Thursday, September 24

படவேட்டு (மலையாளம்) திரைப்பட விமர்சனம்

Loading

பொதுவாக மற்ற மொழிகளில் பார்க்க முடியாத கதைக்களம், பாத்திரப் படைப்பு, ஆகியவற்றை மலையாள மொழிப் படங்களில் தாராளமாகப் பார்க்கலாம் என்பதை ‘படவேட்டு’ மலையாளப் படம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.

வேலை வெட்டி எதவுமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார் நிவின் பாலி. தடகள விளையாட்டு வீரரான நிவின் பாலி விபத்து ஒன்றி்ல் சிக்கி, உடல் நலம் வெகுவாக பாதிக்கப்பட்ட பிறகுதான் இவ்வாறு முடங்கிப்போய் வீட்டிலேயே இருக்கிறார்.

கோழி மாடு போன்றவற்றை ஜீவாதாரத்துக்காக வளர்த்து வருகிறார் நிவின் பாலியின் அத்தை. வீட்டில் இவர்களைத் தவிர வேறு யாருமில்லை. மாடுகள் தரும் பாலைக் கொண்டுபோய் பால் சொசைட்டியில் தருவதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதில்லை நிவின் பாலி.
இந்த சூழலில் உள்ளூர் அரசியல்வாதி ஒருவர் தன் சொந்த லாபத்துக்காக மழைக்கு ஒழுகும் நிவின் பாலியின் பழைய வீட்டை புதுப்பித்துக் கொடுக்க முன் வருகிறார். நிவின் பாலிக்கு இதில் உடன்பாடில்லை என்றாலும், தன் கண் முன்னேயே வீடு புதுப்பிக்கப்படுவதை அவரால் தடுக்க இயலவில்லை.

புதுப்பிக்கபட்ட வீட்டில் அரசியல்வாதி தன் பெயரைப் போட்ட கல்வெட்டு ஒன்றையும் பதித்துவிட்டுச் செல்கிறார். இந்த கல்வெட்டைப் பார்க்கும் ஊர் மக்கள், கேலி பேசுகிறார்கள். இதனால் கோபமடைந்த நிவன் பாலி அந்தக் கல்வெட்டை அடித்து நொறுக்குகிறார். இதனால் அரசியல்வாதியுடன் நேரடி மோதல் ஏற்படுகிறது.

உள்ளூர் விவசாயிகளின் நிலங்களை நயவஞ்சகமாக ஏமாற்றி பெற நினைக்கிறார் அரசியல்வாதி. வெகுண்டெழும் நிவின் பாலி அரசியல்வாதியின் சதியை எவ்வாறு முறியடித்தார் என்பதுதான் படவேட்டு திரைப்படம்.

வித்தியாசமான கதைக்களம்…
எளிமையான கதை மாந்தர்கள்…
என்றிருப்பதால் படவேட்டு நம் மனதுக்கு நெருக்கமாகிறது.

நிவின் பாலி ஏற்று நடித்திருக்கும் வேடத்தில் நம்மூர் நாயகர்கள் யாரையும் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை.

அரசியல்வாதி குயாலி வேடத்தில் வரும் ஷாமி திலகன் ஏற்ற வேடத்தை நிறைவாகச் செய்திருக்கிறார்.

பால் சொசைட்டியில் பணியாற்றும், மண வாழ்வு முறிந்த அதிதி பாலன்-நிவின் பாலி ஆகியோரிடையே உள்ள புரிதலை வசனங்களே இல்லாமல் பார்வையாளர்களுக்கு பரிமாறியிருக்கிறார் படவேட்டு படத்தை எழுதி இயக்கியிருக்கும் லிஜூ கிருஷ்ணா. கவிதையாக மலர்ந்திருக்கும் இந்த காட்சிகளுக்காகவே இயக்குநருக்கு சபாஷ் சொல்லலாம்.

தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவு படத்தை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது. வயல்வெளிகளை நாசம் செய்ய வரும் காட்டுப் பன்றியை எதிர்கொள்ளும் காட்சிகளில் ஒளிப்பதிவு அபாரம். எதிர்பாராத ஒரு ஷாட்டில் நம்மீது காட்டுப்பன்றி பாய்வதுபோல் படமாக்கியிருப்பது பிரமாதம்.

கோவிந்த் வசந்தாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.
மசாலா படங்களையே பார்த்து சலித்துப் போன ரசிகர்களுக்கு நல்லதொரு மாறுபட்ட படைப்பாக மலர்ந்திருப்பது படவேட்டு

மதிப்பெண் 3.5 5