![]()
ஆட்டி _ விமர்சனம்
கதைக்களம்
இயற்கை எழில் கொஞ்சும் ஓர் அழகான மலை கிராமம். அங்கே வாழும் மக்களுக்கு இயற்கையின் வளம் இருந்தாலும், பிள்ளைகளின் கல்விக்கு மட்டும் பெரும் பஞ்சம். இந்த சூழலில், தானாகவே படித்து அறிவை வளர்த்துக் கொண்ட கிராமத்துப் பெண் அழகி, அங்குள்ள சிறுவர்களுக்கு பாடம் சொல்லித் தருகிறாள்.
அரசு பள்ளி இருந்தாலும், அங்கே ஆசிரியர்கள் யாரும் நிலைத்து நிற்பதில்லை. இந்த நிலையில், ஒரு புதிய ஆசிரியரும், அதே பகுதி காவல் நிலையத்திற்கு ஒரு புதிய இன்ஸ்பெக்டரும் ஒரே சமயத்தில் வருகிறார்கள்.
அவர்களின் வருகைக்குப் பின், அந்த அமைதியான கிராமத்தில் அடுத்தடுத்து மர்ம சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அந்த மர்ம முடிச்சுகள் எப்படி அவிழ்ந்தன, கிராமத்து பிள்ளைகளின் கல்வி என்னவானது என்பதை விறுவிறுப்பாகச் சொல்கிறது மீதிக்கதை.
பிளஸ் பாயிண்ட்ஸ்
அபி நக்ஷத்ரா: படத்தின் நாயகியாக வரும் அபி, கதாபாத்திரத்தின் பெயருக்கேற்ப அழகாக மட்டுமின்றி, அசாத்தியமான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார். கிராமத்து குழந்தைகளுக்கு எப்படியாவது கல்வியைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற துடிப்பிலும், புதிய ஆசிரியரை எதிர்கொள்ளும் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார்.
பெண்ணுரிமை முழக்கம்: பெண்களின் பாதுகாப்பு மற்றும் கல்விக்கு முக்கியத்துவம் தரும் அதே வேளையில், வரலாற்றுக் காலத்திலிருந்தே தமிழ் மரபில் பெண்கள் போர்க்கலை, கல்வி ஆகியவற்றில் சிறந்து விளங்கினார்கள் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருப்பது சிறப்பு.
ஒளிப்பதிவு மற்றும் இசை: சிபி சதாசிவத்தின் கேமரா, மலை கிராமத்தின் அழகைக் கண்முன்னே நிறுத்துகிறது. சண்டைக் காட்சிகளையும் நேர்த்தியாகப் படம் பிடித்துள்ளார். தீசனின் பின்னணி இசை, படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளுக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
மைனஸ் பாயிண்ட்ஸ்
சில இடங்களில் நாடகத்தனம் எட்டிப்பார்ப்பதையும், கதையின் மெதுவான நகர்வையும் தவிர்த்திருக்கலாம்.
போக்குவரத்து மின்சாரம் என்று அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத, எழுத படிக்க தெரியாதவர்கள் நிறைந்த மலை கிராமத்தில் போஸ்ட் ஆபீஸ் எதற்கு அவர்கள் யாருக்கு கடிதம் எழுதுகிறார்கள்? அவர்களுக்கு யார் கடிதம் அனுப்புகிறார்கள்? சர்வ சாதாரணமாக தந்தி வருவது எப்படி என்றெல்லாம் கேள்விகள் எழத்தான் செய்கின்றன.
காவல் அதிகாரியாக வரும் படத்தின் தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன், ஏற்று நடித்த பாத்திரத்தை குறைவின்றி நிறைவாகச் செய்திருக்கிறார்.
கான்ஸ்டபிளாக வரும் காதல் சுகுமார் மற்றும் போஸ்ட்மேனாக வரும் சவுந்தர் ஆகியோரின் காமெடி காட்சிகள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை.
சில சுணக்கங்கள் இருந்தாலும், மலை கிராம மக்களின் வாழ்வியலையும், பெண் உரிமைகளையும் எதார்த்தமாகப் பேசியிருக்கிறார் இயக்குனர் தி. கிட்டு. வணிக ரீதியான சமரசங்கள் இல்லாத, தீவிரமான சமூகக் கருத்துக்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு இந்த ‘ஆட்டி’ நிச்சயம் ஒரு நல்ல அனுபவம்!


