பார்க்கிங் – விமர்சனம்
சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படும் வாகன நிறுத்தப் பிரச்சனைகளை மையமாக வைத்து உருவான ஒரு முழுநிீளத் திரைப்படமே பார்க்கிங்.
பஞ்சாயத்துஅமைப்பு ஒன்றில் செயல் அலுவலராக பணியாற்றும் எம்.எஸ்.பாஸ்கர் தனது மனைவி, மற்றும் மகளுடன் வசித்து வரும் வீட்டின் மாடிப் பகுதிக்கு ஹரீஷ் கல்யாண் தன் காதல் மனைவி இந்துஜாவுடன் குடி வருகிறார்.
கார் பார்க்கிங்கிற்கான இடத்தில் தன் பைக்கை நிறுத்தி வந்த பாஸ்கர், ஹரீஷ் கல்யாண் வாங்கிய புதிய காரை அங்கு நிறுத்த முயல இருவருக்கும் இடையே உரசல் ஏற்படுகிறது. ஒரு நாள் பாஸ்கர் தன் பைக்கை நிறுத்த முயலும்போது எதிர்பாராமல் காரில் மோதி கீறல் விழுகிறது.
இதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் இருவருக்கிடையே மனக்கசப்புகளை அதிகரித்து, மோதல் போக்குக்கு செல்கிறது.
மனைவி பல முறை கேட்டும் புது மிக்ஸி வாங்கிக் கொடுக்காமல் பழைய மிக்ஸியையே ரிப்பேர் செய்து பயன்படுத்தச் சொல்லும் பாஸ்கர் ஹரீஷுடன் ஏற்பட்ட மோதலால் முழு பணமும் மொத்தமாகக் கொடுத்து ஒரு புது காரை வாங்கி வந்து விடுகிறார்.
இருப்பது ஒரே ஒரு காரை நிறுத்துவதற்கான இடம்தான். இப்போது இரண்டு கார்கள் வந்து விட்டதால் பிரச்சனை பெரிதாக வளர்கிறது.
ஒருவர் காரை மற்றொருவர் உடைத்து சேதப்படுத்தும் அளவுக்கு செல்கிறார் என்றால், மற்றொருவர் பதிலுக்கு கார் சக்கரத்தின் டயர்களை லூசாக்கி விபத்து ஏற்படுத்தும் அளவுக்கு செல்கிறார்.
டிட் ஃபார் டேட் என்று செல்லும் இந்தப் போக்குக்கு முடிவுதான் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் விவரிக்கும் படம்தான் பார்க்கிங்.
ஈகோ பிரச்சனையும், அடுத்தவரை அனுசரித்து போகாத குணமும் மனிதன் நிம்மதியை எப்படி சீரழிக்கிறது என்பதை அழுத்தமான காட்சிகள் மூலம் அழகாகப் புரிய வைத்திருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன். படத்தின் கதை வசனத்தையும் இவரே எழுதியிருக்கிறார்.
துவக்கத்தில் இரண்டு குடும்பங்களும் சகஜமாக பேசிப் பழகுவதும், பின்னர் சிறு பொறிபோல் தோன்றிய பார்க்கிங் பிரச்சனை எப்படி பெருநெருப்பாக வளர்கிறது என்பதை நம்பத்தகுந்த காட்சிகள் மூலம் நயம்பட சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
ஜிஜூ சன்னியின் ஒளிப்பதிவும், சாம் சிஎஸ் பின்னணி இசையும் படத்துக்கு பக்க பலமாக இருக்கின்றன.
நறுக்கு தெறித்தாற்போல் கச்சிதமாக இருக்கிறது பிலோமின் ராஜ் படத்தொகுப்பு.
பெரும்பாலும் குணசித்ர வேடங்களிலேயே பார்த்துப் பழகிய எம்.எஸ்.பாஸ்கரா இப்படி ஒரு வக்கிரம் பிடித்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்று ஆச்சரியப்படும் வகையில் அற்புதமாக நடித்திருக்கிறார்.
பெற்ற மகளை எந்தத் தந்தையாவது காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பொய் புகார் கொடுக்க வைப்பார்களா என்ற கேள்வியே எழாத அளவுக்கு எம்.எஸ். பாஸ்கரின் உடல் மொழியும் முகபாவங்களும் அமைந்திருக்கின்றன.
எம்.எஸ்.பாஸ்கருக்கு ஈடாக சரி சமாக நின்று நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார் ஹரீஷ் கல்யாண். லஞ்சப் புகாரில் பாஸ்கரை சிக்க வைக்க நயவஞ்சகமாக காய்களை நகர்த்தும்போது கோபத்தை முகதித்ல காட்டாமலும், நேருக்கு நேர் அவருடன் மோதும்போது ஆக்ரோஷமான கோபத்தை வெளிப்படுத்தும்போதும் நடிப்பில் முத்திரை பதிக்கிறார்.
இந்துஜா ரமா போன்றோரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
அநேகமாக நம்மில் பலரும் கடந்து போயிருக்கும் வாகன நிறுத்தப் பிரச்சனையை வைத்து உருவாக்க்ப்பட்ட பார்க்கிங் படம் பசுமரத்தாணிபோல் நம் நெஞ்சில் நிலைத்திருக்கும்.
மதிப்பெண் 3.5/ 5