ஸ்வீட் ஹார்ட் _ விமர்சனம்
சிறு வயதில் தன் தந்தையை விட்டுவிட்டு தன்னுடைய தாயார் வேறொருவருடன் வாழ சென்று விட்டதை கண் முன் பார்த்த சிறுவன் ரியோ, வளர்ந்த பிறகு குடும்பம் குழந்தைகள் உறவுகள் என பலவற்றிலும் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். ரியோ ராஜும் கோபிகா ரமேஷும் காதலிக்கிறார்கள். தேவையின்றி திருமணத்தை தள்ளிப் போடுவதாக நினைக்கும் ரியாவை பிரிவதற்கு முடிவு செய்கிறார் கோபிகா. இருவரும் பிரிந்த ஓரிரு மாதங்களிலேயே தான் கர்ப்பமாக இருப்பது கோபிகாவுக்கு தெரிய வருகிறது. கர்ப்பத்தை உறுதி செய்ய பல்வேறு முயற்சிகள் நடைபெறுகின்றன. குழந்தை வேண்டாம் என்பது ரியோவின் நிலைப்பாடு.
குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார் கோபிகா.
இறுதியில் நடந்தது என்ன என்பதை இக்கால இளைய சமுதாயத்திடம் ஏற்படும் பிரச்சனைகளை தொட்டு திரைக்கதை அமைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ்.சுகுமார்.
யார் யாரோ தயாரிக்கும் படங்களுக்கெல்லாம் அற்புதமாக இசையமைக்கும் யுவன் சங்கர் ராஜா தன் சொந்த படத்திற்கு ஏன் இப்படி ஏனோதானோவென்று இசை வைத்திருக்கிறார் என்ற கேள்வி எழாமல் இல்லை. காரணம் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான பாடல்கள் சுமார் ரகம் தான்.
படத்தின் மிகப்பெரிய ஆறுதல் நாயகன் ரியோவும் நாயகி கோபிகாவும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து, உள்வாங்கி வெகு சிறப்பாக நடித்திருப்பதுதான். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. முன்னும் பின்னும் ஆக காட்டப்படும் காட்சிகளை நான் லீனியர் முறையில் மிகச்சிறப்பாக தொகுத்து இருக்கிறார் எடிட்டர் தமிழரசன்.
இளைய தலைமுறை கவரும் படம் ஸ்வீட் ஹார்ட்.