விட்னஸ் – திரைவிமர்சனம்

0

 147 total views,  1 views today

விட்னஸ் – திரைவிமர்சனம்

 

சாலை நடுவே அமைந்திருக்கும் கழிவு நீர்க்கால்வாயில் இறங்கி தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் காட்சியைப் பார்த்து நாம் முகத்தை சுழித்தபடியோ, மூக்கைப் பொத்திக் கொண்டோ கடந்து செல்வதுதான் வழக்கம்.

அப்படிப்பட்ட பணியில் ஈடுபடும் தொழிலாளர்களைப் பற்றிய கதைதான் விட்னஸ்.

அடுக்கில்ல குடியிருப்பு ஒன்றின் கழிவு நீர் அடைப்பை சரி செய்ய செல்லும்போது பார்த்திபன் என்ற தூய்மைப் பணியாளர் தன் உயிரை இழக்கிறார்.

பார்த்திபனின் தாய் இந்திராணி தன் மகன் இறப்புக்கு காரணமானவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கித் தர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பெத்தராஜூ என்ற தொழிற்சங்கத் தோழர் ஒருவர் பார்வதிக்கு உறுதுணையாக இருந்து உதவுகிறரா்.

கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் பார்வதி என்ற இளம் பெண்ணும் இந்த வழக்கு தொடர்பான சில முக்கிய ஆவணங்களை இந்திராணியிடம் கொடுப்பதுடன் அவருக்கு உதவியாகவும் இருந்து ஒத்துழைக்கிறார்.

இந்திராணியின் எதிர்வினை காரணமாக சம்பவம் நடந்த பகுதியின் கழிவுநீர்ப்பணி ஒப்பந்ததாரருக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கு பதிலடியாக, இந்திராணியின் வாழ்விலும், பார்வதியின் வாழ்விலும், பெத்தராஜுவின் வாழ்விலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன.

ஆட்சியாளர்களையும், அரசு இயந்திரத்தையும் எதிர்த்துப் போராடுவது அவ்வளவு எளிதான காரணமா என்ன…?

இறுதியில் இந்திராணிக்கு நீதி கிடைத்ததா இல்லையா என்பதை நெஞ்சம் நெகிழும் வண்ணம் சொல்லியிருக்கும் படம்தான் விட்னஸ்.

இந்திராணியின் வழக்கை நடத்தும் வழக்குரைஞர் வேடத்தில் வரும் சண்முகராஜா வேடமும். நீதிபதி வேடமும் கவனம் ஈர்க்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கட்டிட வடிவமைப்பாளராக வரும் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் பார்த்திபன் தாயார் இந்திராணியாக வரும் ரோகிணி இருவரும் தங்கள் நடிப்புத்திறனால் ஏற்ற வேடத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.

ஆனால் ரோகிணி சென்னை தமிழ் உச்சரிப்புக்கு இன்னும் சற்று மெனக்கெட்டிருக்க வேண்டும்.

படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் தீபக் பாராட்டுக்குரிய பணியைச் செய்திருப்பதுடன் உரத்த சிந்தனையையும் விதைத்திருக்கிறார்.

முத்துவேல் மற்றும் ஜே.பி.சாணக்யா இருவரும் இணைந்து எழுதியிருக்கும் திரைக்கதை யதார்தமாக அமைந்திருக்கிறது.

படத்தின் இறுதியில் காட்டப்படும் சில புள்ளி விவரங்கள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

சிந்தனையைத் தூண்டும் சிறப்பான படைப்பு விட்னஸ்.

Share.

Comments are closed.