![]()

ரெட்ரோ_ விமர்சனம்
தாய் தந்தையை இழந்த சூர்யாவை சிறுவயதிலிருந்தே வளர்த்து வருகிறார் ஜோஜூ ஜார்ஜ்.
குழந்தைப் பருவத்திலிருந்தே சிரிப்பு என்றால் என்னவென்றே தெரியாமல், சிரிக்கத் தெரியாதவனாக வளர்ந்து வாலிபன் ஆகிறார் சூர்யா.
தாதாவாக வலம் வரும் ஜோஜூ ஜார்ஜ் தனது அடியாட்களில் ஒருவராகவே சூர்யாவை கருதுகிறார்.
தான் காதலிக்கும் பூஜா ஹெக்டேவை திருமணம் செய்ய முடிவெடுக்கும் சூர்யா, அதன் பிறகு அடிதடி சண்டைகளை விட்டொழிக்க நினைக்கிறார்.
ஆனால் சூர்யாவின் திருமண தினத்தன்று தங்கமீன் தொடர்பான பிரச்சனையில் ஜோஜூ ஜார்ஜுக்கும் சூர்யாவிற்கும் மோதல் வெடிக்கிறது.
இந்த மோதலில் ஜோஜூ ஜார்ஜின் கையை வெட்டி விடுகிறார் சூர்யா. திருமணம் தடைபட, சிறைக்குச் செல்ல நேரிடுகிறது சூர்யா.
சில வருடங்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே அந்தமானில் இருப்பது தெரியவர, ்ஒரு கடத்தல் கும்பலின் உதவியுடன் சிறையில் இருந்து தப்பி அந்தமான் செல்கிறார் சூர்யா. சிரிக்கவே தெரியாத சூர்யாவுடன் சிரிப்பின் மூலம் நோய்களை குணப்படுத்தும் டாக்டர் ஜெயராமன் இணைந்து அந்தமான் செல்கிறார்.
அந்தமானில் உள்ள மக்களை கொத்தடிமை தொழிலாளர்களாக வைத்து வேலை வாங்குவதுடன் அவர்களுக்குள்ளே சண்டையிட வைத்து அவர்கள் செத்து மடிவதை பார்த்து சந்தோஷப்படும் கொடூர மனம் படைத்த நாசர் அண்ட் கோவுக்கும் சூர்யாவுக்கும் மோதல் வெடிக்கிறது.
இறுதியில் வெல்வது யார்? சூர்யா பூஜா ஹெக்டேவை கண்டுபிடித்தாரா என்பது படத்தின் பின்பகுதி.
சிரிக்கவே தெரியாத சீரியஸ் முகத்துடன் அறிமுகமாகும் சூர்யா மொத்த படத்தையும் தன் தோளில் சுமந்து ஆக்சன் காட்சிகளில் அதிரடி நடிப்பால் நம்மை அசர வைக்கிறார்.
அழகு பதுமையாக வரும் பூஜாவுக்கு அழுத்தமான வேடமும் அமைந்திருப்பதால் நடிப்பிலும் நம் கவனம் ஈர்க்கிறார்.
சிரிப்பு டாக்டராக வரும் ஜெயராம் தன் இயல்பான பாணியில் படத்துக்கு கலகலப்பூட்டுகிறார்.
மலையாளத்திலிருந்து மொழிமாற்றம் செய்யப்பட்டு சமீபத்தில் தமிழுக்கு வந்து பெரும் வெற்றி பெற்ற ‘பணி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான ஜோஜூ ஜார்ஜ், சூர்யாவின் வளர்ப்புத் தந்தை வேடத்தில்அடிபட்ட சிங்கம் போல் கர்ஜித்து கவனம் ஈர்க்கிறார்.
நாசர் பிரகாஷ்ராஜ் ஆகியோருக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தை நிறைவாக செய்திருக்கின்றனர்.
படத்தின் முதல் பிளஸ் பாயிண்ட் ஸ்ரேயா கிருஷ்ணாவின் ஒளிப்பதிவுதான். சூர்யா பூஜா திருமணத்தின் போது வரும் பாடல் காட்சியை ஒரே ஷாட்டில் படம் பிடித்திருப்பது அற்புதம்.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை படத்துக்கு உயிரோட்டமாக அமைந்திருக்கிறது. பாடல்களும் முணுமுணுக்க வைக்கின்றன.
காதல், சென்டிமென்ட், ஆக்ஷன் ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து விறுவிறுப்பான முறையில் திரைக்கதை அமைத்து விருந்து படைத்த இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு தனியாக ஒரு பாராட்டு.
மொத்தத்தில் சூர்யா ரசிகர்களை மட்டும் இன்றி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் பொழுதுபோக்கு படம் மெட்ரோ.
மதிப்பெண் 3.5/5

