![]()

பவர் பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி நடித்திருக்கும் படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ராயன்.
பெற்றோர் என்ன ஆனார்கள் என்று தெரியாத நிலையில், தனது இரு தம்பிகள் மற்றும் ஒரு தங்கையுடன் சென்னைக்கு வருகிறான் சிறுவன் ராயன் (தனுஷ்). மார்க்கெட்டில் வேலை பார்த்து, தம்பி தங்கையை காப்பாற்றுகிறான். வளர்ந்து, பாஸ்ட் புட் கடை வைக்கிறான்.
சின்ன தம்பி கல்லூரியில் படிக்க.. பெரிய தம்பி வெட்டியாக ஊர் சுற்றுகிறான். தங்கைக்கு திருமணம் செய்து வைக்க ராயன் திட்டமிடுகிறார்.
அப்போது அந்த பகுதியில் இரண்டு கேங்ஸ்டர்களான சேது மற்றும் துரை இருவரும் முறுக்கிக்கொண்டு நிற்கிறார்கள். , இந்த இரு ரவுடிகளையும் ஒழித்துக் கட்ட… அவர்களுக்கிடையே மோதலை ஏற்படுத்த திட்டமிடுகிறார் காவல் அதிகாரி ஒருவர்.
இவர்களுக்கு இடையில் எதிர்பாராத விதமாக சிக்கிவிடுகிறார் ராயனின் தம்பி. தம்பியை காப்பாற்ற, ராயன் களம் இறங்க.. அடுத்து என்ன என்பதே கதை.
வழக்கம்போல் நடிப்பில் அசத்தி இருக்கிறார் தனுஷ். எப்போதும் உம்மென்று இருக்கும் முகபாவம், தம்பிகள் தங்கை மீது வைக்கும் பாசம், அவர்களுக்கு பிரச்சினை என்றவுடன் வெகுண்டெழும் வேகம் என நடிப்பில் துவம்சம் செய்திருக்கிறார் தனுஷ்.
அவரது தங்கையாக வரும் துஷராவும் நடிப்பில் அசத்துகிறார். பெரியண்ணன் மீது பாசத்துடன் மரியாதை.. அடுத்த அண்ணன் மீது அதே பாசத்துடன் சண்டை.. இப்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தனுஷின் தம்பிகளாக சந்தீப் கிஷன். காளிதாஸ் வருகிறார்கள். சந்தீப்புக்கு நடிக்க கூடுதல் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. காதலியை நினைத்து ஏங்குவது, அண்ணன் மீதான ஆதங்கம் என பல உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார். காளிதாஸ் ஜெயராமும் தனக்கான பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார். ரவுடிகளாக வரும் எஸ்.ஜே.சூர்யா, சரவணன், தனுசுக்கு உதவும் பாத்திரத்தில் செல்வராகவன் எல்லோருமே சிற்பபான நடிப்பை அளித்து இருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசை அசரடிக்கிறது. டைட்டில் மற்றும் கிளைமாக்ஸ் பாடல் கூடுதல் ஈர்ப்பு. பின்னணி இசையும் அசத்தல்.
ஓம் பிகராஷ் ஒளிப்பதிவு சிறப்பாக உள்ளது.
ஜாக்கியின் கலை இயக்கம் அசத்துகிறது. நிஜத்தில் ஒரு ஊரையே கண்முன் நிறுத்திவிட்டார்.
இயக்குனராக இரண்டாம் முறை வெற்றி பெற்று இருக்கிறார் தனுஷ். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை, ரசிக்க வைக்கும் திரைக்கதை, அசத்தும் மேக்கிங்.
அதே போல ஒவ்வொரு பாத்திரத்தையும் செதுக்கி இருக்கிறார். எந்தவொரு கதாபாத்திரமும் வீணடிக்கப்படவில்லை.
மொத்தத்தில் படத்தை ரசிக்கலாம்.

