Thursday, May 14

டி என் 2026 _ விமர்சனம்

Loading

டி என் 2026_ விமர்சனம்

கோடை வெப்பத்தை மீறி தமிழ்நாடு தேர்தல் 2026 சூடு ஏற்றுக் கொண்டிருக்க, அதை மேலும் வெப்பம் ஏற்ற வந்திருக்கும் திரைப்படம் ‘டி என் 2026’.

வடமாநிலத்திலிருந்து பிழைப்பு தேடி தமிழகம் வந்த குல்கந்து குமாருக்கு (நட்டி) யதேச்சையாக சினிமா வாய்ப்பு கிடைத்து படங்கள் நடிக்க தொடங்குகிறார்.

பொள்ளாச்சி பகுதியில் 100 ஏக்கர் தென்னந்தோப்பு உரிமையாளராக செல்வ செழிப்புடன் வாழும் மன்றாடியார், (தம்பி ராமையா) பிற்காலத்தில் குல்கந்து குமார் சூப்பர் ஸ்டாராக பிரபலமடைவார் என்று கணித்து அவரை உச்ச நட்சத்திரமாக்க முயற்சி செய்கிறார்.

தம்பி ராமையாவின் திட்டப்படியே சூப்பர் ஸ்டார் ஆகும் குல்கந்து குமார் அரசியலில் குதித்து தமிழக முதல்வராக வேண்டிய சமயத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

படம் வெளி வருவதற்கு முன்பு, முன்னோட்டத்தின் மூலமே பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்தப் படம் எதிர்பார்ப்புகளை எகிறச் செய்திருந்தது.

தட்டு தடுமாறி ஒரு வரி தமிழ் வசனம் பேசத் திணறும் குல்கந்து குமார் எவ்வாறு சூப்பர் ஸ்டாராக உருவெடுத்து,  அரசியல் களத்தில் அடி எடுத்து வைக்கிறார் என்ற பரிணாமம் ரசிக்கத் தகுந்த காட்சிகளாக திரை வடிவம் பெற்று படத்துக்கு பலம் சேர்த்திருக்கிறது.

ஒட்டுமொத்த படத்தையும் குல்கந்து குமார் என்ற தனது பாத்திரத்தின் மூலம் தாங்கியிருக்கிறார் நட்டி நடராஜ்.

ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றுவதில் தொடங்கி, பின்னர் அரசியலுக்கு வந்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று மருத்துவர் சொன்னதால் பின் வாங்கும் காட்சி வரை பல்வேறு உண்மைச் சம்பவங்களை நினைவு படுத்துவது திரைக்கதையின் பலம்.

இதேபோல் மனைவியை விட்டுப் பிரிந்து விவாகரத்து கேட்கும் காட்சியும் ஆரவாரமான வரவேற்பை பெறுகிறது.

இதுபோல் சமீபத்தில் அரசியல் களத்தில் நடந்த சம்பவங்களை நினைவு படுத்தும் காட்சிகள் படம் முழுக்க விரவிக் கிடக்கின்றன.

அண்ணாச்சி எம் எஸ் பாஸ்கர் அடிக்கும் கமெண்ட்கள் அட்டகாசம்.

முதல் ரசிகனாக வந்து முத்திரை பதிக்கும் வகையில் நடித்திருக்கும் ரெடின் கிங்ஸ்லீ, நடிகையாக சில காட்சிகளில் வரும் யாஷிகா ஆனந்த், நட்டியின் மனைவியாக வரும் ஷ்ரத்தா ராவ் ஆகியோரும் தங்கள் பாத்திரங்களை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

மிகப்பெரிய அரங்குகள், கலர்ஃபுல்லான காட்சிகள் என்று எதுவும் இல்லாவிட்டாலும்,  பி.ஜி.முத்தையாவின் யதார்த்தமான ஒளிப்பதிவு படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.

தர்புகா சிவா இசையின் உருவான பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.

ரஜினி, சீமான், விஜய் என்று பலரையும் நினைவுபடுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் அமைத்து, அதை துணிச்சலுடன் திரையில் சொன்ன முயற்சிக்காகவே இயக்குனர் உமாபதி ராமையாவை தாராளமாக பாராட்டலாம்.

கருத்தாழமிக்க நல்லதொரு அரசியல் பகடி படத்தை தேர்தல் நேரத்தில் தந்திருக்கும் கதை வசனகர்த்தா தம்பி ராமையா, வாக்காளர்களை சிந்திக்கத் தூண்டி இருக்கிறார் என்றால் மிகையாகாது.

சிரிக்க வைத்து சிந்திக்கச் செய்யும் டி எண் 2026 திரைப்படம் அனைத்து ரசிகர்களையும் (வாக்காளர்களையும்) கவரும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 4/5