திருந்த வேண்டும் திரையரங்குகள் 1 (புதிய கட்டுரைத் தொடர்)

0

 1,574 total views,  1 views today

சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கிய ‘மிக மிக அவசரம்’ படம் கடந்த 11ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், கடைசி நேரத்தில் வெறும் 17 திரையரங்குகளே தமிழ்நாடு முழுவதும் ஒதுக்கப்பட்டதால் வெளியீடு தள்ளிப்போனது. திரைப்படம் தயாரிப்பதைவிட, அதைத் திரையரங்கில் வெளியிடுவதற்கு அதிக செலவாகும் என்ற அநியாய அராஜகத்தில் தமிழ்ப் படவுலகம் சிக்கிக்கொண்டிருப்பதால்தான், பல படங்கள் இன்று வெளியாகாமலேயே முடங்கிக் கிடக்கின்றன.


‘மிக மிக அவசரம்’ படத்தை வாங்கி வெளியிடும் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் 85 லட்சம் ரூபாய்வரை புரொமேஷனுக்கு செலவிட்ட நிலையில் அவருக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
சித்தார்த் நடித்த ‘அருவம்’, தமன்னா நடித்த ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்கள் 11ஆம் தேதி வெளிவரும் என்ற அறிவிப்பின் பேரில், ஏற்கெனவே ‘மிக மிக அவசரம்’ படத்தை திரையிட ஒப்புக்கொண்டிருந்த திரையரங்குகள் தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு மேற்படி திரைப்படம் திரையிட மறுத்தது, கண்டிக்கத்தக்கது என்று தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கமே கண்டனம் தெரிவித்திருக்கிறது.
திரைப்படம் என்ற ஒன்று இல்லாவிட்டால் திரையரங்கம் என்பதற்கே தேவையில்லை என்ற எளிய உண்மையை ஏன் இந்த திரையரங்க உரிமையாளர்கள் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.
கைக்காசு போட்டோ வட்டிக்கு கடன் வாங்கியோ படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு பத்து சதவீதம் லாபம்கூட உத்தரவாதம் கிடையாது. ஆனால் 99 சதவீதம் நட்டமடைய வாய்ப்புக்கள் ஏராளம். ஆனால் திரையரங்க உரிமையாளர் எந்த வித நஷ்டமும் இல்லாமல் ஏராளமான வழிகளில் வருமானம் பார்க்கிறார்கள்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன் திரையரங்கின் முகப்பில் அங்கு ஓடும் படத்தின் விளம்பரத் தட்டிகள் மட்டுமே இருக்கும். ஆனால் இன்று ஊரிலுள்ள நகைக்கடை ஜவுளிக்கடை விளம்பரத்தில் தொடங்கி வட்டிக் கடை பெட்டிக் கடைவரை எல்லா விளம்பரங்களையும் முகப்பிலேயே நிரப்பி வைத்து, நாம் பார்க்க வேண்டிய படத்தின் போஸ்டரையோ பேனரையோ தேடும்படி அல்லவா வைத்திருக்கிறார்கள். மாதந்தோறும் எத்தனை லட்சம் ரூபாய் இந்த விளம்பரத்தில சம்பாதிக்கிறார்கள்?

நகைக் கடைக்கும் துணிக்கடைக்கும் வரும் வாடிக்கையாளர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள்தான் இலவச வாகன வசதி ஏற்படுத்தித் தரும். ஆனால் திரையரங்குக்கு வரும் வாடிக்கையாளர்தான் வாகனம் நிறுத்த கட்டணம் தரவேண்டும். அதுவும் இப்போதெல்லாம் மணிக்கணக்கில் கணக்கிட்டு வாங்குகிறார்கள். வெகு விரைவில் நிமிடக் கணக்கில் கணக்கிட்டு வாங்க ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படக்கூடாது. இவ்வளவு காசு பார்க்கிங்கிற்கு கொடுத்தாலும், வாகனங்கள் அனைத்தும் வெயிலில் காய்ந்துகொண்டும் மழை வந்தால் நனைந்து கொண்டும்தான் இருக்கும்.
திரையரங்கில் விற்கப்படும் உணவுப் பொருள்கள், மற்றும் குளிர்பானங்கள் டிக்கட் கட்டணத்தைவிட அதிகமாக இருப்பதைக்கண்டு பயந்தே பலரும் திரையரங்கில் படம் பார்ப்பதைத் தவிர்க்க ஆரம்பித்தனர்.

புதிய படம் வெளியான ஓரிரு மாதங்களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. அதுவரை காத்திருக்க பொறுமை இல்லாதவர்களுக்கு இருக்கவே இருக்கிறது இலவசமாக புதுப்படங்களைத் தரும் திருட்டு இணைய தளங்கள். கணினியில் படம் பார்க்கலாம், கை பேசியில் படம் பார்க்கலாம் என்ற நிலை வந்துவிட்டது. வாழும் காலமும் வசிக்கும் சூழலும் இவ்வாறு இருக்கும்போது ரசிகர்களை பல சலுகைகள் கொடுத்தல்லவா சினிமாவுக்கு வரவழைக்க வேண்டும். மாறாக எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்பதுபோலல்லவா திரையரங்கினர் தயாரிப்பாளர்களை கசக்கிப் பிழிகிறார்கள்.

