2018 – திரைப்பட விமர்சனம்

0

 15 total views,  1 views today

 
2018 – திரைப்பட விமர்சனம்
2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெருமழை – வெள்ளத்தில் நிரம்பி வழிந்த அணை திறக்கப்பட்டதால் உருவான பிரளயத்தில் சிக்கிக்கொண்ட மனிதர்களைப்பற்றியும், அவர்கள் அதிலிருந்து எவ்வாறு மீள்கிறார்கள் என்பதைப்பற்றியும் பதைபதைக்க வைக்கும் காட்சிகளோடு சொல்லியிருக்கும் திரைப்படம் 2018.
இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்ட மழை வெள்ளத்திலும் மனித நேயம் மரித்துப் போகாமல் மக்கள் பேராபத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை அழகாக காட்சிப்படுத்தியதற்காகவே இந்தப் படக்குழுவுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம்.
படத்தின் டேக் லைனாக எவ்ரிஒன் ஈஸ் எ ஹீரோ என்று போட்டிருப்பதற்கேற்ப படத்தில் வரும் பாத்திரங்கள் பலரும் தங்கள் உயிரை துச்சமென மதித்து ஆபத்தில் சிக்கியிருப்பவர்களை காப்பாற்றி நிஜமான ஹீரோவாக உருவெடுப்பதை ஆழமான சம்பவங்களோடு மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
சற்றே அசந்தாலும், டாகுமெண்டரி படம்போல் ஆகியிருக்கக்கூடிய கதையை மிக கவனமாகக் கையாண்டு ஒரு த்ரில்லர் படம்போல் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஜூட் ஆன்டனி ஜோஸப்.
ராணுவத்திலிருந்து ஒடி வந்து விட்ட அனூப், வானிலை மையத்தில் வேலை பார்க்கும் ஷாஜி, மீனவர் மாத்தச்சன், தந்தையுடனே மீன் பிடிக்க கடலுக்குச் செல்லும் மூத்த மகன, தன்னை மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள விரும்பாமல் மாடலாகி விளம்பரப்படங்களில் நடித்து புகழ் பெற வேண்டும் என விரும்பும் இளைய மகன், வெளிநாட்டிலிருந்து கேரளாவில் சுற்றப்பயணம் மேற்கொள்ள வந்திருக்கும் தம்பதி, அவர்களுக்கு கார் ஒட்டும் ஜோஷ், தமிழ்நாட்டுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சேதுபதி என்ற டிரைவர், மழை வெள்ள செய்திகளை நேரலையில் ஓளிபரப்பும் தொலைக்காட்சி தலைமைப் பொறுப்பில் இருக்கும் பெண் இவர்கள்தான் படத்தன் பிரதான பாத்திரங்கள்.
டொவினோ தாமஸ், குஞ்சக்கோ போபன், ஆசிப் அலி, லால், வினீத் சீனிவாசன், கலையரசன், நரேன், அபர்ணா பாலமுரளி என பல பிரபல நட்சத்திரங்களும் ஏற்றிருப்பது சிறிய வேடம் என்றாலும், மிகவும் வலுவான பாத்திரப் படைப்பு.
மழை வெள்ளக் காட்சிகளை அகில் ஜார்ஜ் கேமரா அற்புதமாக படம் பிடித்திருக்கிறது.
விஷூவல் எஃபெக்ட்ஸ் காட்சிகளும் சிறப்பாக அமைந்து படத்துக்கு பலம் சேர்த்திருக்கின்றன.
விறுவிறுப்பாக அமைந்த சாமன் சாக்கோவின் படத்தொகுப்பு படத்தை சற்றும் தொய்வின்றி கொண்டு செல்கிறது.
உயிர் தன் இறுதிகால கட்டத்தில் எவ்வாறு ஜீவ மரணப் போராட்டம் நடத்தும் என்பதை படத்தின் பல காட்சிகள் நிசரசனமாகக் காட்டுகின்றன.
காலில் அடிபட்ட மகனைக் காப்பாற்றத் துடிக்கும் அம்மா அப்பா காட்சிகள்  கண்களில் கண்ணீரை வரவழைக்கும்.
கேரளாவிலுள்ள தொழிற்சாலையை தகர்க்க வெடிகுண்டு எடுத்துச் செல்லும் லாரி டிரைவர், மனம் மாறி வெள்ளத்தில் அந்த வெடி குண்டு பெட்டியை வீசி எறிவதும், தன் குழந்தைக்கு வாங்கிச் சென்ற பொம்மையை லாரியில் பயணம் செய்தவர் அந்த டிரைவரின் மகளுக்காக விட்டுச் செல்வதும் நெஞ்சைத் தொடும் காட்சிகள்.
கண்டிப்பாக ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய நல்லதொரு திரைப்படம் 2018 (எவ்ரிஒன் ஈஸ் எ ஹீரோ)
மதிப்பெண் 4.5 /5
Share.

Comments are closed.