வதந்தி வெப் சீரிஸ் – விமர்சனம்

0

 138 total views,  1 views today

அமேஸான் ப்ரைம் வீடியோவில் வெளியாகியிருக்கும் ‘வதந்தி – தி ஃபேபிள் ஆஃப் வெலோனி’ வெப் சீரிஸை ஆண்ட்ரூ லூயிஸ் எழுதி இயக்கியிருக்கிறார்.

பெரும் வரவேற்பைப் பெற்ற சுழல் வெப் சீரிஸைத் தயாரித்த புஷ்கர் காயத்ரி இரட்டையர்கள் தயாரிப்பில் இது உருவாகியிருக்கிறது.

எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக பிரதான வேடத்தில் நடித்திருக்கும் வெப் சீரிஸ் இது.

ஆங்கிலோ இந்தியப் பெண்மணியான வெரோனி கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். அவளைக் கொன்றது யார் கொலைக்கான காரணம் என்ன என்பது எட்டு எபிஸோட்களாக விரிகிறது.

வெலோனி தன்னைக் காதலிப்பதாக பொய் சொல்லி பந்தா காட்டித் திரியும் ஓர் இளைஞன், வெலோனியின் விருப்பத்துக்கு மாறாக அவளது அம்மாவின் ஆதரவுடன் அவளைத் திருமணம் செய்யக் காத்திருக்கும் ஓரு குடிகார இளைஞன், சமூக விரோத செயல்களில் சர்வ சாதாரணமாக ஈடுபடும் அண்ணன் தம்பிகள் என்று பலரும் காவல்துறை அதிகாரி சூர்யாவின் விசாரணை வளையத்துக்குள் வருகின்றனர்.

விசாரணை நீண்டு கொண்டே செல்ல, இறுதியில் குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறார் சூர்யா.

கொலையாளி யாராக இருக்கும் என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் பார்வையாளர்களையும் தொற்றிக் கொள்ளும் வகையில் திறம்பட திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸூக்கு பாராட்டுக்கள்.

நாகர்கோவில் பின்னணியில் கதை நடப்பதால் பாத்திரங்கள் அனைத்தும் அந்த வட்டார வழக்கு மொழியை இம்மி பிசகாமல் உச்சரிக்க வைத்து நடிக்கச் செய்திருப்பதை ரசிக்கலாம்.

பெரும்பாலான காட்சிகள் வெளிப்புறக் காட்சிகளாகவே அமைந்திருக்கின்றன. இந்தக் காட்சிகளில் எல்லாம் ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமியின் கேமரா நாகர்கோவிலின் இயற்கை வனப்பை அப்படியே அள்ளிக்கொண்டு வந்திருக்கிறது.

மாநாடு படத்தில் ஒரு விதமாகவும், டான் படத்தில் மற்றொரு விதமாகவும் நடிப்பை வெளிப்படுத்திய எஸ்.ஜே.சூர்யா வதந்தி சீரியஸில் முற்றிலும் புதிய பரிமாணத்தில் சிறப்பாக நடித்திருக்கறார். குறிப்பாக மது அருந்தியபடி மனைவியிடம் பேசும் காட்சி அபாரம்.

வெலோனி வேடத்தில் அறிமுகமாகியிருக்கும் சஞ்சனா அழகாக இருபதுடன், அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார். தமிழ்ப் படவுலகுக்கு ஒரு நல்ல நடிகை கிடைத்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

அப்பா ஸ்தானத்தில் வைத்து நாசரிடம் சஞ்சனா பழகுவதும், உரிமையுடன் அவர் அறையின் கட்டிலில் அமர்ந்து பேசுவதும் வெகு இயல்பான காட்சியாகவும் அவரது மனோபாவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்திருக்கிறது.

லைலா கதாநாயகியாக நடித்த காலத்தில்கூட அவருக்கு இப்படி ஒரு வலுவான பாத்திரம் கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான். அப்படி ஒரு வேடத்தில் மிகச் சிறப்பாக நடித்த நல்லதொரு கம்பேக் கொடுத்திருக்கிறார் லைலா.

மிகவும் சீரியசாகச் செல்லும் கதையில் அவ்வப்போது துணை ஆய்வாளர் விவேக் பிரசன்னாவுடன் சூர்யா நடத்தும் உரையாடலில் இழைந்தோடும் மெலிதான நகைச்சுவை நல்ல ரிலீஃப்.

வதந்தி சீரிஸில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய முக்கிய அம்சம் சைமன் கே.கிங்கின் பின்னணி இசை. பாடலுக்கு வாய்ப்பு இல்லாததாலோ என்னவோ முழு கவனத்தையும் பின்னணி இசையில் செலுத்தி மனிதர் பின்னி எடுத்திருக்கிறரா்.

“உண்மை நடக்கும்… பொய் பறக்கும்”  என்பது போன்ற வசனங்கள் மூலமும் பல காட்சிகளில் நம் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.

உலக நாடுகள் பலவற்றிலும் ஸ்ட்ரீம் ஆகும் வெப் சீரிஸ் என்பதால் ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுவது சரிதான். அதற்காக லைலாவும் அவர் மகள் சஞ்சனாவும் ஆங்கிலத்தில் பேசும் காட்சிகளில் எல்லாமா ஆங்கிலத்தில் சப் டைட்டில் போட வேண்டும்?  வசனம் ஆங்கிலத்தில் இருக்கும் இந்தக் காட்சிகளில் தமிழில் சப் டைட்டல் போட்டிருக்கலாமே? (பிற பிராந்திய மொழிகளுக்கேற்ப அந்தந்த மொழிகளில்) ஆங்கோ இந்தியப் பெண்ணான லைலாவும் அவர் மகளும் பேசிக்கொள்ளும் காட்சிகள் நிறையவே படத்தில் இருக்கின்றனவே…

துவக்கம் முதல் இறுதிவரை விறுவிறுப்பு குறையாத வதந்தி சீரிஸ் சஸ்பென்ஸ் பட ரசிகர்களை மட்டுமின்றி அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 3.5 5

Share.

Comments are closed.