Friday, May 1

ஏஸ் _ விமர்சனம்

Loading

மலேசியாவில் வேலை பார்க்கும் யோகி பாபு, அங்கு வரும் விஜய் சேதுபதியை தனது உறவினர் என்று தவறாக நினைத்து அடைக்கலம் கொடுக்கிறார்.

ஹோட்டல் ஒன்றில் வேலைக்கு சேரும் விஜய் சேதுபதி,  எதிர் வீட்டில் வசிக்கும் காவல்துறை அதிகாரி பப்லுவின் மகளான ருக்மணியை காதலிக்கிறார்.

காதலிக்கு விலை உயர்ந்த ஆடை ஒன்றை பரிசளிப்பதற்காக வட்டிக்கு கடன் வாங்க செல்கிறார்.

அப்போது அங்கு நடக்கும் பெரிய அளவிலான சூதாட்டத்தில் பங்கு கொண்டு ஆரம்பத்தில் ஜெயிக்கிறார்.

பின்னர் பணம் அனைத்தையும் வில்லன் அவிநாசிடம் இழந்து வசமாக சிக்கிக் கொள்கிறார்.

அதே சமயம் யோகி பாபுவின் தோழி வாங்கிய கடனை அடைக்க, யோகி பாபுவுக்கும் பெரிய தொகை  தேவைப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்காக வங்கிப் பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார் விஜய் சேதுபதி.

தனி ஒருவனாகவே சென்று வங்கிப் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு,  யோகி பாபு தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் தப்பி வந்து விடுகிறார்.  ஏற்கனவே வில்லன் அவிநாசிடம் இருந்து திருடிய துப்பாக்கியை கொள்ளை நடந்த இடத்தில் வேண்டுமென்றே போட்டு விடுகிறார் விஜய் சேதுபதி.

இதனால் அவினாஷ்தான் வங்கிக் கொள்ளையை நடத்தியது என்று நினைத்து போலீஸ் அவரை கைது செய்கிறது.

விஜய் சேதுபதிதான் வங்கி பணத்தை கொள்ளை அடித்தார் என்பது வில்லன் அவிநாசிக்கும்,  போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரித்திவிராஜ் பப்லுவுக்கும் தெரிய வருகிறது.

கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தங்களுக்கே தர வேண்டுமென இருவரும் விஜய் சேதுபதியை மிரட்டுகின்றனர்.

இதற்கிடையில் லாட்டரியில் மிகப்பெரிய தொகை ஒன்று விஜய் சேதுபதிக்கு பரிசாக கிடைக்கிறது.

 கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை வில்லன்களுக்குத் தராமல் எப்படி விஜய் சேதுபதி சமாளிக்கிறார்? காவல்துறையிடம் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் திரையில் சொல்கிறார் இயக்குனர் ஆறுமுக குமார்.

ஆக்சன் காட்சிகளில் அதிரடி காட்டும் விஜய் சேதுபதி, நகைச்சுவை காட்சிகளிலும் இயல்பாக நடித்து ரசிக்க வைக்கிறார்.

பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண்ணை போல், ஆர்ப்பாட்டம் இல்லாத எளிய அழகு நாயகி ருக்மணி வசனத்திற்கு. இயல்பான அவரது முகத்தோற்றம் பரிதாபத்தை எதிர்பார்க்கும் அவரது பாத்திரத்துக்கு பலம் சேர்க்கிறது.

சமீப காலமாக யோகி பாபு கதாநாயகனாக நடித்த வெளிவந்த படங்களில்கூட இல்லாத அளவுக்கு இந்தப் படத்தில் படம் முழுவதும் விஜய் சேதுபதியுடன் வந்து நகைச்சுவையில் அதகளம் செய்கிறார்.

வட்டிப் பணம் வசூலிப்பதிலேயே வன்முறையை காட்டும் வில்லன் அவினாஷ் கவனம் ஈர்க்கிறார்.

படம் முழுவதும் மலேசியாவிலேயே படமாக்கப்பட்டு இருப்பதால்,  நாம் சில நாட்கள் மலேசியாவில் தங்கி சுற்றிப் பார்ப்பது போன்ற உணர்வைத் தருகிறது ஏஸ் திரைப்படம். ஒளிப்பதிவாளர் கரண் பி. ராவத்துக்கு தனி பாராட்டு.

தனிமனிதனாக விஜய் சேதுபதி வங்கிப் பணத்தை நடுரோட்டில் கொள்ளை அடிப்பது மட்டும்தான் நம்ப முடியாத காட்சி.

மெலிதான நகைச்சுவை இழையோடும் நல்ல பொழுதுபோக்கு சித்திரமாக மலர்ந்திருக்கும் ஏஸ் படத்தை தாராளமாக கண்டு ரசிக்கலாம்.

மதிப்பெண் 3.5/5