![]()

லியோ படம் வெளியாகும்போதே தனது திரையின் மறுபக்கம் படத்தை வெளியிடும் துணிச்சலுக்காக தயாரிப்பாளரையும், சினிமா உலகின் இருண்ட பக்கங்களை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காக இயக்குனர் நிதின் சாம்சனையும் முதலில் பாராட்டி விடலாம்.
சினிமாவில் அதீத ஆசையுள்ள விவசாயி சத்திய மூர்த்தி நடிகருடன் போட்டோ எடுத்துக் கொள்ள ஆசைப்பட்ட பாவத்துக்கு விலையாக, கிராமத்தில் உள்ள விவசாய நிலம், சென்னையில் வசிக்கும் சொந்த வீடு என்று ஆரம்பித்து மனைவி அணிந்திருக்கும் தாலிச் சரடுவரை எப்படி எல்லாவற்றையும் இழக்கிறார் என்பதை விவரித்திருக்கும் படம்தான் திரையின் மறுபக்கம்.
படத்தில் இடம் பெறும் பல நகைச்சுவைக் காட்சிகள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. உதாரணமாக படத்தை எடுத்து வைத்துக்கொண்டு ரிலீஸ் பண்ண முடியாத கடுப்பில் இருக்கும் தயாரிப்பாளரிடம் சாப்பாட்டுக்கு இயக்குநரும் உதவி இயக்குநரும் பணம் கேட்க, வெகு சீரியசாக தனது பாக்கெட்டில் இருந்து 20 ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக்கொடுத்து அம்மா உணவகத்தில் சாப்பிடச் சொல்லும் காட்சி.
படம் முழுவதும் இழையோடும் இது போன்ற நகைச்சுவைக் காட்சிகள் படத்துக்கு மிகப் பெரிய பலம்.
தயாரிப்பாளர் சத்திய மூர்த்தி வேடத்தில் வரும் முகமது கெளஸ் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் அந்த பரிதாபமான தயாரிப்பாளர் பாத்திரத்துக்கு உயிர் கொடுக்கிறது.
இயக்குநர் செந்தில் வேடம் ஏற்ற நடராஜன் மணிகண்டன் மிகை நடிப்பை வெளிப்படுத்தினாலும் ரசிக்க வைப்பதை மறுப்பதற்கில்லை.
காவிரி வேடத்தில் வரும் ஹேமா ஜெனிலியா பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு தேடும் வேடத்தில் நடிதத இவர் முயன்றால் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இடத்தை பெறலாம்.
தயாரிப்பு இயக்ககம் படத்தொகுப்பு, ஒளிப்பதிவு என்று ஏகப்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்திருக்கும் நிதின் சத்யா அடடே என்று ஆச்சரிப்பட வைக்கிறார்.
தற்கொலை செய்து கொண்டால் இன்ஷ்யூரன்ஸ் பணம் கிடைக்காது என்ற சாதரண விஷத்தைக்கூட தெரியாமல் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளருக்கு இன்ஷ்யூரன்ஸ் தொகை வருவதுபோல் காட்சி அமைத்திருப்பது அபத்தமாக இருக்கிறது.
அதேபோல் தற்கொலை செய்து கொண்ட தயாரிப்பாளரின் குடும்பத்துக்கு லட்சக்கணக்கில் நிவாரணம், மனைவிக்கு அரசு வேலை என்றெல்லாம் அரசாங்கமே அறிவித்திருப்பதும் அபத்தத்தின் உச்சம்.
இதுபோன்ற சில குறைகளை கண்டிப்பாக தவிர்த்திருக்க வேண்டும்.
கொஞ்சம் சிரத்தை எடுத்து கவனமாக திரைக்கதையை அமைத்திருக்கலாம்.
சினிமாவைப் பற்றி தெரியாமலேயே படம் எடுக்க வருபவர்களுக்கு இந்தப் படம் ஒரு பாடம்.
புதுமையான கதைக்களத்துக்காகவும், நகைச்சுவைக்காகவும் ஒரு முறை பார்க்கலாம்.
