ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பும் கல்வி கற்கும் படிநிலைகளை போன்றது. அதில் புதுமையான மற்றும் தனித்துவமான கரு உருவாக்கப்பட்டு, அதை படமாக்கி, அதை மக்களுக்கு காண்டிபிக்கிறார்கள். அதை அந்த துறையின் மாஸ்டர்களாக இருக்கும் ஜாம்பவான்கள் பாராட்டுகிறார்கள். அதுவே படத்துக்கு கிடைக்கும் உச்சகட்ட அங்கீகாரமாகவும் அமைகிறது. குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற ஒரு புகழ்பெற்ற சூப்பர்ஸ்டாரிடம் இருந்து நிபந்தனையற்ற, இதயபூர்வமான பாராட்டுகள் கிடைக்கும்போது, அவர்கள் தங்கள் அனுபவங்களையும், சினிமாவின் நீண்ட பயணங்களையும் மறந்து, ஒரு குழந்தையைப் போல் உற்சாகமடைவார்கள். அந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் அதர்வா முரளி நடித்துள்ள “பூமராங்” படத்தின் ஒட்டுமொத்த குழுவும் இருக்கிறது. அதற்கு காரணம் பூமராங் படத்தின் ட்ரைலர் மற்றும் ப்ரோமோ காட்சிகளை பார்த்த சூப்பர் ஸ்டார் மொத்த படக்குழுவையும் வெகுவாக பாராட்டியிருப்பது தான்.
இயக்குனர் கண்ணன் இது குறித்து கூறும்போது, “ரஜினி சார் எங்கள் படத்தின் டிரைலர் மற்றும் பாடல் காட்சிகளை ரசித்த விதத்தை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக இந்திய நதிகளை இணைப்பதன் அடிப்படையிலான ‘தேசமே’ பாடலை அவர் மிகவும் ரசித்தார். இந்த பாடலை பார்த்து மிகவும் உற்சாகம் அடைந்ததோடு, பாடலின் பிரமாண்டத்தையும் வெகுவாக பாராட்டினார். அவர் அத்துடன் நிறுத்தாமல், இந்தப் பாடல் உருவாக்கத்தின் பின்னால் இருந்த ஒவ்வொரு விவரத்தை பற்றியும் மிக ஆர்வத்துடன் கேட்டார்” என்றார்.
இந்தியாவின் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாரிடம் இருந்து பாராட்டுக்களை பெற்ற “பூமராங்” படக்குழு இப்போது முழுக்க நேர்மறையான சிந்தனைகளால் சூழப்பட்டுள்ளது.
நாளை (மார்ச் 8) உலகமெங்கும் வெளியாகும் இந்த பூமராங் படத்தை மசாலா பிக்ஸ் சார்பில் தயாரித்து, இயக்கியிருக்கிறார் ஆர்.கண்ணன். அதர்வா முரளி, மேகா ஆகாஷ் மற்றும் இந்துஜா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி, உபென் படேல், சதீஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படம் நதிகள் இணைப்பை அடிப்படையாக கொண்ட ஒரு சமூக, வணிக ரீதியான பொழுதுபோக்கு படமாகும்.