![]()

வாழை _ விமர்சனம்
Vaazhai Movie Review
தனது பள்ளிப் பருவத்தில் நடந்த சம்பவங்களை அழகான திரைமொழியில் அற்புதமாகச் சொல்லி இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
நெல்லை மாவட்டத்தில் ஒரு கிராமம். இங்கு, விவசாய கூலி வேலை குடும்பம். குடும்பத் தலைவர் மறைந்துவிட்ட நிலையில், தாய் மற்றும் மூத்த சகோதரியுடன் வாழ்கிறான் சிறுவன் சிவனைந்தன்.
அம்மாவும், அக்காவும் லாரியில் சென்று, வாழைத் தோட்டங்களில், அறுக்கப்பட்ட வாழைத் தார்களை தலையில் சுமந்து வந்து சேர்க்கும் கூலி வேலை செய்கின்றனர்.
சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை தினங்களில் சிவனைந்தனும் செல்கிறான். அவனுக்கு அந்த வேலை பிடிப்பதில்லை. அத்தனை கடினம். தவிர சிறுவன் என்பதால் விளையாடும் ஆர்வம் இருக்கும் அல்லவா…
ஒரு சனிக்கிழமை அன்று தாய்க்கு தெரியாமல், வாழைத்தோட்ட வேலைக்கு டிமிக்கி கொடுக்கிறான் சிறுவன் சிவனைந்தன். ஆனால் அக்காவிடம் மட்டும் சொல்லி அனுமதி பெற்று, பள்ளி விழாவுக்காக நடக்கும் நடன ஒத்திகைக்குச் செல்கிறான்.
அன்று நடக்கும் ஒரு கொடூர நிகழ்வுதான் ஒட்டுமொத்த கதையும்.
சிறுவன் சிவனைந்தனாக நடித்து இருக்கிறான் பொன் வேல். நடித்து இருக்கிறான் என்பதை விட, கதாபாத்திரமாக வாழ்ந்து இருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.
வாழைத்தார் அறுக்கச் செல்ல மறுத்து அடம் பிடிப்பது.. அக்காவிடம் காட்டும் பாசம், போராட்ட குணமுள்ள இளைஞனிடம் தந்தையைப் போல் காட்டும் நேசம், ஆசிரியை மீதான ஈர்ப்பு என்று சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறான்.
அவனது நண்பன் சேகராக வரும் வரும் ரகுவும் சிறப்பாக நடித்து உள்ளான். இருவரும் ரஜினி – கமல் ரசிகர்களாக அடித்துக்கொள்ளும் காட்சி, கூடுதல் சுவாரஸ்யம்.
ஆசிரியையாக வரும் நிகிலா, சிவனைந்தன் அம்மாவாக ஜானகி, அக்காவாக திவ்யா துரைசாமி, கூலி உயர்வு கேட்டு போராடும் இளைஞனாக கலையரசன் என அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
சந்தோஷ் நாராயணனின் இசை, தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இரண்டும் படத்துக்கு பலம்.
‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிக்கொடி, ‘தூதுவளை இலை அரைச்சு’ போன்ற பாடல்கள் ஆகியவை கதையின் காலத்தை அச்சு அசலாக பிரதிபலிக்கின்றன.
முதலாளிகளின் பணவெறி, தொழிலாளிகளின் உயிரை எப்படி பறிக்கிறது என்பதை ரத்தமும் சதையுமாகச் சொல்லி கலங்க வைத்து இருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
நெகிழ வைக்கும் படம்.

