![]()
டென் ஹவர்ஸ் _ விமர்சனம்
ஆத்தூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருக்கும் சிபிராஜ், சபரிமலைக்கு விரதம் இருந்து புறப்படும் நாளன்று ஒரு பெண்ணை காணவில்லை என்று புகார் வருகிறது.
காணாமல் போன பெண்ணை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் சிபிராஜ்.
அந்த இரவு 10 மணி நேரத்தில் ஓடும் பேருந்தில் ஒரு கொலை நடக்கிறது.
இந்த கொலைக்கான காரணம் என்ன? கொலையாளி யார்? குற்றவாளியை சிபிராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் டென் ஹவர்ஸ் படத்தின் கதை.
நெற்றியில் திருநீறு பூசிக்கொண்டு புலன் விசாரணையை துவங்கும் இன்ஸ்பெக்டர் சிபிராஜின் மிடுக்கு, கம்பீரம் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்திற்கு கணம் சேர்க்கிறது.
மொத்த படம் முழுவதும் சிபிராஜின் ஆட்சி தான்.
சிபிராஜுடன் வரும் சப்-இன்ஸ்பெக்டர் கஜராஜ் படத்தின் இரண்டாவது கதாநாயகன் என்று சொன்னால் மிகையாகாது.தன் பாத்திரத்தை உணர்ந்து அழகாக நடித்து கவனம் ஈர்க்கிறார் கஜராஜ்.
மற்றும் மருத்துவராக வரும் ஜீவா ரவி, ஆம்னி பஸ் கிளீனர் ஆக வரும் முருகதாஸ், திலீபன் ஆகியோரும் தங்கள் பாத்திரத்தை குறைவின்றி செய்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பாக செல்லும் சில திரில்லர் படங்களுக்கு ஸ்பீட் பிரேக்கர் போல் பாடல்கள் அமைவதுண்டு. ஆனால் இந்தப் படத்தில் பாடல்களை கிடையாது.
அதேபோல் சும்மா “வந்து போகும்” வேடத்தில் கதாநாயகியும் கிடையாது.
அடுத்து என்ன அடுத்து என்ன என்று பார்வையாளர்களை யோசிக்க வைக்கும் திரைக்கதை மூலம் விறுவிறுப்பான முறையில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் இளையராஜா கலியபெருமாள்.
காட்சிகளை நேர்த்தியான முறையில் படமாக்கி தன் பணியை குறைவின்றி செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக். குறிப்பாக கார் சேஸிங் காட்சிகளில் அவரது திறமை பளிச்சிடுகிறது.
கே எஸ்ஸின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது.
திரில்லர் பட பிரியர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் படமாக அமைந்திருக்கிறது 10 ஹவர்ஸ்.
மதிப்பெண் 3.5/5

