Wednesday, September 9

ஆகக்கடவன_ விமர்சனம்

Loading

2009ஆம் ஆண்டு வெளிவந்த ‘The hangover’ என்ற ஆங்கில படம் பெண்களே நடிக்காமல் முழுக்க முழுக்க ஆண்கள் நடித்து வெளியானது.

2010 முதல் 2014 வரை ஸ்ட்ரீம் ஆன  ‘தி எக்ஸ்பென்டபிள்ஸ் ‘என்ற வெப் சீரியஸிலும் பெண் கேரக்டரே இல்லாமல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்திருந்தனர் .

இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான ‘ஆகக் கடவன’  தமிழ் படம் இதே போல் முழுக்க முழுக்க ஆண்களே நடித்து வெளியான படம் என்ற சிறப்புக்குரியதாகும்

வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்து மருந்தகம் ஒன்றில் வேலை பார்க்கும் மூன்று இளைஞர்கள் நெருங்கிய நண்பர்களாகின்றனர்.

சொந்தமாக மருந்தகம் ஒன்றை நடத்த வேண்டும் என்று ஆசைப்படும் மூவருக்கும் தங்கள் முதலாளியே தன் சொந்த தேவைக்காக அந்த மருந்தகத்தை விற்பதற்கு தயாராக இருக்கிறார் என்று தெரிய வருகிறது.

எனவே மூவரும் கஷ்டப்பட்டு தங்களுக்கு தேவையான பணத்தை புரட்டித் தயாராக வைத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் எதிர்பாராமல் அந்தப் பணம் திருட்டு போகிறது.
எனவே அந்தப் பணத்தை மீண்டும் புரட்டுவதற்காக ஊருக்கு செல்கின்றனர்.

முதலில் இரண்டு நண்பர்கள் பைக்கில் புறப்பட்டுச் செல்ல,  மூன்றாவது நண்பர் பின்னர் வந்து இணைந்து கொள்வதாக ஏற்பாடு.

ஊருக்கு செல்லும் வழியில் திடீரென பைக் பஞ்சர் ஆக, அருகில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள கடைக்கு பஞ்சர் போட செல்கின்றனர்.

அங்கிருக்கும் ‘நிழலான’  மூன்று ஆசாமிகள் பஞ்சர் போடுவதை தாமதப்படுத்திக் கொண்டே, சந்தேகத்திற்கிடமான வகையில் சில காரியங்களை தொடர்ந்து செய்கின்றனர்.

ஒரு வழியாக பஞ்சர் போட்டுக் கொடுத்ததும் வண்டியை எடுத்துக் கொண்டு சென்றால், சற்று தூரத்திலேயே பைக் நின்று விடுகிறது.காரணம் பெட்ரோல் இல்லை.

பெட்ரோல் திருட்டு குறித்து விசாரிக்க பஞ்சர் கடைக்கு வந்தால், சார்ஜ் போடப்பட்ட மொபைல் போனின் பேட்டரியும் திருடு போகிறது.

ஒரு கட்டத்தில் பஞ்சர் கடையில் உள்ள மூன்று தவறான ஆசாமிகளிடம் தாங்கள் இருவரும் ஏடாகூடமாக சிக்கிக் கொண்டிருப்பது நண்பர்களுக்கு புரிய வருகிறது.

இந்த சூழலில் நண்பர்கள் இருவரையும் தேடி வந்த மூன்றாவது நபரும் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறார்.

மூவரும் அந்தக் கயவர்களிடமிருந்து தப்பித்தார்களா இல்லையா என்பது படத்தின் பிற்பகுதி.

நண்பர்களாக வரும் மூவரும் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தாலும், ஆதியாக வரும் ஆதிரன் சுரேஷ் கவனம் ஈர்க்கிறார்.

“காரண காரியம் இன்றி இந்த உலகத்தில் எதுவும் நடப்பதில்லை…” என்று பிரபஞ்ச விதி குறித்து ஆதிரன் சுரேஷ் பேசும் வசனங்கள்தான் அவர்பால் கவனத்தை ஈர்க்கிறது.

ஒட்டுமொத்த படத்துக்கும் ஆன்மாவாக அமைந்திருப்பது இந்த வசனம்தான்.

தரமான படத்தை உருவாக்குவதற்கு பெரிய பட்ஜெட்டோ, நட்சத்திர நடிகர்களோ அவசியமில்லை என்பதை இந்தப் படத்தின் மூலம் நிரூபித்திருக்கும் இயக்குனர் தர்மா பாராட்டுக்குரியவர்.

லியோ வி ராஜாவின் ஒளிப்பதிவும், சாந்தன் அன்பழகனின் பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

லட்சக்கணக்கில் பணம் இருக்கும் போது இரட்டிப்பு கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமல்லவா?
அப்படி இருக்கையில் வீட்டை பூட்டாமல் போனதால் அந்த பணம் களவு போய்விட்டது என்று சொல்லும் காட்சிதான் ஏற்றுக் கொள்ள முடியாதது.

அஸ்திவாரம் போல் அமைந்து கதையை கட்டமைத்திருக்கும் இந்த காட்சியில் இன்னும் கவனமாக இருந்திருக்க வேண்டாமா?

ஆங்கில சப்டைட்டலுடன் சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப தகுதியான சஸ்பென்ஸ் திரில்லர் படம் ஆகக் கடவன என்றால் மிகையாகாது.

மதிப்பெண் 4/5