![]()

வெற்றி தோல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல… எதையும் சுலபமாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு உணர்த்துவதற்கு உருவாக்கப்பட்ட படம் ஸ்கூல்.
இரண்டாம் இடத்தில் உள்ள தனது பள்ளியை முதல் இடத்திற்கு கொண்டுவர, அதன் தாளாளர் முயற்சிக்கிறார்.
இதற்காகவே பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்ஸ் பகவதி பெருமாள் ‘மைண்ட் செட் ஆஃப் சக்சஸ்’ என்ற நூலை எழுதி வெளியிடுகிறார்.
தலைமை ஆசிரியர் எதிர்பார்த்த நேர்மறை சிந்தனைக்கு மாறாக, இந்த நூல் எதிர்மறை சிந்தனைகளை மாணவர்கள் இடையே விதைக்கிறது.
தொடர்ந்து பல அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.
மாணவ மாணவியர் பலரின் உயிரை பலி வாங்கும் அளவுக்கு நிலைமை செல்கிறது.
பள்ளியில் உலவும் ஆவிகளை கட்டுப்படுத்தி, அங்கு நடக்கும் அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சாமியார் ஆர்கே வித்யாதரன் வருகிறார்.
அவரது முயற்சி வெற்றி அடைந்ததா இல்லையா என்பதுதான் ஸ்கூல் படத்தின் கதை.
முன்னாள் ஆசிரியர்களாக யோகி பாபுவும் பூமிகா சாவ்லாவும் வருகிறார்கள்.
காமெடி கம் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பு யோகி பாபுவுக்கு என்றாலும், நினைவில் நிற்கும்படி அந்த பாத்திரப் படைப்பு இல்லை.
பூமிகா சாவ்லா மாதிரி திறமை மிக்க சீனியர் நடிகையை இப்படியா வீணடிப்பது?
நிழல்கள் ரவி, கே எஸ் ரவிக்குமார், சான்ஸ் போன்றவர்கள் படத்தில் நடித்திருந்தாலும் அவர்களுக்கு பெரிதாக வேலை இல்லை.
படத்திற்கு பாடல்களை எழுதி இசையமைத்திருக்கிறார் இளையராஜா. வழக்கம்போல் பின்னணி இசையில் தன் முத்திரையை பதிக்க தவறவில்லை ராஜா.
முழு படமும் ஒரு பள்ளியிலேயே நடக்கிறது என்றாலும் பள்ளி கட்டடத்தையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை அலுப்பு தட்டாத வகையில் படமாக்கிய ஒளிப்பதிவாளர் ஆதித்யா கோவிந்தராஜன் பணி பாராட்டுக்குரியது.
பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரிடம் நேர்மறை சிந்தனை விதைத்து அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்ய வேண்டும் என்ற இயக்குனர் கே ஆர் கே வித்யாதரன் முயற்சி வரவேற்கத்தக்கது என்றாலும் அதற்காக இன்னும் மெனக்கட்டு இருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.





