![]()
சிறை _ விமர்சனம்
ஆயுதப்படை காவல் பிரிவில் தலைமைக் காவலராக இருப்பவர் விக்ரம் பிரபு.
கொலைக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைக் கைதியாக இருக்கும் அக்ஷய் குமாரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த சிவகங்கைக்கு விக்ரம் பிரபு அழைத்துச் செல்ல, பாதுகாப்புக்காக மேலும் இரண்டு காவலர்கள் உடன் செல்கின்றனர்.
இவர்கள் செல்லும் பேருந்து, தேனீர் அருந்துவதற்காக வழியில் ஓரிடத்தில் நிறுத்தப்படுகிறது.
அப்போது ஏற்படும் ஓர் எதிர்பாராத பிரச்சனையில் கைதி அக்ஷய் குமார் தப்பித்துச் சென்று விடுகிறார்.
அவரைத் தேடி மற்றொரு பேருந்தில் விக்ரம் பிரபுசெல்லும்போது அந்தக் கைதி, ஒரு காவல் நிலையத்தில் சரணடைந்திருப்பது தெரிய வருகிறது.
தப்பித்துப் போனதாக கூறப்படும் விசாரணை கைதி ஏன் போலீஸ் நிலையத்தில் சரண்டர் ஆனார்?
அவர் எப்படி கொலைகாரர் ஆனார்? என்பதை விவரிக்கும் படம் தான் சிறை.
தலைமைக் காவலராக பலமான பாத்திரத்தில் வரும் விக்ரம் பிரபு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி நெஞ்சில் நிறைகிறார்.
மொத்த படத்தையும் தாங்கிப் பிடிப்பது விக்ரம் பிரபுதான் என்று சொன்னால் மிகையாகாது.
விசாரணைக் கைதியாக வரும் அறிமுக நடிகர் அக்ஷய் குமாருக்கு இது முதல் படம் மாதிரி தெரியவில்லை. பல படங்களில் நடித்த அனுபவசாலியைபோல், தான் ஏற்ற பாத்திரத்தில் தன்னை பொருத்திக்கொண்டு மிக இயல்பாக நடித்திருக்கிறார்.
காதலியிடம் காட்டும் கனிவாகட்டும், அம்மாவை அடித்தவர்களை வெறிகொண்டு தாக்குவதிலாகட்டும் நடிப்பில் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் அக்ஷய் குமார்.
அவரது காதலியாக வரும் அனிஷ்மா அனில் குமார் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். வசீகரிக்கும் புன்னகையுடன் தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்தவும் தவறவில்லை.
மெயின் ஸ்ட்ரீம் படத்தில் கூட நல்லதொரு மெசேஜை சொல்ல முடியும் என்று நிரூபித்து இருக்கும் அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரிக்கு நமது விசேட பாராட்டு.
படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஜஸ்டின் பிரபாகரனின் பின்னணி இசை.
இவை இரண்டும் படத்தை இன்னொரு தளத்துக்கு உயர்த்துகின்றன.
ஏ ஆர் எனப்படும் ஆர்ம்டு ரிசர்வ் (Armed Reserve) போலீஸ் குறித்து நமக்கு மேலோட்டமாக தெரிந்திருக்கலாம். ஆனால் அவர்களின் பணிகள், அதில் உள்ள சிக்கல்கள், சிரமங்கள் இவற்றையெல்லாம் இந்த அளவுக்கு அழகாகவும் ஆழமாகவும் சொன்ன படம் எதுவும் வந்ததாக நினைவில்லை.
இந்த ஆண்டின் சிறந்த படம், சிறந்த இயக்குனர் உட்பட பல்வேறு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை குவிக்கப் போகும் சிறை திரைப்படத்தை குடும்பத்துடன் கண்டு மகிழலாம்.
மதிப்பெண்4.5/5


