Friday, October 23

சைரன் _ விமர்சனம்

Loading

முதல் வரியிலேயே சொல்ல வேண்டிய விசயம்… ‘ஜெயம்’ ரவிக்கு ஜெயத்தை அளிக்கும் வெற்றிகரமான திரைப்படம் ‘சைரன்.’
செய்யாத குற்றத்திற்காக சிறைக்கு செல்லும் சூழல், ஜெயம் ரவிக்கு உருவாகிறது. இந்த நிலையில், 14 வருடம் கழித்து, பரோலில் வருபவர், தன்னை அந்த நிலைக்கு தள்ளியவர்களை எப்படி பழி வாங்குகிறார் என்பது தான் படத்தின் ஒன்லைன். திரைக்கதையை மிக சாதுர்யமாக உருவாக்கி ரசிக்கவைத்து இருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்கியராஜ்.

ஜெயம் ரவியின் லுக்கே மிரட்டுகிறது. நடுத்தர வயது, நரை முடி, நிதான நடை என தோற்றத்திலேயே அசத்துகிறார். அதே நேரம், சண்டை காட்சிகளில் அதிரடி வேகம் காட்டி மிரட்டுகிறார்.
பிளாஷ்பேக் காட்சிகளில் வழக்கமான ரொமாண்டிக் ஹீரோவாக கவர்கிறார். நாயகியுடனான அறிமுக காட்சியிலேயே நம்மை ரசிக்கவைத்து விடுகிறார். நாயகி, காது கேளாத நர்ஸ் என்பதை அறியாமல் அவரிடம் கோபம் காட்டுவது.. பிறகு உண்மை அறிந்து காதல் வழிய வருத்தம் தெரிவிப்பது என, படம் முழுதும் ஜெயம் ரவியின் ராஜாங்கம்தான்.
கீர்த்தி சுரேஷ் காவல் அதிகாரியாக வந்து மிரட்டுகிறார். பூனைக்குட்டி முகத்தை வைத்துக்கொண்டு, புலிப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார். அதுவும் ஆஜானுபாகுவான ஜெயம் ரவியின் சட்டையைப் பிடித்து தெருவில் ஆக்ரோசமாக இழுத்து வரும் காட்சியில் அட போட வைக்கிறார்.
எஸ்.ஐ.யை, விநாடிக்கு விநாடி, “மூர்த்தி.. மூர்த்தி” என அதட்டல் குரலில் அழைப்பதாகட்டும், கோபம் வந்தால் எதிராளியின் முகத்தில் பட்டென அறைவதாகட்டும், கரடு முரடான காவல் அதிகாரியை கண்முன் நிறுத்துகிறார் கீர்த்தி.

காவல் உயர் அதிகாரியாக வரும் சமுத்திரகனி வில்லனாக முத்திரை பதிக்கிறார். அவருடன் கூட்டணி போட்டு, அரசியல்வாதிகளாக வரும் அழகம் பெருமாள், அஜய் ஆகியோரும் கதிகலங்க வைக்கிறார்கள்.

பரோலில் வரும் ஜெயம் ரவியுடன் கூடவே வரும் ஷேடோ ( சிரிப்பு போலீசாக) யோகி பாபு. அவர் வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு உத்திரவாதம். ‘என்னை போலீசா நினைக்காதே.. பெயரைச் சொல்லி கூப்பிடு’ என முகத்தை அப்பாவியாக வைத்துக்கொண்டு சொல்வது ஒரு உதாரணம்.

ஜெயம் ரவியின் மகளாக வரும் யுவினா பார்வதி சிறப்பாக நடித்து இருக்கிறார். அப்பா மீது காட்டும் வெறுப்பு, பள்ளியில் படும் அவமானம் என உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
ஜெயம் ரவியின் காதலி – மனைவியாக வரும் அனுபமா, காது காட்காத – வாய் பேசமுடியாத கதாபாத்திரத்தில் வருகிறார். ஆனாலும் பேசாமலேயே சிறப்பாக நடித்து உள்ளார்.

மொத்தத்தில் அனைவருமே சிறப்பாக நடித்து உள்ளனர்.

G.v.பிரகாஷ் இசையும், S.K.செல்வகுமார் ஒளிப்பதிவும் படத்துக்கு பக்க பலமாக அமைந்திருக்கிறது.

ஜி.வி. பிரகாஷின் இசையில் ‘அடி ஆத்தி..’ பாடல் துள்ளல்! அதே போல ‘கண்ணம்மா..’ பாடல், நெகிழ்வு!

சாம் சி.எஸ்ஸின் பின்னணி இசையும் சிறப்பு. குறிப்பாக த்ரில்லர் காட்சிகளில், கூடுதல் பதட்டத்தை ஏற்படுத்துகிறது.
செல்வகுமாரின் ஒளிப்பதிவு, ரூபனின் படத் தொகுப்பு, சக்தி வெங்கடராஜின்
கலை இயக்கம் அனைத்தும் அருமை.
காதல், குடும்ப சென்டிமெண்ட், அதிரடி என மூன்று கோணங்களிலும் ரசிக்க வைத்து இருக்கிறார் இயக்குநர் அந்தோனி.
குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.

அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படம், ‘சைரன்.’

மதிப்பெண் 4/5