
தண்டேல் – விமர்சனம்
மீன் பிடித்தலை தொழிலாகக் கொண்ட மக்கள் தங்கள் தலைவனை தண்டில் என்று அழைப்பது வழக்கம். ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் ரோடு கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் தலைவன் தண்டேல் நாக சைதன்யா தலைமையில் குஜராத் மாநிலத்தில் உள்ள கடற்பகுதியில் மீன் பிடிக்க செல்கின்றனர். ஒன்பது மாதங்கள் அங்கு தங்கி மீன் பிடித்து விட்டு திரும்பி வந்து மூன்று மாதங்கள் தங்கள் சொந்த ஊரில் ஓய்வெடுப்பது அவர்களது வாடிக்கை. சிறு வயது முதல் ஒன்றாக வளரும் நாக சைதன்யாவும் சாய்பல்லவியும் உயிருக்கு உயிராக வெறித்தனமாக காதலிக்கின்றனர். மீன் பிடித்தல் ஆபத்தான தொழில் என்பதால் நாக சைதன்யா அதில் ஈடுபட வேண்டாம் என சாய்பல்லவி அவருக்கு அன்புடன் கட்டளையிடுகிறார். ஆனால் அந்தக் கட்டளையை ஏற்றுக் கொள்வதாக சொல்லும் நாக சைதன்யா மீண்டும் மீன் பிடிக்க சென்று விடுகிறார். இதன் காரணமாக சாய் பல்லவி அவருடன் கோபித்துக் கொண்டு தொலைபேசியில் பேசாமல் மௌனம் காக்கிறார். வழக்கம்போல் குஜராத் கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது சூறாவளி காற்றின் கோரத்தாண்டவத்தால் பாகிஸ்தான் கடற்பகுதிக்கு நாக சைதன்யாவின் படகு சென்றுவிட அனைவரும் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டு சொல்லனா துயரத்திற்கு ஆளாகின்றனர். இதற்கிடையில் சாய் பல்லவியை கருணாகரனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார் அவரது தந்தை. பாகிஸ்தான் சிறையில் இருந்து நாக சைதன்யாவும் மற்றவர்களும் திரும்பி வந்தார்களா காதலர்கள் இருவரும் இணைந்தார்களா என்பதை சுவைபட விளக்கும் படம் தண்டேல். இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து தண்டேல் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் சந்து மொண்டேட்டி. உண்மைச் சம்பவத்தின் மையக்கருவை மட்டும் எடுத்துக்கொண்டு பொழுதுபோக்கு அம்சங்களை அழகாகவும் அளவோடும் இணைத்து அருமையான படத்தை உருவாக்கியதற்காக முதலில் பாடக்குழுவைப் பாராட்டி விடுவோம். ஷியாம் தத்தின் ஒளிப்பதிவும் கேமரா கோணங்களும் அற்புதமாக அமைந்து படத்தை அடுத்த உயரத்துக்கு எடுத்துச் செல்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் மனதில் பதிந்து முணுமுணுக்க வைக்கின்றன. குறிப்பாக தீம் மியூசிக் இப்போதும் நம் காதல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. இடைவேளை வரை சற்றும் போர் அடிக்காமல் விறுவிறுப்பாக சென்ற திரைக்கதை, மீனவர்கள் பாகிஸ்தான் சிறையில் அடைபட்ட பின் சற்று தடுமாறுகிறது. ஆக்சன் காட்சிகளில் ஆவேச அவதாரம் எடுக்கும் நாக சைதன்யா, சாய்பல்லவியுடனான காதல் காட்சிகளில் மிக மென்மையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. சாய் பல்லவி நாக சைதன்யா இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி படத்துக்கு பலம் சேர்திருக்கிறது. படத்தில் ஆங்காங்கே வரும் தெலுங்கு எழுத்துக்களும், தெலுங்கு செய்தித்தாள்களும்தான் தாண்டேல் படத்தை தெலுங்கு டப்பிங் படம் என்று புரிய வைக்கிறது. மற்றபடி இது நேரடி தமிழ் படத்தை விட உண்மையிலேயே பாகிஸ்தான் சிறையில் அடைபட்டு அல்லலுற்ற மீனவர்களின் புகைப்படங்களையும் கடிதங்களையும் நேர்த்தியாக எடுக்கப்பட்ட படம் என்றுதான் சொல்ல வேண்டும். படத்தின் இறுதியில் காட்டியிருப்பது நெகிழ வைக்கிறது. தண்டேல் திரைப்படத்தை தாராளமாக கண்டு ரசிக்கலாம்