Saturday, December 14

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பாடலில் விஜய் சேதுபதியின் சர்ப்ரைஸ்!

Loading

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எல்லா இடங்களிலும் இசை வசந்தத்தை பரப்பி வருகிறது. முதல் சிங்கிள் பாடலான ‘கண்ணம்மா’ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகச்சிறந்த வரவேற்பை பெற்றது. தற்போது, சாம் சிஎஸ்ஸின்  வழக்கத்திற்கு மாறான அடுத்த பாடலை அனுபவிக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது.
 
அந்த பாடலை பற்றி இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி கூறும்போது, “கதை எழுத ஆரம்பித்த போதே பாடல்கள் கதையின் தீவிரத்தை அதிகரிக்கும் முக்கிய காரணியாக இருக்க வேண்டும், படத்துக்கு வேகத்தடையாக இருக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். குறிப்பாக, இந்த பாடல் ‘ஏய் கடவுளே’ படத்தில் முக்கியமான இடத்தில் வரும். குறிப்பாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் குரலில் வசனமாக ஆரம்பிக்க, ஹரீஷ் கல்யாண் அதை தொடர்ந்து இந்த பாடலை பாடியுள்ளார். இசையின் காதலர்கள் எப்போதும் இசை மற்றும் ஒலியில் வரும் புதிய யோசனைகளை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பார்கள். அதன்படி, ‘ஏய் கடவுளே’ அனைவருக்கும் ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்” என்றார்.
 
ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து பணியாற்றுவது மிகச்சிறப்பான தருணமான உணர்கிறார் இயக்குனர் ரஞ்சித். மேலும் அவர் தனது நடிப்பால் கதையை மிகச்சிறப்பாக திரையில் கொண்டு வருவதோடு, ஒரு பிரபல  நட்சத்திரமாகவும் மாறி இருக்கிறார் என்று அவரை மிகவும் புகழ்கிறார். 
 
“ஹரீஷ் கல்யாணை பற்றிய மிகவும் விசேஷமான விஷயம், அவர் தனக்கு முன்பே இருக்கும் இமேஜை உடைத்து, வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்றை வெளியே கொண்டு வருவதை லட்சியமாக கொண்டிருக்கிறார். சாக்லேட் பாய் மற்றும் ரொமாண்டிக் பியூட்டி என்று அழைக்கப்படுவதை அனுபவித்துக் கொண்டே அவர் தனது புதிய மண்டலத்துக்குள் தன்னை புகுத்தி கொள்கிறார். இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் அவரை புதிய பரிமாணத்துடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லும் என நான் நம்புகிறேன். பெரும்பாலான நேரங்களில், ஒரு புதிய மண்டலத்தில், புதிய யோசனைகளுடன் பயணம் செய்ய விரும்பும் எந்த ஒரு இயக்குனருக்கும் ஒரு சவாலான நடிகர் தேவை. அந்த வகையான இயக்குனர்களின் முதல் தேர்வாக ஹரீஷ் கல்யாண் இருப்பார் என நான் நம்புகிறேன்” என்றார். 
 
மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கப்பா தயாரித்துள்ள இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் தமிழ்நாடு வினியோக உரிமையை ஃபைவ் ஸ்டார் பிக்சர்ஸ் கைப்பற்றியிருக்கிறது. கவின் ஒளிப்பதிவில், பவன் ஸ்ரீகுமார் படத்தொகுப்பில், சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ஹரீஷ் கல்யாண் மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஜோடி அனைவரின் கவனத்தையும் ஈர்க்க, அவர்களுடன் மாகாபா ஆனந்த், பொன்வண்ணன், பாலசரவணன் மற்றும் பன்னீர் புஷ்பங்கள் புகழ் சுரேஷ் என  திறமையான நடிகர்கள் பலர் நடித்துள்ளனர்.