Monday, April 20

ரேகை _ விமர்சனம்

Loading

ரேகை _ விமர்சனம்

எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் கதை ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இணைய தொடர்தான் ரேகை.

ஜீ 5 தமிழில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த வெப் சீரிசை சிங்காரவேலன் தயாரிக்க, தினகரன் இயக்கியிருக்கிறார்.

சப் இன்ஸ்பெக்டர் பால ஹாசனும் அதே ஸ்டேஷனில் வேலை பார்க்கும் பெண் காவலர் பவித்ரா ஜனனியும் முன்னாள் காதலர்கள்.

தற்போது இருவருக்கும் பிரேக் அப் ஆகி, பவித்ராவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடக்கின்றன.

ஆயினும் தங்கள் பணியில் இருவருமே மிக நேர்மையாக இணைந்து கடமையாற்றுகின்றனர்.

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஆக பணியாற்றிய ஒரு மாணவன் மீது மிகவும் அன்பு கொண்டு அவன்  படிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார் பால ஹாசன்.
இந்த சூழ்நிலையில் அந்த மாணவன் தங்கியிருந்த ஹாஸ்டலில் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தகவல் வரவே புலன் விசாரணையில் இறங்குகிறார் பால ஹாசன்.

அதேசமயம் வேறு சில இளைஞர்களும் விபத்து மற்றும் தற்கொலை என்று மரணத்தை தழுவுகின்றனர்.

இந்த மரணங்களுக்கெல்லாம் ஏதோ ஓர் ஒற்றுமை இருப்பதை உணரும் பால ஹாசன் விசாரணையை தீவிரப்படுத்துகிறார்.

“இந்த விசாரணையை நிறுத்திவிட்டு வேறு வேலையை பார்…” என்று மேல் அதிகாரியான இன்ஸ்பெக்டர் பால ஹாசனை தடுத்து நிறுத்த முயற்சி செய்கிறார்.

ஆயினும் விடாப்பிடியாக விசாரணையை தொடரும் பால ஹாசன் பல அதிர்ச்சிகரமான உண்மைகளை கண்டறிகிறார்.

இந்த மரணங்களுக்கு பின்னால் இருக்கும் மெடிக்கல் கிரைம் என்ன என்பதையும் அது எவ்வாறு நடந்தது அதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதையும்  சப் இன்ஸ்பெக்டர் பால ஹாசன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் ரேகை படத்தின் கதை.

துடிப்பான இளம் போலீஸ் அதிகாரி வேடத்தில் திறம்பட நடித்திருக்கிறார் பாலா ஹாசன்.
கல்யாண ஏற்பாடு நடக்கும் போது கடமையைச் செய்ய காதலருடன் பவித்ரா ஜனனி செல்வது ரசமான காட்சி. அதேபோல் தனக்கு பொருத்தமானவர் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளை அல்ல உடன் பணியாற்றும் சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தான் என்பதை பவித்ரா ஜனனி உணரும் காட்சி நெகிழ்ச்சி.

சிக்கலான புலன் விசாரணைக்கு ஊடாக மென்மையான காதலையும் இணைத்து விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கிறார் இயக்குனர் தினகரன்.
அக்கா அண்ணி என்று வழக்கமான திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் வரும் வினோதினி வைத்தியநாதனுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரம் ரேகை வெப் சீரிஸில் கிடைத்திருக்கிறது.
அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார்.

போஸ்ட் மார்டம் என்பதை பிணத்தை அறுத்து ஆய்வு செய்வது என மிகச் சாதாரணமாக கடந்து போகிறோம்.

ஆனால் அதில் உள்ள முக்கியமான விஷயத்தை ரேகை வெப் சீரியஸ் வெளிப்படுத்துகிறது.

விறுவிறுப்பான வெப்சீரிஸாக உருவாக்கப்பட்டிருக்கும் ரேகை சஸ்பென்ஸ் பட ரசிகர்களை கவரும் என்பதில் ஐயமில்லை.