![]()
தலைவன் தலைவி _ விமர்சனம்
குடும்பப் படங்களை இயக்குவதில் தனித்துவம் மிக்க இயக்குனர் பாண்டிராஜ், தனது பாணியிலிருந்து சற்றே விலகி நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கும் படம்தான் ‘தலைவன் தலைவி’.
தந்தை சரவணன், தாய் தீபா சங்கர், மற்றும் தம்பியுடன் இணைந்து ஹோட்டல் தொழில் ஈடுபட்டிருக்கிறார் விஜய் சேதுபதி.
அவருக்கு நித்யா மேனனுடன் திருமணம் நடந்து, குழந்தை ஒன்றும் பிறந்த பிறகு தம்பதிக்கிடையே ஏற்படும் பிரிவால் தாய் வீட்டில் செல்கிறார் நித்யா.
மருமகன் விஜய் சேதுபதிக்கு தெரியாமல் நித்யா மேனனின் குழந்தைக்கு மொட்டை அடிக்க அவரது குடும்பமே குலதெய்வம் கோயிலுக்கு செல்கிறது.
இந்தத் தகவல் தெரிந்து அவர்களுடன் சண்டை போடத் தயாராக விஜய் சேதுபதி கோவிலுக்கு வருகிறார்.
இதைத்தொடர்ந்து நடப்பது எல்லாம் சண்டை அல்ல… காமெடி கலாட்டா.
பாதி மொட்டை போட்ட தலையுடன் குழந்தை இருக்க, இரு தரப்பினரும் எதிர்தரப்பின் மீது மாறி மாறி குற்றம் சுமத்தி, கத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
கத்தி சண்டை படங்கள் எல்லாம் பார்த்திருப்போம். ஆனால் இது “கத்தி” பேசும் சண்டை.
காது ஜவ்வு கிழிந்து விடுமோ என்று எண்ணுமளவுக்கு இருக்கும் அதீத டெசிபல் அளவு வசனங்களை, சென்சார் போர்டு ‘கட்’ பண்ணுவது குறித்து இனிமேல் யோசிக்க வேண்டும்.
இந்த காமெடி கலாட்டா முடியும் போது வழக்கம்போல் தலைவனும் தலைவியும் இணைகிறார்கள். விஜய் சேதுபதியும் நித்யா மேனனும் மிகச் சிறப்பாக நடித்திருப்பதன் மூலம் தங்கள் பாத்திரங்களுக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.
கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு செல்லும் மனைவி நித்யா மேனனை (கொ)கெஞ்சி அழைத்து வருவதாகட்டும், மாமியாருக்கும் மருமகளுக்கும் ஏற்படும் சண்டையில் யார் பக்கம் நிற்பது என்று தடுமாறுவதாகட்டும் முத்திரை பதிக்கும் வகையில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவருடன் போட்டி போட்டு நடித்திருக்கும் நித்யா மேனனும் பல காட்சிகள் சோபிக்கிறார்.
மற்றும் யோகி பாபு, காளி வெங்கட், சென்ராயன், தேனப்பன், சித்ரா லட்சுமணன் போன்றவர்கள் மிகச்சிறிய வேடங்களில் வந்தாலும் நினைவில் நிற்கும்படி காட்சிகள் இருக்கின்றன.
படத்தின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சுகுமாரின் தரமான ஒளிப்பதிவு தான். கலர்ஃபுல் படப்பிடிப்பு, காட்சிகளுக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது என்றால் மிகையாகாது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும் பாடல்களும் பாஸ்மார்க் ரகம்.
மிகப்பெரிய மலைமீது ஆகாச வீரன்_பேரரசி என்று தலைவன் தலைவியின் கதாபாத்திரங்களின் பெயர்களை காட்டுவதுடன் துவங்கும் படம், பின்னர் மற்ற பாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் பெயர்களை காட்டாமல் கதாபாத்திரத்தின் பெயரை போடுவது ரசிக்க வைக்கிறது.
இப்படி பல இடங்களிலும் ரசனைக்குரிய காட்சிகளை தூவி இருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
நான் லீனியர் முறையில் சொல்லப்பட்ட கதையை மிக அழகாக படத்தொகுப்பு செய்து அசத்தி இருக்கிறார் எடிட்டர் பிரதீப் இ.ராகவ்.
கணவன் மனைவி மாமியார் மாமனார் நாத்தனார் கொழுந்தனார் என்று குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து பார்க்க வேண்டிய படம் தலைவன் தலைவி.
மதிப்பெண் 3.5/5