சென்னை போன்ற பெருநகரங்களில் ஒற்றைத் திரை அரங்குகள் மிகக் குறைவு. காம்ப்ளக்ஸ் மற்றும் பல திரைகள் கொண்ட அரங்குகளின் உரிமையாளர்களே உணவுப் பொருள்களை தயாரித்து கொள்ளை லாபம் பார்க்கிறார்கள. இந்த பகல் கொள்ளையைப் பார்த்துதான் “பாப் கார்ன் விற்பனையிலும் எங்களுக்கு பங்கு வேண்டும் என்று இனி கேட்போம்’ என்று திரைப்பட இயக்குநர் சங்க செயலாளர் ஆர்.வி.உதயகுமார் ஒரு படவிழாவில் பேசினார். தண்ணீர் பாட்டில்களைக்கூட இவர்களே மிகக்குறைந்த செலவில் தயாரித்து கொள்ளை லாபத்துக்கு விற்கிறார்கள். வேறு கம்பெனியிலிருந்து தண்ணீர் பாட்டில் வாங்கினால் அதில் விலை அச்சிடப்பட்டிருக்குமே எனவேதான் அதையும் சொந்தத் தயாரிப்பாக்கி சுரண்டுகிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வட மாநில திரையரங்கு ஒன்றில் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கவில்லை என்று குற்றம் சாட்டி, படம் பார்க்க வந்த ஒருவர் வழக்கு தொடர, திரையரங்குகளில் படம் பார்க்க வருபவர்கள் வசதிக்காக சுத்தமான குடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

மல்டிபிளக்ஸ் திரையரங்கின் உரிமையாளர் ஒருவரை ஒரு தொலைக்காட்சி பேட்டி கண்டபோது, பாப் கார்ன் விலை அதிகமாக இருப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “உண்மையில் பாப் கார்ன் விற்பனையில் எங்களுக்கு நஷ்டம்தான் ஏனென்றால் பாப்கார்னை இருக்கைக்கு அடியில் சிந்தி விடுகிறார்கள். இதனால் எலித் தொல்லை அதிகமாகி இருக்கைகளை சேதப்படுத்தி விடுகிறது. இதனால் எங்களுக்கு நட்டம்தான் வருகிறது. பாப் கார்ன் விற்பனையை நிறுத்தி விடலாம் என்று இருக்கிறோம்” என்று பதிலளித்தாரே பார்க்கலாம். அடேங்கப்பா…ங்கப்பா…

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மிகக் கடுமையான நடவடிக்கை எடுத்து இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பு. திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பிரச்னை ஏற்படும்போதெல்லாம் ஒரு வித மென்போக்கை கடைபிடிப்பதும், உறுதியான முடிவை எடுக்க சிலர் தடையாக இருப்பதாலுமே தீர்க்கமான எந்த முடிவையும் எடுத்து செயல்படுத்த முடியாத நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது.

சமீபத்தில் ஒரு தயாரிப்பாளரின் படத்தை குறிப்பிட்ட ஏரியாவில் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டபோது, தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக்குழு ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் திருட்டு வீடியோ எடுக்கும்போது கையும் களவுமாக பிடிபட்ட வழக்கை நாங்கள் துரிதப்படுத்த வேண்டியிருக்கும் என்று சொல்லியிருந்தார்கள். இது ஒரு வித பிளாக் மெயில் மாதிரி தெரியவில்லையா அப்படியானால் இதுவரை ஏன் வழக்கை துரிதப்படுத்தாமல் இருந்தார்கள் என்பதற்கு என்ன காரணம் சொல்லுவார்கள்.
ஓரிரு ஆண்டுகளுக்கு முன் நாடெங்கும் ஏராளமான திரையரங்குகளை நடத்தி வரும் பி.வி.ஆர் குழுமம் அண்டைமாநிலமொன்றில் திரையிடப்பட்ட புதிய தமிழ்ப்படத்தை திருட்டுத்தனமாக கேமராவில் கையும் களவுமாக பிடிபட்டதே அந்க கேஸ் என்ன ஆனது
இப்படி விடை தெரியாக் கேள்விகள்
ஏராளமாக இருக்கின்றன. அடுத்து வரும் அத்தியாயத்தில் அவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தினரே
திரையரங்குகளின் அடாவடிகளை முடிவு கட்ட உங்களால்தான் முடியும்.

IF NOT YOU WHO
IF NOT NOW WHEN

(தொடரும்)
டிக்கட் கட்டணக் கொள்ளை குறித்து அடுத்த அத்தியாயத்தில் ஆதார பூர்வமான தகவல்கள்

Share.

Comments are closed.