Friday, October 23

சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம்

Loading

சட்டமும் நீதியும் இணைய தொடர் விமர்சனம்

ஜீ 5 ஓ.டி.டி தளத்தில் வெளியாகியிருக்கும் ‘சட்டமும் நீதியும்’,  திரைப்படத்தைவிட வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டிருக்கும் தொடர் என தாராளமாகச் சொல்லலாம்.

நீதி மன்ற வளாகத்திலேயே ஒரு முதியவர் தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்யும் முதல் காட்சியே கதைக்குள் நம்மை இழுத்துக்கொள்கிறது.

ஏன் அந்த நபர் தற்கொலை செய்து கொள்கிறார்?

அவருக்கு கிடைக்காமல் போன நீதி என்ன என்பது காட்சிகளாக விரியத் தொடங்குகிறது.

வழக்கறிஞரான ‘பருத்தி வீரன்’  சரவணன், கேஸ் எதுவும் கிடைக்காமல் நீதிமன்ற வளாகத்திலேயே டீக்கடைக்கு அருகில் நோட்டரி பப்ளிக் என்ற போர்டை வைத்துக்கொண்டு, சக வழக்கறிஞர்களின் ஏளனத்துக்கு ஆளாகிறார்.

கோர்ட்டில் மட்டும் இல்லை. வீட்டிலும் மகன்கூட மதிப்பதில்லை.

ஆனால் சட்டக்கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே சரவணனின் திறமைகளை அறிந்த நம்ரிதா என்ற இளம் பெண், அவரது சிபாரிசில் ஜூனியராக சேர சில வழக்கறிஞர்களிடம் முயற்சிக்க, சரவணன் சிபாரிசு காரணமாகவே அவரை சேர்த்துக்கொள் மறுக்கிறார்கள்.

சட்டம் படிக்கச் சொல்லி மகனிடம் சரவணன் சொல்ல, “முதலில் நீங்கள் ஒரு கேஸாவது எடுத்து ஜெயித்துக் காட்டுங்கள் பிறகு நான் சட்டம் படிக்கிறேன்” என மகன் சொல்கிறான்.

இந்த சூழ்நிலையில் கோர்ட் வாசலில் இறந்தவர் மரணம் குறித்து பொது நல வழக்கு ஒன்றை சரவணன் தொடர, நம்ரிதா அவருக்கு ஜூனியராகப் பணியாற்றத் தொடங்குகிறார்.

காணாமல் போன் தன் மகளை கண்டு பிடிக்கச் சொல்லி போலீஸில் முதியவர் புகார் செய்ய, அது கண்டுகொள்ளப்படாமல் தன்னை அலைக்கழித்த காரணத்தால்தான் நீதி கேட்டு முதியவர் கோர்ட் வளாகத்தில் தற்கொலை செய்து கொள்கிறார்.

காணால் போன் அந்தப் பெண்ணை கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும் என சரவணன் ஆட்கொணர்வு மனு (ஹேபியஸ் கார்பஸ்) மனு போடுகிறார்.

காணாமல் போன முதியவரின் மகள் என்ன ஆனார்?  அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் விறுவிறுப்பான காட்சிகளாக நகர்கறது.

கதையின் நாயகனாக வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி வேடத்துக்கு கச்சிதமாகப் பொருந்தும் சரவணன், அளவான மீட்டரில் அருமையாக நடித்திருக்கிறார்.

ஜூனியராக வரும் நம்ரிதா பாத்திரத்துக்கு அவரது குரல் அவ்வளவாக பொருந்தாமல்,  கொஞ்சம் குழந்தைத்தனமாக இருக்கிறது என்றாலும், தன் துடிப்பான நடிப்பின் மூலம் அதை ஈடு செய்து கவனம் ஈர்க்கிறார்.

விபின் பாஸ்கர் இசையமைப்பில் இறுதியில் வரும் பாடல் கருத்தாழம் மிக்கது.

எஸ். கோகுல கிருஷ்ணனின் ஒளிப்பதிவு மிகப் பெரிய பலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

பொதுவாக நீதி மன்றக்காட்சிகளில் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருப்பது தவிர்க்க முடியாது என்றாலும், அவற்றை போரடிக்காத காட்சிகளாக உருவாக்கிய விதத்தில் இயக்குநர் பாலாஜி செல்வராஜ் வெற்றி பெற்றிருக்கிறார்.

‘விலங்கு’ ‘அயலி’ என மாறுபட்ட தொடர்களை வழங்கும் ஜீ5 ஓடிடி தளத்தின் மற்றும் ஒரு தரமான படைப்பு சட்டமும் நீதியும்.