Saturday, October 3

நாங்கள்_ விமர்சனம்

Loading

நாங்கள்_ விமர்சனம்

தாயைப் பிரிந்து தந்தையுடன் வசிக்கும் மூன்று டீன் ஏஜ் சிறுவர்களின் கதைதான் நாங்கள். தந்தை மிக மிக கண்டிப்பு காட்டுபவர்.
கண்டிப்பு என்றால் மிக மிகக் கடுமையான கண்டிப்பு. சில சமயங்களில் இவர் என்ன சைக்கோவா என்று நினைக்கத் தோன்றும் வகையில் நடந்து கொள்பவர். கிட்டத்தட்ட அடிமைகள் போலவே தன் மூன்று மகன்களையும் நடத்துகிறார் அந்த தந்தை.
அப்பா இல்லாத போது மகிழ்ச்சி ஆட்டம் போடும் சிறுவர்கள் அப்பா வரும் அரவம் கேட்டதுமே அப்படியே மாறி பெட்டிப் பாம்பாக அடங்கிவிடுகிறார்கள்.
ஊட்டியில் தந்தை நடத்தி வரும் தனியார் பள்ளியிலேயே மகன்கள் மூவரும் படிக்கின்றனர்.
ஒரு கட்டத்தில் தந்தையின் அராஜகம் பொறுக்க முடியாமல் தாய் வீட்டுக்கு செல்கின்றனர்
மூவரும்.
தாயாரின் அப்பா அதாவது இவர்களுடைய தாத்தா மூவரையும் வேறு பள்ளியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்கிறார்.
ஆனால் சில பொருளாதாரப் பிரச்சினைகளால் அந்தப் பள்ளியில் சேர்க்க முடியவில்லை.
மீண்டும் தந்தையிடமே வருகிறார்கள். தனது நிர்வாகத்தில் இருக்கும் பள்ளியையே வேறு ஒருவருக்கு மாற்றிக் கொடுக்கும் முடிவுக்கு வருகிறார் தந்தை.
மகன்களுக்காக கணவருடன் சேர்ந்து வாழ வரும் மனைவியை கூட ஏற்க மறுக்கிறார் கணவர். இறுதியில் என்ன நடந்தது என்பதை விளக்குகிறது படத்தின் பிற்பகுதி.

கண்டிப்பான தந்தை வேடத்தில் வரும் அப்துல் ரபே அற்புதமாக நடித்திருக்கிறார். இப்படியும் ஒரு தந்தை இருப்பாரா என்று என்னும் அளவுக்கு முகத்திலேயே கடுமை காட்டுகிறார். மூன்று மகன்கள் ஆக மிதுன், ரித்திக், நித்தின் ஆகியோரும் தங்கள் பங்கை சிறப்பாகவே செய்திருக்கின்றனர். மூன்று சிறுவர்களின் தாயார் வேடத்தில் பிரார்த்தனா சில காட்சிகளை வந்தாலும் குழந்தைகளுக்கான தவிப்பை திறம்பட வெளிப்படுத்தி இருக்கிறார்.
மூன்று சிறுவர்களும் வீட்டுக்கு தண்ணீர் கொண்டு வரும் காட்சிகளும், பாத்திரம் கழுவும் போது அப்பா மிச்சம் வைத்த ரொட்டித் துண்டுகளை சிறுவன் சாப்பிடும் காட்சியும் நெஞ்சை கணக்கச் செய்யும் காட்சிகள்.
படத்துக்கு கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கி இருப்பதுடன் படத்தொகுப்பையும் செய்து இருக்கிறார் அவிநாஷ் பிரகாஷ்.
கருப்பு வெள்ளையிலேயே கதையை சொல்லி காட்சிகளை விளக்க இயலும் ஒளிப்பதிவு பாணி பாராட்டுக்குரியது.
அதீத கற்பனை மிக்க நாடகத்தனமான காட்சிகள் இல்லாமல், யதார்த்தமான முறையில் படத்தை உருவாக்கியதற்காகவே இயக்குனர் அவினாஷ் பிரகாசுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம். மெயின் ஸ்ட்ரீம் திரைப்படங்களையே பார்த்து பழகிப்போன ரசிகர்களுக்கு இவ்வகை பேரலல் சினிமா சற்று ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும். ஆனாலும் இவ்வகை யதார்த்தமான படங்களை ரசிகர்கள் ஆதரிக்க வேண்டும்.
அப்போதுதான் நல்ல சினிமாக்கள் நிறைய வர ஆரம்பிக்கும். மதிப்பெண் 4/5