![]()

சேத்துமான் – விமர்சனம்
தயாரிப்பாளர் அவதாரமெடுத்து, தரமான படங்களை மட்டுமே தொடர்ந்து தரும் இயக்குநர் ரஞ்சித்தின் அடுத்த படைப்புதான் சேத்துமான்.
பெருமாள் முருகன் எழுதிய வறுகறி என்ற கதையை அறிமுக இயக்குநர் தமிழ் அருமையாக திரைக்கதை அமைத்து அற்புதமாக இயக்கியிருக்கிறார்.
பொட்டல்வெளிக் காட்டில் பூச்சியப்பன் என்ற பெரியவர் தன் பேரன் குமரேசனை பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார். “நம் வீடு மட்டும் ஊரிலிருந்து ஏன் இவ்வளவு தூரம் விலகியிருக்கிறது?” என்று தாத்தாவிடம் கேட்கிறான் பேரன்.
பள்ளிக்கு அழைத்துச் செல்லும்போதும், திரும்ப அழைத்து வரும்போதும், படிப்பின் அவசியத்தையும் அது மட்டுமே ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மை மீட்டு தலை நிமிர்ந்து நிற்கச் செய்யும் என்பதையும் தாத்தா தன் பேரன் குமரேசனுக்கு சொல்லிக் கொடுத்தபடி இருக்கிறரா்.
குமரேசனின் தாய் தந்தை இருவருமே ஆதிக்க சக்தியின் அடங்காத ஜாதி வெறிக்கு அநியாயமாக பலியானவர்கள்தான்.
பூச்சியப்பன் அந்த ஊர் பண்ணையாரிடம் எடுபிடி வேலைகள் செய்து கொண்டிருந்தாலும், கூடை முடைந்து வந்து அதை பெண்களிடம் விற்பனை செய்வார். பண்ணையாரின் மனைவி அந்தக்கூடையைக்கூட விலையைக் குறைத்துப்பேசிதான் வாங்கிக் கொள்வாள்.
பண்ணையாருக்கு சேத்துமான் எனப்படும் பன்றிக் கறி சாப்பிடும் ஆசை வருகிறது. மனைவியின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பன்றிக்கறி சாப்பிட ஆட்களை சேர்க்கிறார்.
பூச்சியப்பன் உதவியுடன் பன்றியை வாங்கி வந்து சமைக்கும்போது பண்ணையாருக்கும் ஏற்கெனவே பிரச்னை ஏற்பட்ட பங்காளிக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு கைகலப்பில் முடிகிறது. இந்த மோதலில் அநியாயமாக பேச்சியப்பன் பலியாகிறரா்.
ஒரு சிறுகதையையும் சிறப்பான திரைக்கதை மூலம் தரமான படமாக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கும் இயக்குநர் தமிழுக்கு தாராளமாக ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
வண்ணங்களை வாரி எடுத்து காட்சிகளை அழகு படுத்தாமல் கதைக்கு என்ன தேவையோ, காட்சியமைப்புக்கு எது அவசியமோ அதை மட்டும் படம் பிடித்திருக்கும் பிரிதீப் காளிராஜாவின் ஒளிப்பதிவு படு நேர்த்தி.
ஒரு படத்தின் ரீரெக்கார்டிங் நன்றாக இருக்கிறது என்று எந்த பத்திரிகை விமர்சகராக எழுதினால் அந்தப் படத்தின் இசையமைப்பாள்ர் எம்பயர் ஸ்டேட் பில்டிங்கில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று சொல்வார் புகழ்பெற்ற அமெரிக்க திரைப்பட விமர்சகர் ஒருவர்.
ரீ ரெக்கார்டிங் என்பதே படத்தில் இருப்பது தெரியாமல் இசையமைப்பாளர் பிந்து மாலினி தன் பணியை திறம்பட செய்திருப்பதால்தான் திரைப்படம் பார்க்கும் உணர்வே இல்லாமல் கண்முன் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் அனுபவத்தைத் தருகிறது சேத்து மான்.
ஸ்டன்னர் ஷ்யாம் சண்டைக்காட்சியை அமைத்திருந்தாலும், ட்ஷ்யூம் ட்ஷ்யூம் பஞ்ச்கள் இல்லாமல் சாலையோரத்தில் இருவர் அடித்துக் கொள்வதுபோல் சண்டைக் காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.
இப்படி படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் தங்கள் பங்களிப்பை வெகு சிறப்பாக செய்திருப்பதால்தான் யதார்த்தத்தை விட்டு விலகாத படைப்பாக மலர்ந்திருக்கிறது இந்த சேத்துமான்.
குறிப்பாக தாத்தாவாக வரும் மாணிக்கம், பேரன் குமரேசனாக வரும் அஸ்வின், பண்ணையாராக வரும் பிரசன்னா, பங்காளியாக வரும் சுருளி, பண்ணையாடியின் மனைவியாக வரும் சாவித்ரி, பெற்ற பிள்ளையைக் கொஞ்சுவதுபோல் வளர்க்கும் பன்றியை கொஞ்சும் குமார் என அனைவருமே மறக்க முடியாத பாத்திரங்கள்தான்.
கதாசிரியர் பெருமாள் முருகனே நறுக்கு தெறித்தாற்போல் நச்சென்று வசனங்களையும் எழுதியிருக்கிறார். உதாரணத்துக்கு “கண்ணாடி டம்ளரில்தான் டீ வேண்டும் என உரிமையாக கேட்டு வாங்கி குடி” என பன்றி வளர்க்கும் குமார் சொல்ல, அதற்கு பூச்சியப்பன் “அவங்க குடிச்ச கிளாஸில் நான் குடிக்கணுமான்னு யோசிக்கிறேன்” என்று சொல்லும் காட்சி.
வீட்டில் ஒரு நாள் தாத்தா செத்ததுபோல் நடித்து ஏமாற்றிவிட்டு பின்னர்
எழுந்து வருவதுபோல் இப்போதும் எழுந்து வரமாட்டாரா என்ற ஏக்கத்துடன்
குமரேசன் செத்துப்போன தன் தாத்தாவின் மார்பில் காதை வைத்து பார்ப்பது மனதை
கனக்கச் செய்யும் காட்சி.
பண்ணையாடிக்கும் அவரது பங்காளிக்கும் க்ளைமாக்ஸில் ஏற்படும் சாதாரண வாய்ச் சண்டை கொலையில் முடிவதற்கு, படத்தின் துவக்கத்திலேயே மரக்கிளையை வெட்டியது தொடர்பாக ஏற்படும் பஞ்சாயத்து காட்சியை அஸ்திவாரமாக அமைத்திருக்கிறார் இயக்குநர்.
தாத்தா பேரனை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வழியில் தென்படும் தனியார்
பள்ளி விளம்பரப் பாதாகைகள், சாலையில் செல்லும் தனியார் பள்ளி வாகனம் என
சின்ன சின்ன விஷயங்களையும் சிறப்பாகக் கையாண்டு முத்திரை பதிக்கிறார்
இயக்குநர் தமிழ்.
கண்டிப்பாக பார்த்தே ஆக வேண்டிய படம் சேத்துமான்.
மதிப்பெண் 4 5
