Tuesday, November 17

மெஹந்தி சர்க்கஸ் – விமர்சனம்

Loading

 

புதுமுகங்கள் மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா த்ரிபாதி ஆகியோருடன் இளையராஜாவின் இசைப்பாடல்களும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் மெஹந்தி சர்க்கஸ்.
மலைப்பகுதியிலுள்ள கிராமம் ஒன்றுக்கு வரும் சர்க்கஸ் குழு, கூடாரம் அமைத்து தங்கள் வித்தைகளை வெளிப்படுத்தி வருகிறது.சர்க்கஸ் கம்பெனி முதலாளியின் மகளும், முக்கிய சர்க்கஸ் நிகழ்ச்சி ஒன்றில் பங்கு கொள்பவருமான ஸ்வேதா த்ரிபாதியை கண்டதும் காதல் கொள்கிறார், மாதம்பட்டி ரங்கராஜ். ஆரம்பத்தில் தயங்கினாலும், பின்னர் ஸ்வேதாவும் அவரைக் காதலிக்க ஆரம்பிக்கிறார். இந்தக் காதலர்கள் இணைய குறுக்கே நின்றது எது காதலர்கள் இணைந்தார்களா என்பதே மெஹந்தி சர்க்கஸ்.
சற்றே இளைத்த சின்ன வயசு ரெஹ்மானைப்போல் இருக்கிறார் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் ரங்கராஜ். புதுமுகம் என்ற சுவடே இல்லாமல் பல படங்களில் நடத்த அனுபவம்மிக்க நடிகரைப்போல் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுதியிருப்பதற்கு தனியாக ஒரு சபாஷ் போடலாம். நல்ல முகவெட்டும் நடிப்புத் திறனும் உள்ள புதுமுக நடிகர் தமிழ்த் திரையுலகுக்கு கிடைத்திருக்கிறார். நல்ல கதைகளையும், தனக்கேற்ற கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்தால் கண்டிப்பாக இவர் ஒரு ரவுண்ட் வருவது நிச்சயம்.
நாயகியாக நடித்திருக்கும் புதுமுகம் ஸ்வேதா த்ரிபாதியும் பண்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக சோகமான காட்சிகளில் அதிக வசனங்கள் இல்லாமல் தன் நடிப்பாலேயே காட்சியை தாங்கிப் பிடிக்கிறார்.
பொதுவாக சர்க்கஸ் கலைஞர்கள் தங்கள் கூடாரங்களைவிட்டு வெளியே வரமாட்டார்கள். வந்தாலும் தனியாக வரமாட்டார்கள். அதிலும் பெண்கள் கடைத்தெருவுக்கு வந்தெல்லாம் சுற்றிக்கொண்டிருக்க மாட்டார்கள். ஆனால் மெஹந்தி சர்க்கஸ் கதாநாயகி ஏதோ சுற்றுலா வந்ததுபோல் எப்போது பார்த்தாலும் ஊருக்குள் வந்து சுற்றிக்கொண்டிருப்பதுபோல் காாட்டியிருப்பதெல்லாம் …..சாரி……கொஞ்சம் ஓவர் வகையைச் சேர்ந்தது.
படத்துக்கு ஷான் ரோல்டனின் பாடல்களும் பின்னணி இசையும் பெரும் பலமாக இருக்கின்றன. படம் முழுவதும் பொருத்தமான இடங்களில் இளையராஜாவின் இசையில் உருவான பாடல்களை இயக்குநர் நுழைத்திருப்பது ரசிக்கத் தக்க விதத்தில் அமைந்திரு்ககிறது.
படத்தின் மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் எஸ்.கே.செல்வகுமாரின் ஒளிப்பதிவுதான். கொடைகானல் மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளையெல்லாம் தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் மனிதர். பிற்பகுதியில் வரும் வடஇந்திய வெளிப்புறக்காட்சிகளும் வேறு வகையான வண்ணக்கலவையில் வெகு சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கின்றன.
தானே அறிமுக இயக்குநராக இருந்தாலும் புதுமுக நாயகன் நாயகியை வைத்து சிறப்பானதொரு படத்தைக் கொடுத்ததற்காகவே சரவண ராஜேந்திரனுக்கு தனியாக ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
ராஜூ முருகனின் கதை வசனத்தில் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் காதல் காவியமாகவே மலர்ந்திருக்கிறது மெஹந்தி சர்க்கஸ்.