Friday, October 23

வலிமை திரைப்பட விமர்சனம்

Loading

வலிமை திரைப்பட விமர்சனம்

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியாகியிருக்கும் வலிமை அஜித் ரசிகர்களுக்கு வித்தியாசமான விருந்தைப் படைத்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.
அஜித் பைக் ரேசர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் பைக்கில் அவர் இந்த அளவுக்கு சாகசங்கள் புரிவது வலிமை படத்தில்தான்.
வலிமை படத்தின் கதையைப் பார்ப்போமா….உதவி கமிஷனர் பொறுப்பில் இருக்கும் அஜித் குமார் ஒரு நேர்மையான அதே சமயம் வி்த்தியாசமான அதிகாரி. குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுப்பதைவிட அந்தக் குற்றங்கள் மீண்டும் நடக்காமல் தடுக்க வேண்டும் என்று நினைப்பவர். மதுரையில் பணி செய்த அவர் சென்னைக்கு மாற்றலாகி வருகிறார்.
சென்னையில் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டு, தன் கடமையை அவர் எப்படி போராடி நிறைவேற்றுகிறார் என்பதே வலிமை….
செயின் அறுக்கும் திருடர்களையும், போதை மருந்துக்கு அடிமையன இளைஞர்களையும் எப்படி அஜித் எதிர்கொண்டு வெற்றி பெறுகிறார் என்பதை வலிமை படத்தில் மிகவும் வலிமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எச்.வினோத்.
மோட்டார் பைக்கில் சாகசங்கள் செய்வதுதான் அஜித்துக்கு அல்வா சாப்பிடுவதுபோல் ஆயிற்றே….பைக் ரைடர்களை விரட்டிச் செல்லும் காட்சிகளில் அசத்தலாக நடித்து தன் ரசிகர்களுக்கு விருந்து படைக்கிறார் அஜித்.
ஒரு சிபாரிசு கடிதம் கொடுத்தால்கூட தன்னிடம் ஏதேனும் சலுகைகள் எதிர்பார்ப்பார்களே என தம்பிக்குகூட சிபாரிசு செய்ய மிருதுவாக மறுக்கும் அண்ணன் வேடத்தில் அஜித் அமர்களப்படுத்தியிருக்கிறார். அந்த தம்பியே வேலை கிடைக்காத விரக்தியில் தீயவர்களின் தூண்டிலுக்கு இரையாகி, தகாத வழியில் செல்வதை அறிந்ததும் நொறுங்கிப் போகிறார்.
இறுதியில் தன் தம்பி மட்டுமின்றி மற்ற இளைஞர்களையும் எவ்வாறு அஜித் காப்பாற்றுகிறார் என்பதை விறுவிறுப்பாக வலிமை படத்தில் சொல்லியிருக்கிறார் கதை வசனம் எழுதி இயக்கியிருகக்கும் வினோத்.
அம்மா பாசம், சென்டிமெண்ட் காட்சிகள் பெண்களைக் கவரும் என்பதில் ஐயமில்லை.
ஆக்ஷன் படம் என்றாலே கதாநாயகிகளுக்கு பெரிதாக வேலை இருக்காதுதானே….இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல…
அம்மா பாடல் மட்டும் நெஞ்சில் நிறைந்து நிற்கிறது.
வழக்கமான மசாலாப்படங்களுக்கே பழக்கப்படவர்களுக்கு இப்படம் ஜீரணிக்க சற்று கடனமாக இருக்கும் என்றாலும், வித்தியாசமான இவ்வகை முயற்சிகள் வரவேற்கப்பட வேணடியவேயே….
இந்த அளவுக்கு சமூக தமிழ்ப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றிருக்குமா எனபது சந்தேகமே……
இந்த ஆக்ஷன் காட்சிகளுக்காகவே வலிமை படத்தை தாராளமாகப் பார்க்கலாம்.

மதிப்பெண் 3.5/5