தங்கலான் _ விமர்சனம்

0

Loading

தங்கலான் _ விமர்சனம்

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை பீரியட் பிலிமாக சொல்லி இருக்கிறார் இயக்குநர் ப.ரஞ்சித்.

வெள்ளையர் காலத்தில் நடக்கிறது கதை. தங்க வயலில் வேலை செய்ய ஆட்களை தேடுகிறார் வெள்ளை அதிகாரி. ஊரில், ஜமீனிடம் அடிமையாக வாழும் நிலையிலிருந்து மீள.. ஒடுக்கப்பட்ட மக்கள் அங்கே செல்கிறார்கள். அங்கும் அவர்களது நிலை மாறவில்லை. தங்கலான் என்கிற அவர்களது தலைவன் அதன் பிறகு என்ன முடிவெடுக்கிறார் என்பதே கதை.

நாயகன் தங்கலானாக அசத்தி இருக்கிறார் விக்ரம். மனைவி மீதான காதல், குழந்தைகள் மீதான பாசம், எதிர்கால சந்ததியினர் மீதான அக்கறை என வாழ்ந்திருக்கிறார் மனிதர். இவரது நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்வதானால் ஒவ்வொரு காட்சியையும் சொல்ல வேண்டும். அதி அற்புதம்.

விக்ரமின் புகழ் கிரீடத்தில் மற்றும் ஓர் ஒளிவீசும் வைரமாக ஜொலிக்கிறது தங்கலான். 

விக்ரமின் மனைவியாக வரும் பார்வதியும் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். முதன் முறையாக ஜாக்கெட் அணியும் போது அவரது முகத்தில் தெரியும் பரவசம்.. ஆகா.. சிறப்பான நடிப்பு.

சூனியக்காரியாக வந்து மிரட்டுகிறார் மாளவிகா மோகனன்.

பசுபதிமற்றம் துணை வேடங்களில் நடித்த அனைவரும் தாங்கள் ஏற்ற வேடத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள்.

பல காட்சிகளில் ஒளிப்பதி மிரட்டுகிறது. ஒளிப்பதிவுக்கு நிகராக சிஜி காட்சிகளும் அமைந்து படத்துக்கு பலம் சேர்க்கின்றன. குறிப்பாக பாம்புகளும், ஒரு கருஞ்சிறுத்தையும் வரும் காட்சிகளை சொல்லலாம்.

ஜி.வி. பிரகாஷின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் அற்புதம்.

வரலாற்று கதை என ஆரம்பித்து, மாயாஜால கதைக்குள் நம்மை கொண்டு செல்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித். காட்சிகளும், வசனங்களும் மிரள வைக்கின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் அவல வாழ்க்கையை, அவர்களது போராட்டத்தை கண் முன் நிறுத்தி இருக்கிறார்.

தீவிரமான உணர்வுகளை வெளிப்படுத்தும் கதை… அதை ஜனரஞ்சகமாகவும் கொண்டு செல்வதில் வெற்றி கண்டு இருக்கிறார் பா.ரஞ்சித்.

மொத்தத்தில் அனைவரும் பார்க்கலாம்.

மதிப்பெண் 4/5

Share.

Comments are closed.