![]()

டூரிஸ்ட் பேமிலி _ விமர்சனம்
இலங்கையில் வசிக்கும் சசிகுமார், அங்குள்ள பொருளாதார பிரச்சனைகள் காரணமாக தன் மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் சட்டவிரோதமாக தமிழ்நாட்டுக்கு படகில் வருகிறார்.
சிம்ரனின் அண்ணன் யோகி பாபு, சசிகுமார் குடும்பத்தை சென்னையில் உள்ள இன்ஸ்பெக்டர் பக்ஸ் வீட்டில் வாடகைக்கு குடியமர்த்துகிறார்.
தங்கள் குடும்பம் கேரளாவிலிருந்து வந்திருப்பதாக பொய் சொல்லி சசிகுமார் குடும்பம் அங்கு குடியேறுகிறது.
சசிகுமாரின் மூத்த மகன் மிதுன் ஜெய்சங்கர் என்ன காரணத்தாலோ தன் அப்பாவுடன் முகம் கொடுத்து பேசாதது மட்டுமின்றி அவ்வப்போது கோபப்படுவதுடன் எரிந்தும் விழுவதுமாக இருக்கிறார்.
சசிகுமார் எதிர் வீட்டில் வசிக்கும் எம் எஸ் பாஸ்கரிடம் கார் டிரைவராக சேர்வதுடன் தன் இயல்பான குணத்தால் அந்த காலனியில் உள்ள எல்லா குடும்பங்களிடமும் நன்றாக பழகி நல்ல உறவை வளர்த்துக் கொள்கிறார்.
ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு வெடிகுண்டு சம்பவத்துக்கு சசிகுமார் குடும்பம் காரணமாக இருக்குமோ என்று காவல்துறை சந்தேகப்பட்டு அவரை தேடி சென்னைக்கு வருகிறது.
சசிகுமார் குடும்பம் வசிக்கும் வீட்டையும் கண்டுபிடிக்கிறது காவல்துறை. பிறகு என்ன நடந்தது? மூத்த மகன் சசிகுமாருடன் முகம் கொடுத்து பேசாமல் இருக்கும் காரணம் என்ன என்பதை எல்லாம் இரண்டாம் பகுதி விவரிக்கிறது. எளிமையான கதையை பலமான திரை கதையுடன் அழகாக திரையில் படித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அபிஷன் ஸ்ரீவிந்த்.
சசிகுமாரின் இளைய மகனாக வரும் கமலேஷ் செய்யும் குறும்புத்தனங்கள் ரசிக்க வைக்கின்றன. படத்தில் ஆங்காங்கே இழையோடும் நகைச்சுவைக்கு இந்த சிறுவனின் சேட்டைகளே காரணம்.
ஆனால் ஒரு காட்சியில் உயிரோடு இருக்கும் அப்பா சசிகுமார் படத்துக்கு மாலை போட வேண்டும் என்று சொல்வது மட்டும் … சாரி…. கொஞ்சம் ஓவர்தான். காலனயில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பமும் சசிகுமார் குடும்பத்துடன் எப்படி நெருக்கமாகின்றன என்பது அழகான காட்சிகள் மூலம் விளக்கப்படுகிறது.
யோகி பாபு சசிகுமார் குடும்பத்திற்கு போலி ஆதார் அட்டைகள் தயாரித்து தரும் போது “படம் அழகாக இருக்கிறது என்று பார்க்கிறாயா? இதுபோலி அதனால் அப்படித்தான் இருக்கும்” என்று சொல்லுவது அட்டகாசமான நகைச்சுவை.
சமீபகாலம் வரை கதாநாயகியாகவும் கவர்ச்சி வேடங்களிலும் நடித்த சிம்ரன் வளர்ந்த இரண்டு மகன்களுக்கு அம்மாவாக நடித்திருப்பது இயல்பாக பொருந்தி போகிறது. கதையையும் காட்சிகளையும் தொந்தரவு செய்யாத பாடல்களும் ஷான் ரோல்டனின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு அழகு ஊட்டுகிறது. மொத்தத்தில் ஃபேமிலியுடன் பார்த்து மகிழக்கூடிய படம் டூரிஸ்ட் ஃபேமிலி.
மதிப்பெண் 3.5/5

