தேள் – விமர்சனம்

0

 21 total views,  2 views today

தேள் – விமர்சனம்

தன் கொடுக்கையும் அதில் உள்ள விஷத்தையும் மறந்து, தேனாக கிடைத்த திடீர் பாசத்துக்கு பலியான ஒரு தேளின் கதைதான் தேள்.

கோயம்பேடு மார்க்கெட்டில் கந்து வட்டிக்கு பணம் கொடுப்பவரிடம், அடியாளாக வேலை பார்த்து, தவணை தவறிய தண்டல் தொகையை தாக்குதல் மூலமே பெற்றுத் தருவதுதான் பிரபுதேவாவின் வேலை.

மூர்க்கத்தனமாக மனிதர்களை தாக்கி அடித்து துன்புறுத்தும் பிரபுதேவா, வீட்டுக்கு வந்ததும் பார்ப்பதுகூட டிஸ்கவரி சேனலில் மான்களை புலி வேட்டையாடும் படத்தைதான் என்ற காட்சி மூலம் புிரபுதேவாவின் கேரக்டரையே விளக்கி விடுகிறார் இயக்குநர்.

அம்மா அப்பா என எந்த உறவும் இல்லாமல் தனிமரமாக, வாழும் பிரபுதேவாவிடம் திடீரென ஈஸ்வரிராவ் வந்து “நான்தான் உன்னை பெற்ற அம்மா….பிறந்ததும் அனாதையாக விட்டுச் சென்றதற்கு என்னை மன்னித்துக்கொள்…” என்கிறார்.

கோபமும் ஆத்தரமும் ஒன்று சேர ஈஸ்வரராவை அறைந்தாலும், பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறி தன் வீட்டில் தங்க இடம் கொடுக்கிறார். ஒரு சூழ்நிலையில் அம்மாவின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்யத் துணிகிறார் பிரபுதேவா. இதன் பிறகுதான் கதையில் விறுவிறுப்பு கூடி ஜெட் வேகமெடுக்கிறது படம்.

ஈஸ்வரிராவின் ப்ளாஷ் பேக் கதை யாருமே எதிர்பார்க்காத அதிர்ச்சியை ஏற்படுத்தி, பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வருகிறது.
பிரபு தேவாவுக்கு வசனம்கூட அதிகமில்லை. வழக்கமான அவரது சிக்னேச்சர் நடனமும் இல்லை. முழுக்க முழுக்க அவரது நடிப்புத்திறனை வெளிப்படுத்தும் வகையிலான வேடம்தான். அவருக்கு இருக்கும் இமேஜை மீறி தன் நடிப்புத் திறனால் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார் பிரபு தேவா.
அம்மா தூங்கும்போது “உன்னை விட மாட்டேன்…”என தூக்கத்தில் உளறுவது யாரை நினைத்து என்ற சஸ்பென்ஸ் உடைபடும்போது ஏற்படும் அதிர்ச்சி யாருமே சற்றும் எதிர்பார்க்காதது.

தூங்கும் அம்மாவின் அருகில் படுத்து செல்ஃபி எடுத்து, தனக்கும் அம்மாவுக்கும் என்ன உருவ ஒற்றுமை என பிரபு தேவா பார்ப்பது ஹைக்கூ கவிதை.

அது சரி …பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்களைக்கூட சரமாரித் தாக்குவது எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது?
பிரபுதேவாவை மட்டுமே மய்யப்படுத்தி எடுத்த படத்தில் கதாநாயகி சம்யுக்தாவுக்கு பெரிதாக வேலை இல்லை. அதேபோல் யோகிபாபு பாத்திரமும் படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது. பிரபுதேவாவைப்போல் யோகிபாபுவையும் சீரியசாக்கி நகைச்சுவை எதுவும் இல்லாமல் பார்த்துக்கொண்டார்களோ என்னவோ?

படத்துக்கு மிகப்பெரிய பலம் விக்னேஷ் வாசுவின் ஒளிப்பதிவு மற்றும் அன்பறிவின் சண்டைக் காட்சிகள்.

சத்யாவின் இசையில் உருவான பாடல்கள் ரசிக்கும் ரகம்தான்.

பல படங்களுக்கு நடனக் காட்சிகள் அமைத்தும், சில படங்களில் நாயகனாக நடித்தும் அனுபவம் பெற்ற ஹரிகுமார் பிரபுதேவாவை நாயகனாக்கி, அவரை ஆடவிடாமல், அக்மார்க் அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக்கிய விதத்தில் வெற்றி பெற்று விட்டார் என தாராளமாகச் சொல்லலாம்.

தேள் மதிப்பெண் 3.5/ 5

 

Share.

Comments are closed.