![]()

விரூபாக்ஷா – திரைப்பட விமர்சனம்
ஆன்மீகத்தையும் அமானுஷ்யத்தையும் அழகாக கலந்து நெய்யப்பட்ட அருமையான கதையம்சம் கொண்ட படம்தான் விருபாக்ஷா.
தன் சொந்த கிராமமான ருத்ராவனத்துக்கு தாயாருடன் வருகிறார் நாயகன் சூர்யா.
அங்கே கிராமத்து பெரியதனக்காரர் ஹரி சந்திராவின் மகளான நந்தினியின் அழகில் மயங்கி அவளை காதலிக்கத் துவங்குகிறார்.
நந்தினியும் சூர்யாவைக் காதலித்தாலும் தன் காதலை வெளிப்படையாக சொல்ல ஏனோ தயங்குகிறாள்.
இந்த சூழலில் கிராமத்தில் வசிக்கும் சிலர் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். அதாவது ஒருவர் மரணிப்பதை முதன் முதலாக பார்க்கும் நபர் அடுத்ததாக மர்மமான முறையில் இறக்கிறார்.
இது தொடர்கதையாக சில மரணங்கள்வரை நீளவே, நாயகன் சூர்யா இந்த மர்மத்தை கண்டு பிடிக்க களம் இறங்குகிறார்.
அவர் தன் முயற்சியில் வெற்றி பெற்றாரா.. மர்ம மரணங்களுக்கு காரணம் என்ன என்பதை சுவைபட விளக்குகிறது விரூபாக்ஷா
துடிப்பு மிக்க நாயகன் சூர்யா வேடத்தில் சாய் தரம் தேஜ் சிறப்பாக நடித்திருக்கிறார். தான் காதலிக்கும் பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவதாகட்டும், மர்ம் முடிச்சுகளை அவிழ்க்க துணிச்சலுடன் போராடுவதாகட்டும் எதிலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு நடித்து முத்திரை பதிக்கிறார் சாய் தரம் தேஜா.
நாயகி நந்தினியாக வரும் சம்யுக்தாவுக்கு பேசி நடிக்கும் வாய்ப்பு குறைவு. தன் கண்களாலும், முக பாவங்களாலும் வெகு சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறார்.
தற்கொலை செய்து கொள்ளும் கிராமத்துப் பெண் எப்போதும் இடது காதில்தானே வலி என்று சொல்லி வேதனையில் துடிப்பாள்….இப்போது எப்படி வலது காதைக் குத்துக்கொண்டு தற்கொலை செய்து கொள்வாள் என நாயகன் சூர்யா யோசிக்கத் துவங்கும்போது கதை சூடு பிடிக்கிறது.
அதன் பிற பரபரப்பான விறுவிறுப்பான காட்சிகள் மூலம் மர்ம முடிச்சை அவிழ்க்கும் வகையில் சுவையாக திரைக்கதை அமைத்திருக்கிறார் சுகுமார்.
ருத்ராவனத்தில் நாமே வாழ்ந்துவிட்ட வந்த (கொஞ்சம் நடுக்கத்துடன்தான்) அனுபவத்தை விரூபாக்ஷா திரைப்படம் தருகிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஒளிப்பதிவாளர் ஷாம்தத் சைனுதீனும், இசையமைப்பாளர் அஜனீஷ் லோக்நாத்தும் என்றால் மிகையாகது. இவர்களுடன் கலை இயக்குநரும் கை கோர்த்து நம் இதயத்துடிப்பை அதிகப்படுத்தியிருக்கிறார்.
அமானுஷ்யப் படங்களை படங்களை ஆர்வத்துடன் பார்க்கும் ரசிகர்களுக்கு அறுசுவை விருந்து விரூபாக்ஷா என்றால் மிகையாகாது.
மதிப்பெண் 3. 5/5
