ரயில் _ விமர்சனம்

0

Loading

ரயில் _ விமர்சனம்

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்கத்தில் குங்குமராஜ்,வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, ரமேஷ்வைத்யா , செந்தில் கோச்சடை உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம், ரயில்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.ஜே.ஜனனி இசையமைத்து உள்ளார்.

சிறு கிராமத்தில் மனைவியுடன் வசிக்கிறான் நாயகன். குழந்தை இல்லை. நாயகனுக்கு எலக்ட்ரீசியன் தொழில். ஆனால், தொழிலைவிட குடிப்பதையே முக்கியமாக கருதி நண்பனுடன் விட்டேத்தியாக திரிகிறான்.
இவன் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கிறான், வடக்கில் இருந்து வந்து இங்கு வேலை பார்க்கும் இளைஞன்.
அவனுடன் தன் மனைவி பேசுவது, நாயகனுக்கு பிடிக்கவில்லை. தவிர வட இந்தியர்களால்தான் தன்னைப் போன்ற மண்ணின் மைந்தர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என நினைக்கிறான்.
ஒரு கட்டத்தில் வட இந்திய இளைஞனை கொலை செய்ய திட்டமிடுகிறான்.
அதன் பிறகு என்ன நடந்தது என்பதே கதை.

நாயகன் குங்குமராஜ், அசல் குடிகாரனாகவே நடித்து உள்ளார். மனைவியுடன், வட இந்திய இளைஞன் பேசுவது பிடிக்காமல் அவர் காட்டும் முகபாவணைகள் ரசிக்க வைக்கின்றன.
நாயகி வைரமாலா, சிறப்பாக நடித்து உள்ளார். குடும்ப பொறுப்பற்று கணவன் ஊர் சுற்றுவதை நினைத்து பொறுமுவது, அதே நேரம் அவன் மீது பாசம் காண்பிப்பது, வட இந்திய இளைஞனுடன் வாஞ்சையுடன் பழகுவது என முத்திரை பதிக்கிறார்.
நாயகனின் நண்பனாக வரும் ரமேஷ் வைத்யா, நகைச்சுவை நடிப்பில் அசத்தி இருக்கிறார். அவரது பேச்சு, நடை.. அத்தனையும் ரசிக்க வைக்கின்றன.

வட இந்திய இளைஞராக நடித்துக்கும் பர்வேஸ் மெஹ்ரூவும் சிறப்பாக நடித்து உள்ளார்.

இவரது மகளாக நடித்தவர்,  மனைவியாக தோன்றியவர், மற்றும்  பெற்றோராக வந்தவர்கள் என அனைவருமே இயல்பாக நடித்து உள்ளனர்.

முக்கியமாக வைரமாலாவின் தந்தையாக நடித்துள்ள செந்தில் கோச்சடை சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு, எஸ்.ஜே.. ஜனனியின் இசை படத்துக்கு பலம்.

வயிற்றுப் பிழைப்புக்காக வடக்கில் இருந்து வரும் மனிதர்களை அன்புடன் நடத்தவேண்டும் என்கிறது படம். சரியான விசயம்தான்.

அதே நேரம், தமிழர்களை குடிகாரர்களாக காண்பிப்பதும் அதனால்தான் வட இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்பது போலவும் காண்பித்திருப்பது சரியானதாக தோன்றவில்லை.
மற்றபடி, மெல்லிய மனித உணர்வுகளை இயல்பாக வெளிபடுத்தி இருக்கிறார் இயக்குநர் பாஸ்கர் சக்தி.

குறைகள் சில இருந்தாலும் ரசிக்க வைக்கும் திரைப்படம்…!

Share.

Comments are closed.