Saturday, October 24

சில நொடிகளில் – விமர்சனம்

Loading

சில நொடிகளில் – விமர்சனம்

முழுக்க முழுக்க லண்டனில் நடக்கும் கதையை லண்டனிலேயே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வினய் பரத்வாஜ்.

பிரபல டாக்டர் ரிச்சர்ட் தன் மனைவி புன்னகைப்பூ கீதாவுடன் லண்டனில் வசிக்கிறார். படுக்கையைப் பகிரந்து கொள்ளும் அளவுக்கு மாடல் அழகியான யாஷிகா ஆனந்துடன் அவருக்கு தொடர்பு இருக்கிறது.

யாஷிகாவும் ரிச்சர்ட்டும் போதை மாத்திரை சாப்பிட்டுவிட்டு உறவில் ஈடுபடும்போது எதிர்பாராத வகையில் யாஷிகா இறந்து விடுகிறார். அந்த சமயத்தில் மனைவி கீதா தன் தோழிகளுடன் வீட்டு வருவதாக தொலைபேசில் சொல்ல, அவசரம் அவசரமாக யாஷிகாவின் பிணத்தை மறைக்கிறார் ரிச்சர்ட்.

இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ஒரு பெண் புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொண்டு, ரிச்சர்ட்டிடம் பணம் பறிக்க முயல்கிறாள்.

இந்த பிரச்சனையிலிருந்து ரிச்சர்ட் எப்படி தப்பித்தார்….அவரது மனைவி கீதாவுக்கு யாஷிகா மரணம் குறித்து தெரியவந்தபோது அவர் எப்படி எதிர்வினையாற்றினார் என்பதை விவரிக்கும் படம்தான் சில நொடிகளில்.

லண்டனின் வனப்பு மிகுந்த பகுதிகளை மிக அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் அபிமன்யூ சதானந்தன். லண்டன் நகர அழகை ஒரு நாள் சுற்றுப் பயணத்தில் பார்த்து ரசித்தது போன்ற அனுபவத்தைத் தருகிறது சில நொடிகளில் திரைப்படம்.

ரோஹித் குல்கர்னி இசையில் உருவான பாடல்கள் சிறப்பு. குறிப்பாக பாரதியார் பாடலுக்கு இசையமைத்த விதமும், படமாக்கிய முறையும் ரசிக்க வைக்கிறது.

ஆனால் படத்தின் டைட்டில் கார்டில் இரண்டு மூன்று பாடலாசிரிகளுக்கு மத்தியில் பாரதியார் பெயரைப் போட்டிருப்பதுதான் உறுத்தலாக இருக்கிறது.

பாலே நடன பாணியில் புன்னகைப் பூ கீதா ஒருவருடன் சேர்ந்து ஆடும் நடனம் பலே சொல்ல வைக்கிறது.
எதிர்பாரா திருப்பங்களும் சஸ்பென்ஸும் படத்தை வேறு லெவலுக்கு கொண்டு செல்கிறது.

ஹாலிவுட் படங்களைப்போல் படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் படமாக்கப்பட்டிருக்கிறது.
சுமார் ஒன்றரை மணி நேரம் ஒடும் இப்படத்தில் வசனங்களும் குறைவு. பாடல்களை நீக்கிவிட்டு கொஞ்சம் நீளத்தையும் குறைத்து ஆங்கிலத்தில் டப் செய்து வெளியிட்டால் நல்ல வரவேற்பை பெறக்கூடிய படம் சில நொடிகளில்.

மதிப்பெண் 3/5