Monday, November 16

யாரோ – விமர்சனம்

Loading

யாரோ – விமர்சனம்

கடற்கரையை ஒட்டியுள்ள அழகான பங்களாவில் தனி ஆளாக வசித்து வருகிறான் ஜான். கட்டிட வடிவமைப்பாளராகப் பணியாற்றும் இவரது வீட்டுக்கு திடீரென வரும் ஒருவன் தாகமாக இருப்பதாகச் சொல்லி தண்ணீர் கேட்கிறான்.
தண்ணீர் எடுத்து வந்து கொடுக்க முற்படும்போது அவனைக் காணவில்லை. இதிலிருந்து ஜானுக்கு சில பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன வீட்டில் தன்னைத் தவிர வேறு யாரோ இருப்பதாக ஜான் உணர்கிறான்.
ஜானுக்கு அலுவலகத்திலும் சில பிரச்னை. அவன் வடிவமைத்த கட்டிட வரைபடம் நிராகரிக்கப்படுகிறது. உதவிக்கு வரும் ஜானுடைய நண்பன் அலுவலகப் பிரச்னையில் ஏற்படும் மன அழுத்தமே கண்ட கற்பனைகளை உருவாக்குகிறது என்றும், வீட்டில் வேறு யாரும் இல்லை என்று கூறிச் செல்கிறான்.
அடுத்து தன் வீட்டில் வேறு யாரோ நுழைந்து விட்டதாக நண்பனிடம் சொல்ல, அவன் தன் உறவினரான போலீஸ் அதிகாரியுடன் வருகிறான். அவரும் வீட்டை ஆய்வு செய்து பார்த்துவிட்டு ஒன்றும் பிரச்னை இ்ல்லை என சொல்கிறார். ஆயினும் ஜானின் பிரச்னை தொடர்கிறது.
கிட்டத்தட்ட முக்கால் வாசி படம் இப்படியே நகர்கிறது. இறுதியில் முன் பகுதியில் தோன்றிய ஜானின் பிரச்னைகளுக்கு விடை கிடைக்கிறது.

படத்தின் நாயகனாக வரும் ஜான் பாத்திரத்தில் வெங்கட் ரெட்டி என்ற புதுமுகம் அறிமுகமாகியிருக்கிறார். இப்படி சொல்வதை விட வெங்கட் ரெட்டி என்ற புதுமுகம் இந்தப் படத்தை தயாரித்து கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.
சொந்தப் படம் என்பதாலோ என்னவோ படம் முழுக்க இவரது ஆக்ரமிப்பே.

நாயகனின் ப்ளேஷ் பேக் பகுதியில், அவரது தந்தை ஏன் அப்படி ஒரு காலை நொண்டி நொண்டி நடக்கிறார்? பெற்ற மகன் மீது ஏன் இப்படி காரணமின்றி கடுமை காட்டுகிறார்? அவரது வீட்டின் ஹாலில் ஏன் அவ்வளவு பெரிதாக ஒரு ஹிட்லர் படம் மாட்டப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் இயக்குநர் சந்தீப் சாய்க்கே வெளிச்சம்.

கே.பி.பிரபுவின் ஒளிப்பதிவும், அனில் க்ரீஷ் இசையும் பரவாயில்லை ரகம். சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு.

த்ரில்லர் படமாக எடுத்தால் இரண்டு மூன்று மொழிகளிலாவது வெளியிட்டு கல்லா கட்டி விடலாம் என்று படக்குழு நினைத்தது சரியாக இருக்கலாம். ஆனால் அதற்கேற்ப கதையும் காட்சிகளும் வலுவாக இருக்க வேண்டாமா.

ஒரு நல்ல சைக்கோ த்ரில்லராக உருவாக்கியிருக்கூடிய படத்தை நிறைய சொதப்பல் காட்சிகளுடன் ரொம்ப சாதாரணமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

மதிப்பெண் 2.5/ 5