![]()
முத்து என்கிற காட்டான் _ விமர்சனம்
அதிக ஆட்கள் வசிக்காத சிறிய கிராமம் ஒன்றில் பெயருக்காக இயங்கும் போலீஸ் ஸ்டேஷன் ஒன்றை நிரந்தரமாக மூடப் போவதாக தகவல் வரும் நிலையில், அந்த எல்லைக்குட்பட்ட பகுதியில் முத்து என்பவரின் தலை கிடக்கிறது.
ஆனால் எவ்வளவு தேடியும் உடல் மட்டும் கிடைக்கவில்லை.
இறந்த முத்து யார்? அவர் எதற்காக சொல்லப்பட்டிருக்கிறார் என்ற காவல்துறையின் புலன் விசாரணை ஆரம்பமாகிறது.
முத்துவை பற்றி கிடைக்கும் தகவல்களும், சொல்லப்படும் கதைகளும் ஆக்டோபஸின் கால்களைப்போல் பல திசைகளிலும் நீள்கின்றன.
திரில்லர் வகையில் உருவாக்கப்பட்ட 10 எபிசோடுகள் கொண்ட இந்த வெப் சீரிஸ் மணிகண்டன் மற்றும் எடிட்டர் அஜித்குமார் இயக்கத்தில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் பயணிக்கிறது.
முத்துவாக விஜய் சேதுபதி இயல்பான அதேசமயம் ஆழமான நடிப்பில் ஜொலிக்கிறார்.
எண்பதுகளில் இந்தியாவின் நம்பர் ஒன் மாடலாக இருந்த மிலிந்த் சோமன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
மற்றும் அபி நட்சத்திரா, ரிஷா ஜேக்கப்ஸ், பார்வதி, சிந்து ஆகியோர் சிறிய வேடங்களில் தோன்றினாலும் நினைவில் நிற்கும்படியாக திறம்பட நடித்திருக்கிறார்கள்.
மீனாவுக்கும் முத்துவுக்கும் உள்ள காதலை புதுக்கவிதை என்றால், சிந்துவுடன் முத்து கொண்டிருக்கும் காதலை அழகான ஹைக்கூ என்று சொல்லலாம்.
இயக்குனர் பாலாஜி சக்திவேல் மிகச் சில காட்சிகளில்தான் தோன்றுகிறார் என்றாலும் மிக இயல்பான நடிப்பால் அந்தப் பாத்திரத்தில் பொருந்தி போகிறார்.
உண்மையில் இந்த முத்து யார், கோவில் திருவிழாவின்போது என்ன நடந்தது என்ற புதிரை விடுவிக்கும் முக்கியமான இந்த பாத்திரத்திற்கு பாலாஜி சக்திவேலின் உடல் மொழி நன்கு பொருந்திப் போய் பலம் சேர்த்திருக்கிறது.
மது மற்றும் சண்முகசுந்தரம் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் ‘கடவுளின் தேச’த்து காட்சிகள், குறிப்பாக நீர் வழி போக்குவரத்து காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது.
பள்ளியில் நடக்கும் கலை விழாவின்போது நடக்கும் சண்டை திரைப்படத்தின் நேர்த்தியுடன் படமாக்கப்பட்டிருக்கிறது.
இந்த வெப் தொடருக்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார்.
முதல் எபிசோடிலேயே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்ளும் இந்தத் தொடர், அடுத்து என்ன என்ற ஆவலை அதிகரித்துக் கொண்டே செல்வதுதான் இதன் வெற்றி.
விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ் சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த வெப் சீரிஸ் த்ரில்லர் ஜானர் பட ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும்.


