Thursday, July 16

வித் லவ் _ விமர்சனம்

Loading

வித் லவ் _ விமர்சனம்

விண்ணிலிருந்து மண்ணுக்கு வரும் முதல் மழைத்துளிபோல், பள்ளியில் படிக்கும்போது பதின் பருவத்தில் ஏற்படும் முதல் காதலை கவிதைபோல் திரையில் வடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மதன்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அபிஷன் ஜீவிந்த் கலகலப்பான நாயகனாக நம்மை கவர்ந்திழுத்து நெஞ்சில் நிறைகிறார்.

ஆர்ப்பாட்டம் இல்லாத எளிமையான அழகு தோற்றம் கொண்ட நாயகி அனஸ்வரா ராஜன் தனித்துவம் மிக்க வித்தியாசமான வேடத்தில் வந்து, தம் அசத்தலான நடிப்பால் நம் உள்ளத்தை கொள்ளை கொள்கிறார்.

‘வித் லவ்’ படத்தின் கதை கரு என்னவென்று பார்ப்போமா?

திருமணத்தில் ஈடுபாடு காட்டாத அபிஷன் ஜீவிந்த், தன் அக்காவின் வற்புறுத்தலுக்காகவே அனஸ்வரா ராஜனை சந்திக்க செல்கிறார்.

இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள் என்பது யதேச்சையாக தெரிய வர பழைய விஷயங்களை பேச ஆரம்பிக்கின்றனர்.

பள்ளியில் படிக்கும் போது தனக்கு ஏற்பட்ட ஒரு தலை காதல் அனுபவத்தை அபிஷன் விவரிக்க, அனஸ்வராவும் இரண்டு முறை தனக்கு லவ் பிரேக்கப் ஆனதை சொல்வதுடன் மேலும் சில விஷயங்களை அப்போது பகிர்ந்து கொள்கிறார்.

அனஸ்வரா தான் காதலித்த பையனிடம் தன் காதலை சொல்லாததற்கு காரணம் என்ன என்று கூறுகிறார்.

பின்னர் இருவரும் தங்கள் பழைய காதலை தேடிச் செல்ல முடிவு செய்கின்றனர்.

இருவரும் தங்கள் காதலர்களை சந்திக்க முடிகிறதா?
அவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்கள்?

சந்தித்த பிறகு அபிஷனும் அனஸ்வராவும் செய்யும் முடிவு என்ன என்பதுதான் படத்தின் கதை.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகாக தொகுத்து, காதலின் பரிணாமங்களை ஒரு ஹைக்கூ கவிதையை போல் அற்புதமாக திரையில் வடித்திருக்கிறார் இயக்குனர் மதன்.

பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றமே அபிஷனுக்கு பாதி வெற்றியை தந்துவிட இயல்பான நடிப்பின் மூலம் முழுமையான வெற்றியை பெறுகிறார்.

கண்ணுக்கு குளிர்ச்சியான ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்தை இன்னும் ஒரு படி மேலே உயர்த்துகிறது.

ஷான் ரோல்டன் இசையமைப்பில் உருவான பாடல்கள் கதைக்கும் காட்சி அமைப்புக்கும் பலமாக அமைந்திருப்பதுடன் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன.

காதலிக்க தயங்கலாம் அதை வெளிப்படுத்த தயங்கினால் வாழ்க்கை எப்படி புரட்டிப் போடும் என்பதை சுவைபட விவரிக்கும் ‘வித் லவ்’ திரைப்படம் காதலித்தவர்கள், காதலித்துக் கொண்டிருப்பவர்கள், காதலிக்கப் போகின்றவர்கள், காதலே பண்ணாதவர்கள் என அனைவரையும் கவரும் என்பதில் ஐயமில்லை.

மதிப்பெண் 4/5