுரை மற்றும் சுபாஷ் மணியன் இரட்டையர்கள் வடசென்னை வாழ்வியலை யதார்த்தமாக படமாக்கி இருக்கிறார்கள்.

திரைக்கதையில் கவனம் செலுத்தி சில தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் இன்னும் சிறப்பாக படம் அமைந்திருக்கும்.

இரண்டாம் பகுதியில் உள்ள எதிர்பாராத திருப்பங்களுக்காகவே இந்த படத்தை கண்டு ரசிக்கலாம்.