![]()

‘ஹிட் லிஸ்ட்’ _ விமர்சனம்
சிறு உயிருக்கு கூட தீமை செய்துவிடக்கூடாது என நினைக்கும் இளைஞன், கொலைகாரனாக மாறுவது ஏன் என்பதை அதிரடியாகச் சொல்லியிருக்கும் படம் ஹிட் லிஸ்ட்.
நாயகன் விஜய் கனிஷ்கா ஐ.டி. துறையில் பணியாற்றுகிறார். அப்பா இல்லாத சூழலில், தனது அம்மா சித்தாரா, தங்கை ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். அவரது தாயும் தங்கையும் திடீரென கடத்தப்படுகிறார்கள்.
அலைபேசியில் விஜய் கனிஷ்காவை தொடர்பு கொள்ளும் முகமூடி மனிதன், “உன் அம்மாவையும் தங்கையையும் விடுவிக்க வேண்டும் என்றால், நான் சொன்னதை எல்லாம் செய்ய வேண்டும்” என்று உத்தரவிடுகிறான்.
வேறு வழியின்றி அதையெல்லாம் – சேவலைக் கொல்வது.. வில்லனை கொல்வது என – செய்கிறார் விஜய் கனிஷ்கா.
அப்பாவி விஜய் கனிஷ்காவை எதற்காக முகமூடி நபர் கொலை செய்யச் சொல்கிறார், முகமூடி மனிதரிடம் சிக்கிய அம்மா, தங்கையை விஜய் கனிஷ்கா மீட்கிறாரா என்பதுதான் கதை.
அறிமுக நாயகன் விஜய் கனிஷ்கா, முதல் படத்திலேயே சேலஞ்சான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சிறு உயிருக்கும் துன்பம் தரக்கூடாது என வள்ளலார் வழியில் வாழ்பவர்.. சூழ்நிலை காரணமாக கொலைகாரனாக மாறுவது.. வில்லனுக்கு பயந்து பயந்து கொலைகளைச் செய்வது.. கதறுவது என சிறப்பாக நடித்து உள்ளார் விஜய். சொல்லப்போனால், தனது நேர்த்தியான நடிப்பு மூலம் முழு படத்தையும் தாங்கி பிடித்திருக்கிறார்.
காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் சரத்குமார், எப்போதும்போல் இயல்பான – கம்பீரமான நடிப்பு. சண்டைக் காட்சிகளிலும் தூள் பறத்துகிறார்.
நாயகன் விஜய் கனிஷ்காவுக்கு அப்பாவாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, சிறிது நேரம் வந்தாலும் தனது நடிப்பால் முத்திரை பதிக்கிறார்.
மருத்துவமனை டீனாக நடித்திருக்கும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன், எப்போதும் போல் தனது ஸ்டைலிஷான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
ஸ்மிருதி வெங்கட், நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் சித்தாரா, தங்கையாக நடித்திருக்கும் அபி நக்ஷத்ரா, ஐஸ்வர்யா தத்தா, அனுபமா குமார், ராமச்சந்திரன் ஆகியோரும் இயல்பான நடிப்பை அளித்து உள்ளனர்.
பாலசரவணன் மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரின் காட்சிகளை அதிகப்படுத்தி இருக்கலாம்.
ஒளிப்பதிவாளர் கே.ராம்சரண் மற்றும் இசையமைப்பாளர் சி.சத்யா ஆகியோரது பணி படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன.
முகமூடி மனிதன் யார், அவன் எதற்காக விஜய் கனிஷ்காவை கொலைகாரனாக பயன்படுத்துகிறார் ஆகிய இரண்டு கேள்விகள் தான் முழு படத்தையும் எதிர்பார்ப்புடன் கொண்டு செல்கின்றன. அதை கிளைமாக்ஸ் வரை சஸ்பென்ஸாக வைத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள் இரட்டை இயக்குநர்கள் சூர்யகதிர் காக்கல்லர் – கே.கார்த்திகேயன்.
த்ரில்லராக மட்டுமின்றி சமூகத்துக்குத் தேவையான செய்தியையும் சொன்ன வகையில் கவர்கிறது ஹிட் லிஸ்ட்.

