ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்

0

 93 total views,  1 views today

ரிப்பப்பரி – திரைப்பட விமர்சனம்

மாஸ்டர் மகேந்திரனும் அவரது நண்பர்கள் இருவரும் யூட்யூபில் சமையல் நிகழ்ச்சி நடத்துகிறோம் என்ற பெயரில் ஊருக்குள் ஏகப்பட்ட அலப்பறைகள் செய்கிறார்கள்.

யூட்யூப் நிகழ்ச்சிக்கு ஒரு ரசிகை தங்க மீன் என்ற புனைப் பெயரில் மாஸ்டர் மகேந்திரனை பாராட்டி வாட்ஸ் அப் தகவல்கள் அனுப்புகிறார். மகேந்திரனும் காணாத அந்தக் காதலியை மனதிற்குள் காதலிக்க ஆரம்பிக்கிறார்.

மகேந்திரனின் நண்பர் ஒருவர் காதல் திருமணம் செய்துகொண்டு மகேந்திரனைக் காண வரும்போது, ஒரு பேயால் கொலை செய்யப்படுகிறார்.

இதுவரை நகைச்சுவையாக சென்று கொண்டிருந்த கதை இப்போது பேய் பிசாசு என கொஞசம் ட்ராக் மாறியும் நகைச்சுவை தண்டவாளத்திலேயே பயணிக்கிறது.

மகேந்திரனின் நண்பனைக் கொன்ற பேய் ஜாதி வெறி பிடித்த பேய் என்றும் (?) அது ஜாதி மாறி திருமணம் செய்துகொள்பர்களைக் கொன்று விடும் (!)  என்ற மகேந்திரனுக்கு தெரிய வருகிறது.
இந்தக் கொலைகள் குறித்து விசாரணை நடத்தும் போலீஸ் இன்ஸ்பெக்டர், பேயைக் கண்டு பிடிக்கும் பொறுப்பை மகேந்திரன் அண்ட் கோவிடம் ஒப்படைக்கிறார்.

பேய் இருப்பதாக சொல்லப்படும் ஊரில்தான் தன் காதல் ரசிகை தங்க மீனும் இருக்கிறாள் என்பதால் மகேந்திரன் பேயை கண்டு பிடிக்கும் சாக்கில் தன் காதலியையும் பார்த்துவிடலாம் என்று அந்த ஊருக்குப் புறப்படுகிறார்.

பேய் ஒரு பெரிய லிஸ்ட்டையே வைத்து ஒவ்வொருவராகப் போட்டுத் தள்ளுகிறது என்பதும், அந்த லிஸ்ட்டில் தன் பெயரும் இருப்பதும் மகேந்திரனுக்கு தெரிய வருகிறது.

பேயை மகேந்திரன் அண்ட் கோ பிடித்தார்களா…..மகேந்திரன் தன் காதலியைப் பார்த்தாரா….அவரது காதல் கைகூடியதா….என்பதை எல்லாம் இரண்டாம் பாதியில் கொஞ்சம் தலை சுற்றும் அளவுக்கு விவரிக்கப்படுகிறது.

துவக்கத்தில் கொலையுண்ட மனிதத் தலை போஸ்ட் பாக்ஸில் இருப்பதும், தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் உள்ள தலையைப் பார்த்து “உள்ளே என்னடா பண்றே… ” என்று கேட்பதும் படத்தைப் பற்றிய நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. ஆனால் போகப்போக ஏமாற்றமே மிஞ்சுகிறது.

குறிப்பாக பேய்க்கு ஒரு நீளமான ப்ளாஷ் பேக் கதை இருப்பது பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது.
படத்தில் ஆங்காங்கே வரும் நகைச்சுவைதான் பெரிய ஆறுதல்.

தங்கமீன் காதலியை மகேந்திரனுக்கு போட்டியாக காதலிக்க வரும் செய்யும் அட்டகாசங்கள் ரொம்பவே ரசிக்க வைக்கின்றன.

தளபதி ரதனத்தின் ஒளிப்பதிவு படத்தை நன்கு காப்பாற்றுகிறது. பகல் காட்சிகளை பளிச் என்றும், இரவுக் காட்சிகளை கண்ணுக்கு இடையூறு இல்லாமலும் கனகச்சிதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

படத்தைத் தயாரித்து இயக்கிய அருண் கார்த்திக் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் தரமானதொரு நகைச்சுவைப் படத்தைக் கொடுத்திருக்கலாம். என்ன காரணத்தாலோ தவறவிட்டுவிட்டார்….

கொஞ்சம் சிரித்தவிட்டு வரலாம் என்று மூளையை கழட்டி வீட்டிலேயே வைத்து விட்டு ரிப்பப்பரி படத்துக்குப் போனால் சிரித்து ரசித்துவிட்டு வரலாம்.

மதிப்பெண் 2.5 /5

Share.

Comments are closed.