350 total views, 1 views today
ஒரு திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது அந்த திரைப்படத்தின் கதாபாத்திரம் குறைந்தது பத்து நிமிடங்கள் நம்முடன் பயணிக்கும். சில சமயங்களில் நம்மையே அந்த கதாபாத்திரமாக உணர்வோம் பத்து நிமிடத்திற்கு. நம் நடை, பாவனை,மனோபாவம் அனைத்தும் அந்த கதாபாத்திரத்தோடு ஒத்து இருக்கும்.ஆனால் இந்த திரைப்படம் முடிந்து வெளியே வரும் போது படத்தின் இயக்குனர் நம்முடன் பயணிக்கிறார்.காண்பவனுக்கும் காட்சி பொருளுக்கும் உள்ள பந்தமாக இல்லாமல் படைத்தவனக்கும் படைத்த பொருளுக்கும் உள்ள பந்தமாக உணரப்படுகிறது. ஏதோ நாம் வெற்றி பெற்ற மாதிரி நடையில் ஒரு மிடுக்கு வருகிறது.
கிராமத்தை அதன் பொட்டல் காட்டின் புழுதியோடும்,மழைகாலத்தின் சேற்றோடும் மேலும் அங்கு பரவி கிடக்கும் ஜுவராசிகளோடும் பெயர்த்து எடுத்து வெள்ளி திரையில் வீசியிருக்கிறார் இயக்குனர்.புழுதியையும் சேற்றின் ஈரத்தையும் உணர முடிகிறது.மனுசன் சூரிய ஒளியை கூட நடிக்க வைத்திருப்பார் போலும்.ஊரின் முதல் ஊற்று,புழுதி காட்டில் பூ வாசம் போன்ற சொற்கள் இது ஒரு எழுத்தாளரின் படைப்பு எனபதை உணரச்செய்கிறது.இந்த படைப்பிற்கு திருஷ்டி பொட்டு வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சிலவற்றை மிகைபடுத்தி காட்டியிருக்கிறார் போலும்.
இந்த திரைப்படத்தின் கரும்பொருளாகிய சாதியத்திற்கு எதிராக முண்டாசு கவிஞன்,எம் ஈரோட்டு கிழவன் முதற்கொண்டு பல தலைவர்கள் போராடியும் அதன் கோரம் குறையாமல் கோவ கொப்பழங்களை வெளியிட்டு கொண்டுதான் இருக்கிறது. மனிதனின் அடி மனதில் தேங்கி கிடக்கும் இந்த சாக்கடைக்கு எதிராக காலம் தன் கணக்கை தீர்க்கும் என்ற நம்பிக்கையில் மாரி செல்வராஜ்ஜிடம் வருகிறேன்.என்னை கவர்ந்த மற்றொன்று,சினிமாக்கள் பொழுதுபோக்கு,கருத்து,கற்பித்தல் போன்ற பல நோக்கங்களோடு எடுக்கபடுகின்றன. ஆனால் மாரி செல்வராஜ் படைப்பாளியின் எல்லையை தாண்ட விரும்பவில்லையா, இல்லை வேறு சில அழுத்தங்களா என்று தெரியவில்லை, கதாநாயகன் பேசும் கடைசி வசனத்தை தவிர எத்த இடத்திலும் அவரது கோபத்தையோ அழுத்தமான கருத்தையோ பதிவிடவில்லை. நம் இருக்கை அருகில் அமர்ந்து இந்த சமுதாயத்தை நோக்கும் ஒரு பார்வையாளனாகவே பயணிக்கிறார்.
இறுதியாக பல பெருமாள்கள் பரியேற வேண்டும் என்கிற ஆசையோடு திரையரங்கில் இருந்து வெளியேறினேன்.
வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ்.
ம.சிலம்பரசன். –