Wednesday, September 30

சுல்தான் – விமர்சனம்

Loading

நூற்றுக்கும் மேற்பட்ட அடியாட்களை வைத்து ரெளடியிசம் செய்து, சென்னை மாநகரையே கலக்கி வரும் தாதா நெப்போலியன். அவரது மகனான கார்த்தி நன்கு படித்துவிட்டு மும்பாயில் பணியாற்றுகிறார்.

கார்த்தி ஒரு முறை தந்தையைக் காண ஊருக்கு வரும்போது, ஒரு குழு மோதல் நடைபெறுகிறது. இதில் நெப்போலியனின் அடியாட்கள் பலர் கொல்லப்படுகின்றனர்.
இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவனின் தாயார், “உன் அப்பா அரிவாளைக் கொடுத்து யாரையாவது வெட்டச் சொல்லி உன்னை அனுப்புவாரா?”  என்று கேட்கும் கேள்வி கார்த்தியின் கண்ணை திறக்கிறது.

அப்பாவின் ரெளடியிசம் பிடிக்காமல் கார்த்தி ஊருக்கு கிளம்ப முடிவு செய்கிறார். அப்போது திடீரென நெப்போலியன் இறந்து விட, கார்த்தி அடியாட்கள் அனைவரையும் திருத்தி, புது வாழ்க்கைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறார்.

கிராமம் ஒன்றில் விவசாய நிலங்களை ஆக்ரமித்து தொழிற்சாலை கட்ட நினைக்கும் கார்ப்பரேட் முதலாளி, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊர் மக்களை அநியாயமாக கொன்று குவிக்கிறார். எனவே அந்த கிராம மக்கள் கார்த்தியிடம் வந்து தங்கள் ஊர் மக்களை காப்பாற்ற அந்த கார்ப்பரேட் முதலாளியைக் கொலை செய்ய வேண்டும் என சொல்கின்றனர். “நல்ல காரியத்துக்காக செய்யப்போகும் கார்ப்பரேட் முதலாளி கொலை மூலம் பாவக்கறைகளை கொஞ்சமாவது குறைத்துக்கொள்ள முடியும்”  என்று தன் பிரதான அடியாளிடம் சொல்லும் நெப்போலியன் இதற்காக பணம்கூட வாங்காமல் கொலை செய்வதாக சத்தியம் செய்து உறுதியளிக்கிறார்.

இறப்பதற்கு முன் நெப்போலியன் செய்துகொடுத்த இந்த சத்தியத்தை நிறைவேற்றியே தீருவது என்று அவரது அடியாட்கள் கிராமத்துக்கு செல்ல முடிவு செய்கின்றனர். அவர்களை திருத்த நினைக்கும் கார்த்தியும் உடன் செல்கிறார்.

வன்முறை கூடாது என அடியாட்களை திருத்த நினைக்கும் கார்த்தியே அடிதடியில் இறங்கும்படி சூழ்நிலை அவரை நிர்பந்திக்கிறது.
கார்த்தியும் அடிதடியில் இறங்கி நெப்போலியன் இடத்துக்கு வந்தாரா?  கார்ப்பரேட் முதலாளியை எப்படி வெற்றி கொள்கின்றனர் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் படமாக உருவாகியிருக்கிறது சுல்தான்.

கார்த்தியின் நடிப்பு படத்துக்கு படம் நன்கு மெருகேறி, புதியபரிமாணங்களைத் தொட்டு வருவது கண்கூடு. சுல்தான் படத்தில் நாயகி ராஷ்மிகா மந்தனாவை அசடு வழிய காதலிப்பதாகட்டும், அடியாட்களை திருத்துவதில் உறுதி காட்டுவதாகட்டும், கொலை வெறி கண்ணில் தெறிக்க வில்லனுடன் மோதுவதாகட்டும் அமர்க்களமாக நடித்து நெஞ்சில் நிறைகிறார் கார்த்தி.

படத்தின் துவக்கத்தில் சில காட்சிகளே வந்தாலும், மனதில் நிற்கும் வலுவான பாத்திரம் என்பதால் அதைப் புரிந்துகொண்டு தன் நடிப்பில் நியாயம் சேர்த்திருக்கிறார் நெப்போலியன்.

ஹீரோயிசத்துக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நாயகி அநேகமாக ஜீரோ என்பதால் ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிதாக ஒன்றும் வேலை இல்லை.

பிரதான அடியாளாக வரும் லால் குரல் ஒத்துழைக்கவில்லை என்றாலும், அதை நடிப்பால் ஈடுகட்டி அருமையாக நடித்திருக்கிறார்

படத்தில் மிகக் கடுமையன உழைப்பைக் கொட்டியிருக்கும் தொழில் நுட்பக் கலைஞர்களில் முதலிடம் திலீப் சுப்பராயனுக்குத்தான். நூறு அடியாட்கள் மோதும் குழு சண்டைக் காட்சிகள் அதிகம் என்பதால் சின்ன சின்ன விஷயங்களிலும் தன் முத்திரையைப் பதித்து கவனம் ஈர்க்க முயன்றிருக்கிறார்.

சத்யன் சூரியனின் கிராமத்து பசுமையையும், விளை நிலங்கள் தரிசாகிக்கிடப்பதையும் படமாக்கியிருக்கும் விதம் காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

விவேக் மெர்வின் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைக்கின்றன.

துவக்கத்திலிருந்து இறுதிவரை தொய்வின்றி படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன்.

மொத்தத்தில் ‘சுல்தான்’ மாமன்னன்.