Monday, April 20

தி பெட் _ விமர்சனம்

Loading

தி பெட் _ விமர்சனம்

சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ஸ்ரீகாந்த் மற்றும் நண்பர்கள் வாரம்தோறும் சனி மற்றும் ஞாயிறுகளில் மது அருந்துவது வழக்கம்.

இந்த வழக்கம் அலுப்பு தட்டி விட்டதால் ஒரு பெண்ணுடன் வீக் எண்டை கொண்டாட நினைத்து, பாலியல் தொழில் செய்யும் சிருஷ்டி டாங்கேயுடன் ஊட்டிக்கு செல்கின்றனர்.

நண்பர்கள் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மட்டை ஆகிவிட,  ஸ்ரீகாந்தும் சிருஷ்டி டாங்கேயும் அர்த்த ராத்திரியில் ஊட்டியை சுற்றிப் பார்க்க வெளியே செல்கின்றனர்.

அப்போது ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கேயுடன் தனக்குள்ள காதலைச் சொல்ல, பாலியல் தொழில் செய்யும் தனக்கு அதை ஏற்க தகுதி இல்லை என்று சொல்லி மறுத்து விடுகிறார் சிருஷ்டி.

ஸ்ரீகாந்த் உடன் வந்த நண்பர்களில் ஒருவர் மர்மமான முறையில் கொலையுண்டு கிடக்க, சிருஷ்டி டாங்கேயும் காணாமல் போகிறார்.

ஸ்ரீகாந்தின் நண்பனை கொலை செய்தது யார்?

காணாமல் போன சிறிஸ்டி டாங்கேவுக்கு என்ன ஆனது என்பதுதான் தி பெட் படத்தின் கதை.

வழக்கம்போல் யதார்த்தமான நடிப்பை கொடுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

ஸ்ரீகாந்த் தன் காதலை சொன்னதும், சிரித்துக் கொண்டே  அலட்சியமாக அதை நிராகரிக்கும் காட்சியில் சிருஷ்டி டாங்கே சிறப்பாக நடித்திருக்கிறார்.

பிளாக் பாண்டியின் நகைச்சுவை சில இடங்களில் சிரிக்க வைக்கிறது.

கொலையை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் ஜான் விஜய் மற்றும் அவரது மனைவி சம்பந்தப்பட்ட இரண்டு மூன்று காட்சிகள் படத்திற்கு எந்த வித தொடர்பும் இல்லாமல் வலிய திணிக்கப்பட்டிருக்கின்றன.

படத்தின் சிறப்பம்சம் என்றால் அது கோகுலின் ஒளிப்பதிவு தான்.

இயற்கை எழில் கொஞ்சும் ஊட்டியின் அழகை அப்படியே தன் கேமராவில் அள்ளிக் கொண்டு வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கோகுல்.

தாஜ் நூரின் இசையமைப்பில் உருவான பாடல்களும் பின்னணி இசையும் சுமார் ரகம்தான்.

பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண்ணிடம் உடல் ரீதியான இச்சை இல்லாமல் ஆத்மார்ந்தமாக நாயகன் காதலிக்கிறான் என்ற மையக்கரு நன்றாக இருந்தாலும் அதை வைத்துக் கொண்டு மிகச் சாதாரண ஒரு படமாக கொடுத்து விட்டார் இயக்குனர் மணி பாரதி.