Monday, August 31

உயிர் தமிழுக்கு _  விமர்சனம்

Loading

உயிர் தமிழுக்கு _  விமர்சனம்

படத்தின் தலைப்பு எல்லோரையும் கவரும் வகையில் இருப்பதுடன், படத்துக்கு மிகப்பொருத்தமாகவும் இருப்பது முக்கியம்.

அந்த வகையில் அனைவரையும் ஈர்க்கும் ‘உயிர் தமிழுக்கு’  தலைப்பு படத்துக்கு பொருத்தமாகவும் அமைந்திருக்கிறது.
படத்தின் தலைப்பைப் பார்த்துவிட்டு, மொழிக்காக போராடும் நாயகனின் கதை என நினைக்கத் தோன்றும்.

ஆனால், தமிழ்ச் செல்வி என்கிற இளம் பெண்ணை காதலித்து அவளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பாண்டியன் என்கிற இளைஞனின் உணர்வுதான் உயிர் தமிழுக்கு திரைப் படம்.

சரி, கதைக்கு வருவோம். தமிழ்ச்செல்வியை பார்த்ததும் பாண்டியன் காதலிக்க தொடங்க, மெல்ல மெல்ல தமிழ்ச்செல்வியும் பாண்டியனை காதலிக்க தொடங்குகிறார்
தமிழ்ச்செல்வியின் அப்பா அரசியல் பிரமுகர். ஆகவே, பாண்டியனும் ( காதலுக்காக) ஒரு கட்சியில் சேர்ந்து, மாவட்ட செயலாளர் அளவுக்கு உயர்கிறார்.
இந்த நிலையில் தமிழ்ச் செல்வியின் அப்பா கொல்லப்பட.. பாண்டியன்தான் குற்றவாளி என அனைவரும் நினைக்கின்றனர்_ காதலி உட்பட.
கைது செய்து சிறையில் அடைக்கப்படும் பாண்டியன், உண்மை குற்றவாளிகளை கண்டுபிக்கிறாரா.. காதலியை கரம் பிடிக்கிறாரா என்பதுதான் கதை.

பாண்டியன் என்கிற கேபிள் டிவி நடத்தும் இளைஞராக அமீர். ஆரம்பத்தில், “காதல், மோதல்” எல்லாம் அமீருக்கு ஒத்துவருமா என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது.

ஆனால் சில நிமிடங்களிலேயே தனது அதிரடி நடிப்பால் நம்மை ஆக்கிரமிக்க ஆரம்பிக்கிறார் அமீர்.

ஜாலியான இளைஞனாக, அமர்க்களம் பண்ணும் அரசியல்வாதியாக நம்மை வெகுவாகவே கவர்ந்துவிடுகிறார்.

தமிழ்ச் செல்வியாக வரும் சாந்தினி ஸ்ரீதரன், தனது பாத்திரம் அறிந்து நடித்து இருக்கிறார். காதல் காட்சிகளிலும், நாயகனுடன் சவால் விடும் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். முகப்பொலிவையும் அழகையும் பார்க்கும்போது தமிழ்த் திரையுலகில் ஒரு பெரிய ரவுண்ட் வருவார் என்றுதான் தோன்றுகிறது.

இமான் அண்ணாச்சி, ராஜ்கபூர், ஆனந்தராஜ், சரவண சக்தி, மகாநதி சங்கர், கஞ்சா கருப்பு என பெரிய நட்சத்திரப்பட்டாளமே இருக்கிறது. அவரவர் தங்கள் பாணியில் ரசிக்க வைக்கிறார்கள்.

வித்யா சாகரின் இசை, தேவராஜின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பக்க பலபாக அமைந்திருக்கின்றன.

அரசியல் படம் என்று நினைக்க வைத்து ரகளையான காதல் படத்தைத் தந்து இருக்கிறார் இயக்குநர் ஆதம்பாவா. அதே நேரம் அரசியலையும் விடவில்லை.

சமாதி முன் தியானம் செய்வது, மத்திய அரசின் ஆசியில் ஆட்சியை ஓட்டுவது, இவிஎம் ஓட்டு மிஷன் தகிடுதத்தங்கள், ஆன்மீக அரசியல் இருக்கும்போது ஆன்மா அரசியல்  இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்புவது என அரசியலை அதிரடியாக பகடி செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் காதல் + அரசியல் படமாகவே வந்திருக்கிறது.

ரசித்து, சிரித்து வரலாம்.

மதிப்பெண் 4/5