Saturday, October 24

நறுவீ _ விமர்சனம்

Loading

நறுவீ _ விமர்சனம்

நடிப்பு: ஹரிஷ் அலக்  விஷ்ணு, வி ஜே பப்பு, பாடினி குமார், ஜீவாரவி, பிரவீனா,  காத்தே, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா, சாரதா நந்தகோபால்

தயாரிப்பு: ஏ அழகு பாண்டியன்

இசை: அஸ்வத்

ஒளிப்பதிவு: ஆனந்த ராஜேந்திரன்

இயக்கம்: சுபராக் முபாரக்

பி ஆர் ஓ: ஆர் மணி மதன்

தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த மலைப்பகுதியில் ஆய்வு செய்வதற்காக சென்னையிலிருந்து ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று குன்னூருக்கு வருகிறது.

இந்தப் பகுதியில் உள்ள மலைவாழ்  மக்களின் குழந்தைகள், நல்ல கல்வியை பெற வேண்டும் என்பதற்காக தீரன் என்ற வசதியான இளைஞர் ஓராசிரியர்  பள்ளியை சொந்தமாக நடத்தி வருகிறார்.

இந்தப் பள்ளியில் படிக்கும் ஓர் இளம் பெண்ணுக்கு மேற்கொண்டு தொடர்ந்த படிக்க வேண்டும் என்று அளவு கடந்த ஆசை.

ஆனால் நடைமுறையில் அது சிக்கலாக இருக்கிறது. ஆசிரியராக இருக்கும் தீரனே நல்ல வழிகாட்டியாகவும் இருந்து அந்த பெண்ணுக்கு உதவ முயல்கிறார்.

ஆனால் திடீரென அந்தப் பெண்ணும் தீரனும் காணாமல் போகிறார்கள்.

சென்னையில் இருந்து இந்த மலைப்பகுதிக்கு வரும் ஐவர் குழுவில் உள்ள ஒரு பெண்,  தனது மாமன் திடீரென காணாமல் போய்விட்டதாகும், அவரை தான் தேடி கண்டுபிடிக்க இருப்பதாகவும் சொல்லி மாமனை தேடும் முயற்சியில் இறங்குகிறார்.

காணாமல் போன மாமனை அவரால் கண்டுபிடிக்க முடிந்ததா?

படிப்பதற்கு ஆசைப்பட்ட பெண்ணும் தீரனும் என்ன ஆனார்கள்  என்பதுதான் நறுவீ படத்தின் கதை.

துவக்கத்திலிருந்து இறுதிவரை சஸ்பென்ஸ் குறையாமல் படத்தை கொண்டு செல்கிறார்  படத்தை எழுதி இயக்கி இருக்கும் சுபராக் முபாரக்.

பள்ளி ஆசிரியராக வரும் நாயகன் ஹரீஷ் பாத்திரம் நன்கு வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

மலை கிராம மக்களின் குழந்தைகளுக்கு கல்வி தரவேண்டும் என்பதற்காக மோசமான ஒற்றை அடி பாதையில் பைக்கை ஓட்டி வந்து நிறுத்திவிட்டு,  பின்னர் நடந்து சென்று,  தான் நடத்தும் பள்ளி குழந்தைகளுக்கு பாடம் கற்பிப்பது வெகு சிறப்பு.

பாடினி குமார்,  ஜீவா ரவி, பிரவீனா, கேத்தி, முருகானந்தம் போன்றவர்களும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆனந்த் ராஜேந்திரனின் ஒளிப்பதிவுதான். இயற்கை எழில் கொஞ்சும் அழகு காட்சிகளை அப்படியே தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

இதேபோல் அஸ்வத்தின் இசையும் ரசிக்க வைக்கிறது.

சில காட்சிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தாவுவதை தவிர்த்து இருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.

சற்று மெனக்கெட்டிருந்தால் அருமையானதொரு திரில்லர் படமாக வந்திருக்க வேண்டியது. என்ன காரணத்தாலோ அதை தவற விட்டு விட்டது பட குழு.